full screen background image
Search
Sunday 21 June 2026
  • :
  • :

‘பாலன்’ திரைப்பட விமர்சனம்

‘பாலன்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Cast:
• Farzana Palathingal
• Adhisheshan KR
• Zinan
• Jean Paul Lal
• Girish A.D.

Crew:
• Director – Chidambaram
• Writer – Jithu Madhavan
• Producers – Venkat K Narayana, Shailaja Desai Fenn
• Cinematography – Shyju Khalid
• Music – Sushin Shyam
• Editor – Vivek Harshan
• Production Designer – Ajayan Challissery

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருக்கும் படம் ‘பாலன்’. ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் கதையை எழுதியிருக்கும் இந்த படம், ஒரு தாய் மகனின் பாசம், வலி, பயம் மற்றும் அவர்களது வாழ்க்கை போராட்டத்தை உணர்வுப்பூர்வமான த்ரில்லராக சொல்லியிருக்கிறது.

கர்ப்பிணியாக சிறையில் இருக்கும் ஃபர்சானா பலதிங்கல் அங்கேயே குழந்தை பெற்றெடுக்கிறார். சில வருடங்களுக்கு பிறகு மகனுடன் சிறையிலிருந்து வெளியே வரும் அவர், கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களால் யாரையும் நம்பாமல், பல்வேறு பெயர்கள் மற்றும் அடையாளங்களில் இடம் மாறி மாறி வாழ்கிறார். ஒரு கட்டத்தில் வயதான மூதாட்டி ஒருவரை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்க, அங்கேயே நிரந்தரமாக வாழ முடிவு செய்து மகனை பள்ளியிலும் சேர்க்கிறார். ஆனால் எதிர்பாராத ஒரு சம்பவத்தால் தாய் மகன் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா, அந்த பெண்ணின் கடந்த காலம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் ஆரம்பத்திலிருந்தே யார் இவர்கள், ஏன் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வியை உருவாக்கி, அதற்கான பதிலை மெதுவாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். அதிக வசனங்கள் இல்லாமல், அமைதியான காட்சிகளின் மூலமாகவே கதாபாத்திரங்களின் வலியையும் பயத்தையும் உணர வைத்திருக்கிறார் இயக்குநர் சிதம்பரம்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல், தனது கண்கள் மற்றும் உடல்மொழியின் மூலமாகவே ஒரு தாயின் வலி, அச்சம், குற்ற உணர்வு, மகன் மீதான பாசம் என அனைத்து உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே ஆர் தனது வயதுக்கு மீறிய நடிப்பால் ஆச்சரியப்பட வைக்கிறார். வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் முகமது ஜினான், காவலராக நடித்திருக்கும் ஜீன் பால் லால், சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிரிஷ் ஏ டி உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், எந்த நட்சத்திர பிம்பமும் இல்லாமல் கதைக்கு தேவையான அளவில் வந்து தனது இருப்பை பதிவு செய்கிறார். வயதான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டோலி ஜூனின் நடிப்பும் தனியாக கவனம் ஈர்க்கிறது.

ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு, கதையின் அமைதியையும் தனிமையையும் அழகாக பதிவு செய்திருக்கிறது. சுஷின் ஷாமின் பின்னணி இசை, படத்தின் உணர்வுகளையும் த்ரில்லர் தன்மையையும் மேலும் உயர்த்துகிறது. விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு, மெதுவாக நகரும் கதையை சுவாரஸ்யமாக மாற்றி பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.

ஒரு எளிமையான கதையை, அதிக சத்தமோ உணர்ச்சி வசனங்களோ இல்லாமல், இயல்பாகவும் யூகிக்க முடியாத திருப்பங்களுடனும் சொல்லியிருக்கும் ஜித்து மாதவன் மற்றும் இயக்குநர் சிதம்பரம் பாராட்டுக்குரியவர்கள். சில கேள்விகளுக்கு முழுமையான பதில் கிடைக்காதது மற்றும் இரண்டாம் பாதியில் சில இடங்களில் வேகம் குறைவது போன்ற சிறிய குறைகள் இருந்தாலும், அவை படத்தின் தாக்கத்தை பெரிதாக பாதிக்கவில்லை.

மொத்தத்தில் ‘பாலன்’ உணர்வுகள் நிறைந்த படங்களை விரும்புபவர்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *