‘The Road’ Movie Rating: 3/5
நடிகை த்ரிஷா, டான்சிங் ரோஸ் ஷபீர், எம்.எஸ்.பாஸ்கர், மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி , செம்மலர் அன்னம் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘தி ரோடு’
அருண் வசீகரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார். ஹீரோயினை முன்னிலைப்படுத்திய கதையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாகக் கலக்கி வரும் த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள தி ரோடு படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?
பாதிக்கப்பட்டவர்களின் அமைதி தான் அடுத்தடுத்த தவறுகளுக்கு காரணம், அவர்கள் அமைதியாக போகக் கூடாது எனும் படத்தின் வசனத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தி ரோடு’
அழகான குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வரும் த்ரிஷா, சாலை விபத்தில் தன் கணவர், குழந்தைகளை இழக்கிறார். ஆனால் தன் கணவர், குழந்தைகளை த்ரிஷா இழந்த NH 44 சாலையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர் சாலை விபத்துகள் நடப்பது த்ரிஷாவுக்கு தெரிய வருகிறது. மறுபுறம் கல்லூரி ப்ரொஃபசராக வரும் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் தன் கல்லூரி மாணவி ஒருவர் தன் மீது சுமத்தும் அபாண்டமான பழியால் நற்பெயர், மதிப்பு, உறவுகள் என எல்லாவற்றையும் இழக்கிறார்.
இழப்புகளுடன் நிர்கதியாக நிற்கும் இவர்கள் இருவரையும் NH 44 எனும் சாலை எப்படி ஒன்றிணைக்கிறது, த்ரிஷா குடும்பத்தினருக்கு உண்மையில் நேர்ந்தது என்ன, தொடர் விபத்துகளுக்கு காரணம் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான விடையை த்ரில்லர் கதைக்களத்தில் சுவாரஸ்யமாக தர முயற்சித்துள்ளது ‘தி ரோடு’.
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் மோடில் கணவர் குழந்தைகளின் மரணத்தின் பின்னணியை ஆராயும் த்ரிஷாவுக்கு கனமான பாத்திரம். ஆக்ரோஷம் தெறிக்க விபத்துகளுக்கான காரணம் தேடி போராடும் த்ரிஷா, நம்மை படத்துடன் ஒன்ற வைத்து இறுதிவரை கூட்டிச் செல்கிறார். இழப்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நடித்திருக்கலாம்.
மறுபுறம் அனைத்தையும் இழந்து பணம் இல்லாமல் நிர்கதியாக நிற்கும் டான்சிங் ரோஸ் ஷபீருக்கு இது மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம். ஆக்ரோஷம், கோபம், ஏமாற்றம் என அனைத்து உணர்ச்சிகளையும் தன் நடிப்பில் வெளிப்படுத்தி படத்துக்கு மற்றுமொரு தூணாக விளங்குகிறார்.
பிள்ளைக்காக தன் சக்திக்கு உள்பட்ட அனைத்தையும் செய்யும் வேலராமமூர்த்தி ஈர்க்கிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், த்ரிஷாவின் தோழியாக வரும் மியா ஜார்ஜ் ஆகியோர் கதாபாத்திரத்துக்கு தேவையானதை செய்துள்ளனர். கோலிவுட் சினிமாவில் இறப்பதற்கென்றே வரும் கதாபாத்திரத்துக்கு சந்தோஷ் பிரதாப் புதுவரவு.
முதல் பாதியும், இரண்டாம் பாதியும்:
முதல்பாதி விறுவிறுவென பயணித்து, பக்கா த்ரில்லர் கதை அனுபவத்தை தந்து எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அதற்கு நேர்மாறாக திக்கற்று செல்லும் வாகனமாக பயணிக்கிறது.
தொடர் சாலை விபத்துகள் நிகழும் இடத்தை பொதுமக்கள் கவனித்த அளவுக்கு கூட போலீசார் கவனிக்கவில்லை. பல லாஜிக் மீறல்களுடன் இரண்டாம் பாதியின் நீளமும் வேகத்தடையாக மாறுகிறது. இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட்கள் நிறைந்திருந்தாலும் அவை சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்கு பதிலாக படம் எப்போது முடியும் எனும் கேள்வியையுமே எழவைக்கிறது.
வில்லனின் பின்னணி, காரணங்கள் ஆகியவை அழுத்தமாக முன்வைக்கப்படுவதால், ஹீரோயினைக் காட்டிலும் அவருக்காக ஒருபுறம் மனம் பரிதாபப்படவே செய்வது மைனஸ். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்துக்கு பெரும் ப்ளஸ்! அலுப்பு தட்டும் இடங்களிலும் நம்மை படத்துடன் ஒன்ற வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் சாம் சி.எஸ்.
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் எனக் கூறப்பட்ட்டாலும் கதையில் நம்பகத்தன்மை குறைவாகவும், மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட உணர்வையும் படம் தருகிறது. ‘தி ரோடு’ இன்னும் சிறப்பான சாலையாக அமைந்திருக்கலாம்!