full screen background image
Search
Friday 17 January 2025
  • :
  • :

இதுவரை நடிகர் சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான்.

இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்.

Uncle, there cant be a better tribute to the actor Sivaji Ganesan and kalaignar put together. For generation like mine who did not have a chance to see Sivaji Ganesan in person, this speech helped us to see him through you. Tears welled up when emotional dialogues were delivered, ‘pasamalar’ being my favourite. Thank you for choosing this topic as this speech cannot be addressed by none other in the industry nor Sivaji’s family. This is going to get a great reception when this speech reaches every household through television.
-Aravind Bharathi

Amudhavan Melkio

சிவாஜிகணேசனின் அருமை பெருமைகளை தமிழகத்தின் ஒரு பெரிய பேச்சாளர் பேசிவிட்டுப் போய்விடலாம். எழுத்தாளர்கள் நூலாக எழுதிவிடலாம். ஆனால் சிவாஜி உச்சரித்துக்காட்டிய வசனங்களை அவர்களால் பேசிக்காட்டவோ, எழுதிக்காட்டவோ முடியாது. அப்படியே முடிந்தாலும் அவை சளசளவென்று ஓடும் ஆறுபோல உயர்வு தாழ்வு இல்லாமல் ஒரே சுருதியில் சென்றுவிடும்.

ஆனால் சிவாஜிக்கே உரிய ஏற்றத்தாழ்வுகளுடன், எந்த இடத்தில் குரலை உயர்த்தவேண்டும், எந்த இடத்தில் தாழ்த்த வேண்டும் எந்த வார்த்தைக்கு அல்லது வரிக்கு முக்கியத்துவம் கொடுத்து அழுத்தி உச்சரிக்க வேண்டும் என்பதுபோன்ற தொழில்நுட்ப ரகசியங்கள், நேர்த்தி – எல்லாம் பொருந்திய ஜீவனுடனும் அந்த வரிகளை உச்சரிக்க சிவகுமார் அல்லாமல் இன்னொரு ஆத்மாவால் முடியாது.

சாத்தியமில்லை.

சிவாஜியும் கலைஞரும் நினைவாற்றலில் வல்லவர்கள் என்று சொல்வார்கள்.
கலைஞர் என்றோ சந்தித்தவரை கவனம் வைத்துக்கொண்டு தேதி ஊர் பெயருடன் நினைவு கூர்வார்; என்றைக்கோ நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வசனங்களை அப்படியே சொல்லுவார் –அந்த அளவிற்கு நினைவாற்றல் உடையவர் என்று சொல்வார்கள்.

சிவாஜி அதற்கும் ஒரு படி மேலே.

பத்து நிமிடம் வருகின்ற வசனங்களை எழுதிக்கொடுத்தால் அதனை ஒருவரைவிட்டுப் படிக்கச்சொல்லிக் கேட்பார். கண்களை மூடிக்கொண்டு கேட்பவர் படிப்பவர் படித்து முடித்ததும் “எங்கே இன்னொரு தரம் படிச்சுக்காட்டு” என்பார். மற்றொரு முறை படித்துக் காட்டியதும் முடிந்தது விவகாரம்.

“கமான் டேக்” என்று டேக்கிற்குத் தயாராகிவிடுவார்.

நடுவில் நிறுத்தச் சொல்வது, துண்டு துண்டாக ஷாட் எடுப்பது என்பதெல்லாம் கிடையாது. இரண்டு மூன்று டேக்குகள் எல்லாம் கிடையாது. ஒரேயொரு டேக்தான்.

எழுத்தாளரின் படைப்பாற்றல் அத்தனையும் அந்த மகாநடிகனின் தலையில் ஏற்றப்பட்டு உச்சரிப்புகளாக வந்துவிழும்.

இது அத்தோடு முடிந்துவிடுவதில்லை. முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு யாராவது அதனைக் குறிப்பிட்டுப் பேசும்போது ‘அது கெடக்கு கழுதை. அதையெல்லாம் நீ ஏன் அநாவசியமா ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கே’ – என்று விளையாட்டாக கலாய்த்துவிட்டு அந்த வசனங்களை அப்படியே பேசிக்காட்டுவார் என்பதுதான் ஆச்சரியம்.

அம்மாதிரி மனிதரைப் பற்றி விவரிக்கும்போது அவர்போன்ற நினைவாற்றலுடன் கூடிய இன்னொரு மனிதன்தான் அவரைப் பிரதிபலித்துக் காட்ட முடியும்.

அப்படிக் காட்டக்கூடிய இன்னொரு மனிதர் சிவகுமார்!

சிவகுமாருக்கு சிவாஜியின் வசனங்கள் மட்டுமல்ல இளங்கோவன், அண்ணா, கலைஞர், ஸ்ரீதர், ஏ.பி.என், சக்தி கிருஷ்ணசாமி, ஆரூர் தாஸ், கேஎஸ்ஜி, கே.பாலச்சந்தர் என்று எல்லாருடைய வசனங்களும் அவர் மூளையில் பதிந்துள்ளன.

திரையுலகின் எந்தப் பக்கத்தை, எந்தப் பிரிவை வேண்டுமென்றாலும் கிளிக் செய்யலாம். மறுநொடியே அந்தப் பக்கத்துக்கான அத்தனைத் தகவல்களையும், தரவுகளையும் அப்படியே தரக்கூடிய அபூர்வ மூளை அவருடையது.

