‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் ரேட்டிங்: 3/5
Cast & Crew
Vaibhav Murugesan, Lavanya Anbazhagan, Venkata Balamurali, Jagabar Sadik, Naan Kadavul Rajendran, Vivek Prasanna.
Director – Savir Sudhakar
Producer – Singaravelan
Music – Bharath Dhanasekar
Cinematography – P.M. Rajkumar
Editor – Pavithran K
Art – Tamizhselvan BFA
‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் மூன்று கிராமத்து நண்பர்கள், தங்களின் அபிமான நட்சத்திர கிரிக்கெட் வீரரின் கடைசி போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒரே கனவுடன் சென்னைக்கு கிளம்புகிறார்கள். அந்த கனவை நனவாக்க அவர்கள் எடுக்கும் முடிவுகள், சந்திக்கும் சிக்கல்கள், நட்பு, காதல், ஏமாற்றம், கிரிக்கெட் சூதாட்ட உலகம் என பல சம்பவங்கள் வழியாக பயணிப்பதே 6 அத்தியாயங்களைக் கொண்ட மம்மட்டியான் ஸ்டார்ஸ் வெப் தொடரின் கதை.
கிரிக்கெட்டை வெறும் விளையாட்டாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் உணர்வாகவும், அதே நேரத்தில் ரசிகத்தனம் ஒரு எல்லையைத் தாண்டினால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதையும் இயக்குனர் சவிர் சுதாகர் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். முதல் சில அத்தியாயங்கள் நகைச்சுவையுடனும் கலகலப்புடனும் நகர, சென்னை வந்த பிறகு கதை வேகமெடுத்து கிரிக்கெட் சூதாட்டத்தை நோக்கி பயணிக்கிறது. சில திருப்பங்களை முன்கூட்டியே யூகிக்க முடிந்தாலும், திரைக்கதை பெரும்பாலும் விறுவிறுப்பை தக்க வைத்திருக்கிறது.
வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் ஆகிய மூவரும் உண்மையான நண்பர்களைப் போல இயல்பாக நடித்திருக்கிறார்கள். லாவண்யா அன்பழகன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, சம்பத் ராம், சரத் ரவி உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நல்ல பலம் சேர்த்துள்ளனர்.
பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவு கிராமத்தையும் சென்னையையும் அழகாக வேறுபடுத்திக் காட்டுகிறது. பரத் தனசேகரின் பின்னணி இசை பல காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுக்கிறது. படத்தொகுப்பும் தொடரின் ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது.
மொத்தத்தில், ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களும், நட்பை மையமாகக் கொண்ட கதைகளை விரும்புபவர்களும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கக்கூடிய தொடராக இது இருக்கிறது.

















