‘பிரின்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
’டாக்டர்’, ‘டான்’ என இரண்டு ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஹாட்ரிக் வெற்றி என்ற எதிர்பார்ப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகி இருக்கிறது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?
கடலூர் தேவனக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் அன்பு. அதே பள்ளியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெஸிகா ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர, அவரைப் பார்த்ததும் காதல் கொள்கிறார் அன்பு. சாதி, மதம் கடந்துதான் காதலிக்க வேண்டும் என மகனிடம் கடிதம் எழுதி உறுதி வாங்கிக்கொள்ளும் அளவுக்கு முற்போக்குவாதியான அதேசமயம் பிடிவாதம் கொண்ட தந்தை உலகநாதனாக சத்யராஜ். தந்தையின் ஆசைக்கேற்றவாறு ஜெஸிகா காதலியாக அமைந்தாலும் குறுக்கே இடையூறாக வந்து நிற்கிறது தந்தையின் தேசபக்தி. அன்புவின் அப்பாவிற்கு பிரிட்டிஷ்காரர்கள் என்றால் எப்படி தகராறோ அதேபோல, ஜெஸிகாவின் அப்பாவிற்கு இந்தியர்கள் என்றால் ஆகாது. இந்த இரண்டு தரப்புகளையும் சமாளித்து இந்தக் காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்கிறது என்பதை நகைச்சுவை பாணியில் கொண்டு சேர்த்திருப்பதுதான் ‘ப்ரின்ஸ்’ படத்தின் கதை.
‘டாக்டர்’ படத்தில் சீரியஸ் முகம், ‘டான்’ படத்தில் வழக்கமான கமர்ஷியல் ஹீரோ என்றால் ‘ப்ரின்ஸ்’ படத்தில் தனியொருவராக மொத்தக் கதையும் தன்னுடைய தேர்ந்த நடிப்பால் நிறைக்கிறார் சிவகார்த்திகேயன். காமெடி கவுன்டர்கள், கதாநாயகியிடம் பல்பு வாங்குவது, சிங்கிள் டேக் நடனம் என படத்திற்குப் படம் மிளிர்கிறார். படத்தின் கதாநாயகி ஜெஸிகாவாக மரியா ரியாபோஷாப்கா. தமிழில் முதல் படம் என்ற தடுமாற்றம் நடிப்பில் ஆங்காங்கே தெரிந்தாலும் போகப்போக… கதையின் ஓட்டத்தில் ஒன்றிப் போயிருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் படக் கதாநாயகி டெம்ப்ளேட்டுக்குள் இல்லாமல், அறிமுகத்திலேயே படம் முழுவதும் இருக்கும்படியான, நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரம் என்பது அவருக்கு ப்ளஸ்.
அப்பாவாக வரும் சத்யராஜ் நடிப்பில் வழக்கம் போல அசத்தியுள்ளார். தனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று கூறி கேலிக்குள்ளாக்கப்படும் போது அதற்கான ரியாக்ஷன்களை கொடுத்து அசாதாரணமாக நடித்துள்ளார். பிரேம்ஜி, சதீஷ், ராகுல் ஆகியோர் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
இதில் எங்கே கதை இருக்கிறது என்று எண்ண வைக்கும் ஒரு கதையை காமெடி ஜானரில் ரசிக்கும் படியாக எடுத்து சென்றுள்ளார் இயக்குனர் அனுதீப். பல காட்சிகளில் சிரிக்க வைத்தாலும் ஒரு சில காட்சிகள் வாட்ஸ்அப் குரூப்பில் வரும் காமெடிகளை கோர்த்து காட்சிகளாக்கப்பட்ட உணர்வினை நமக்கு ஏற்படுத்துகிறது.
தமன் இசையில் ஜெசிகா, பிம்பிலிக்கி பிலாப்பி போன்ற பாடல்கள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. இருந்தாலும் இசையில் சற்று தெலுங்கு சாயல் அடிக்கத்தான் செய்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் ‘ப்ரின்ஸ்’ – கொஞ்சம் காதல் கொஞ்சம் காமெடி