அவர் மூளையில் என்னென்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய நாசா நிறுவனம் ஒரு ஆய்வையே தொடங்கலாம்.

அப்படிப்பட்ட மூளை சிவகுமாருடையது.

அவரை அணுகி அந்தத் தகவல்களின் ஒரு பிரிவை ஆச்சரியமூட்டும் விதத்தில் வெளிக்கொண்டுவரும் அற்புதப் பணியைச் செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ ஸ்டாலின் குணசேகரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சில விஷயங்களுக்குச் சில தூண்டுகோல்கள் தேவைப்படுகின்றன.

அப்படிப்பட்ட ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கிறார் ஸ்டாலின் குணசேகரன்.

இப்போது சிவகுமாரின் உரைக்கு வருவோம்.

சிவாஜி பற்றிய உரையைத் துவக்கும் சிவகுமார் சிவாஜியின் சிறு பருவத்திலிருந்தே, அவர் ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே துவங்குகிறார்.

சிவாஜி நடிப்பு ஆர்வத்தில் வீட்டை விட்டு ஓடியது -யதார்த்தம் பொன்னுசாமி நாடகக் கம்பெனியில் சேர்ந்தது, கணேச மூர்த்தி என்ற சின்னப்பையன் சிவாஜிகணேசனாக மாறியது, ஒல்லிப்பிச்சானாக இருந்த சிவாஜியின் உடலைப் பராசக்திக்காகத் தேற்றியது, அவர் புகழின் உச்சியைத் தொட்டது, சிவாஜியின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்…… என்று சிவாஜியின் வரலாறு தொடர்ந்து ஊடாடி வரும்படி பார்த்துக் கொள்கிறார்.

சிவாஜியும் எம்ஜிஆரும் தொழிலில் நேர் எதிர்த் துருவங்கள் என்று பொதுப்புத்தியில் இருக்கும் பிம்பத்தை அப்படியே கலைத்துப் போடுகிறார் சிவகுமார்.

அவர்கள் இருவரும் எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையும், வெவ்வேறு சமயங்களில் ஒருவருக்கொருவர் எந்த அளவிற்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் சொல்லிச் செல்கிறார்.

பணத்தைப் பற்றிக் கவலைப்படாத சிவாஜி எத்தனைத் தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர்களுக்கு ‘படம் ரிலீசானபிறகு பணம் கொடுங்கள்; இப்போது படத்தைத் துவங்குங்கள்’ என்று நடித்துக் கொடுத்திருக்கிறார் என்பதை சம்பவங்களுடன் விளக்குகிறார். இதில் ஸ்ரீதர், ஏ.பி.என், ஜி.என்.வேலுமணி, பந்துலு எல்லாரும் வருகிறார்கள்.

கடைசியில்…….. இறுதி நாட்களில் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது, அவரது மனநிலை என்னவாக இருந்தது என்று கூறுகிறார். 300 படங்களுக்கு மேல் நடித்து திரையுலகையே புரட்டிப்போட்ட ஒரு தலைமகன் கடைசியில் எந்த மனநிலையில் இறக்கிறார் என்பதைக் குறிப்பிடுகிறார்.

சிவாஜியை மனதார விரும்பும் ரசிகர்கள் பல இடங்களில் நெகிழ்ந்துபோய் கண்ணீர் விட வாய்ப்பிருக்கிறது.

சிவாஜி பேசிய வசனங்களைப் பேசிக்காட்டுகிறார் பாருங்கள்….. பராசக்தி, மனோகரா, இல்லற ஜோதி, அமரதீபம், ராஜா ராணி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர், அன்னையின் ஆணை, திருவிளையாடல், வணங்காமுடி ஆகிய படங்களின் வசனங்கள் தமிழின் தங்கத் தாம்பாளங்களாய் அனைவரின் இதயத்திலும் வைக்கப்படுகின்றன.

இப்போதெல்லாம் கூட்டங்களில் பேச்சாளர்கள் எவ்வளவு சிறப்பாகப் பேசினாலும் கேட்க வந்திருப்பவர்கள் கைதட்டுவதில்லை. ஆனால் இந்தக் கூட்டம் அதற்கும் விதிவிலக்கு. பல இடங்களில் கைதட்டல்கள், விசில் சத்தங்கள் எழுந்துகொண்டே இருந்தன.

சிவகுமாரின் இந்தப் பேச்சைக் கேட்பதற்காக அயல் நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நேயர்களும் ரசிகர்களும் திரண்டு வந்திருந்தனர்.

இதற்காகவே சென்னையிலிருந்து வந்திருந்த பாவலர் அறிவுமதி வியந்துபோய்ப் பாராட்டினார். பிரமுகர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமாக இருக்கும் திரு கல்யாணம் எதையும் அவ்வளவு எளிதாகப் பாராட்டாதவர். அவரும் ஆச்சரியப்பட்டு பாராட்டினார்.

இறுதியாக சிவாஜியின் பெருமைகள் மொத்தத்தையும் அடக்கி தாம் எழுதிய ஒரு புதுக்கவிதையுடன் உரையை முடிக்கிறார் சிவகுமார்.

பைபிளில் ஒரு வாசகம் வருகிறது. ‘இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறு பெற்றோர்’ என்று.

இந்த நிகழ்ச்சிக்கும் அது பொருந்தும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *