full screen background image
Search
Monday 24 March 2025
  • :
  • :

‘சர்தார்’ திரைப்பட விமர்சனம்

சர்தார் திரைப்பட ரேட்டிங்: 3.5/5

கார்த்தி நடிப்பில் இந்த வருடம் ஏற்கனவே வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த வருட தீபாவளி வெளியீடாக சர்தார் படம் வெளியாகி உள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், அவருடன் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ்க்காந்த், ரித்விக் என பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராணுவ உளவாளியாக இருக்கும் அப்பா கார்த்திக் தேசத்துரோகி என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார், இதனால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து விடுகிறது. பின்பு பையன் கார்த்தியை அவர் சித்தப்பா முனிஸ்காந்த் வளர்த்து வருகிறார். பின்னாலில் கார்த்தியும் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். சமூக ஊடகங்களில் பிரபலமாக துடிக்கும் கார்த்திக்கு அவரது புகழை இன்னும் வளர செய்யும் விதமாக ஒரு கேஸ் கிடைக்கிறது, இறுதியில் அந்த கேஸ் அவரது அப்பா சர்தார் இடம் கொண்டு செல்கிறது. உண்மையிலேயே சர்தார் கார்த்திக் செய்த தவறுகள் என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார் என்பதே சர்தார் படத்தின் கதை.

இயக்குனர் சொல்ல நினைத்ததை இரு வேடங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கார்த்தி நிரூபித்துள்ளார். படத்தின் விறுவிறுப்போடே கார்த்தியின் நடிப்பு பயணிப்பதால் பாராட்டும்படி அமைந்துள்ளது. கார்த்தியின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு சிறந்த படமாக சர்தார் இடம்பெற்றிருக்கிறது.

ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டும் கதாப்பாத்திரமாக கார்த்தி அசத்தியிருக்கிறார். வழக்கறிஞராக வரும் ராஷிகண்ணா அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் வரும் லைலா அவரின் பணியை சரியாக செய்து முடித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கும் தன் குழந்தையின் நிலையை உலகறிய செய்ய போராடும் இடங்களில் பாராட்டை பெறுகிறார். தந்தை கார்த்தியின் மனைவியாக வரும் ரஜிஷா விஜயன் அவருக்கு கொடுத்த வேலையை காப்பாற்றியுள்ளார். மேலும் மாஸ்டர் ரித்விக், அவரின் குழந்தை நடிப்பை வெளிபடுத்தி பாராட்டை பெறுகிறார்.

கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தி விறுவிறுப்பை கூட்டி அனைவரின் பாராட்டுக்களையும் பெறுகிறார் இயக்குனர் பி.எஸ். மித்ரன். படத்தின் திரைக்கதை கூடுதல் பலமாக அமைந்து சுவாரசியப்படுத்துகிறது. சமூக பிரச்சனையை கையில் எடுத்து அதனை கமர்ஷியலாக சொல்ல நினைத்திருக்கிறார். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் சர்தார் படத்தில் உள்ளது. முதல் பாதியில் திரைக்கதையின் மூலம் கட்டப்படும் முடிச்சி பார்வையாளர்களுக்கு இரண்டாம் பாதியில் கவனம் செலுத்த உதவியிருக்கிறது.

இயக்குனர் காட்சிப்படுத்த நினைத்ததை ஒளிப்பதிவின் மூலம் அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். படத்தில் இவரின் உழைப்பு சிறப்பாக இடம்பெற்றிருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

மொத்ததில் சர்தார் – மிரட்டல்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *