full screen background image
Search
Monday 18 May 2026
  • :
  • :
Latest Update

‘கருப்பு’ திரைப்பட விமர்சனம்

‘கருப்பு’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Starring Suriya, Trisha, RJ Balaji, Indrans, Natty, Swasika, Sshivada and Anagha Maya Ravi.

Written and Directed by RJ Balaji

Produced by Dream Warrior Pictures
SR Prakash Babu and SR Prabhu

Music by Sai Abyankkar
DOP by GK Vishnu
Edited by R Kalaivanan

Tamil Nadu Release by Sakthi Film Factory

‘கருப்பு’ நீதித்துறையில் நடக்கும் அநீதிகளை கருப்பசாமி கதாபாத்திரம் மூலம் பேச முயற்சித்திருக்கும் ஆக்ஷன் ஃபேண்டஸி படம். நீதிமன்றத்தில் நீதி கிடைக்காமல் தவிக்கும் சாதாரண மக்களின் வேதனையை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி.

கேரளாவில் இருந்து மகளின் சிகிச்சைக்காக வரும் இந்திரன்ஸ் தனது நகையை இழந்து, அதை மீட்க நீதிமன்றத்தையும் வழக்கறிஞரான பேபி கண்ணனையும் நம்புகிறார். ஆனால் அந்த வழக்கையே பணம் பறிக்க பயன்படுத்தும் வில்லனாக ஆர்.ஜே. பாலாஜி மிரட்டலாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாக தோன்றினாலும், போகப் போக அவரது நடிப்பு செட்டாகி விடுகிறது. உடல் பலத்தை விட புத்தியை பயன்படுத்தும் வில்லனாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

சூர்யா கருப்பசாமியாக திரையில் வரும்போது தியேட்டரே கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான கமர்ஷியல் கம்பேக் படமாக இது அமைந்திருக்கிறது. ஆக்ஷன், ஸ்டைல், எமோஷன் எல்லா இடங்களிலும் சூர்யா ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக கருப்பு சாமி லுக்கிலும், மதுரை வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்திலும் செம்மையாக பொருந்தியிருக்கிறார்.

இந்திரன்ஸ் படத்தின் பெரிய பலம். ஒரு சாதாரண ஏழை மனிதனின் வேதனையை கண்கலங்க வைக்கும் அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார். மகளை பற்றிய காட்சிகள் பல இடங்களில் மனதை தொடுகிறது. த்ரிஷாவுக்கு பெரிய வேலை இல்லாவிட்டாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நட்டி, சுவாசிகா, ஷிவதா உள்ளிட்டவர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஜி.கே. விஷ்ணுவின் ஒளிப்பதிவும் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் தான். கருப்பு வரும் காட்சிகள் எல்லாமே திரையரங்கில் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கிறது. சில இடங்களில் பின்னணி இசை கொஞ்சம் அதிக சத்தமாக இருந்தாலும், மாஸ் காட்சிகளுக்கு நல்ல எலிவேஷன் கொடுக்கிறது.

முதல் பாதி மிகவும் சுவாரஸ்யமாகவும் எமோஷனலாகவும் நகர்கிறது. நீதிமன்றத்தில் சாதாரண மக்கள் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதையும் நன்றாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் லாஜிக் மீறல்கள் அதிகமாக தெரிகிறது. கடவுள் ஏன் இந்த பிரச்சனையில் இறங்க வேண்டும், ஏன் வில்லனின் சவாலை ஏற்க வேண்டும் போன்ற கேள்விகள் தோன்றுகிறது. சில காட்சிகள் வெறும் ரசிகர் கொண்டாட்டத்துக்காக மட்டும் சேர்த்தது போலவும் தெரிகிறது.

அதையெல்லாம் தாண்டி பார்த்தால், நல்ல மாஸ் தருணங்கள், சூர்யாவின் திரை ஆளுமை, நீதித்துறையை பற்றிய துணிச்சலான கருத்துகள், ஆக்ஷன் காட்சிகள், எமோஷனல் சம்பவங்கள் ஆகியவற்றால் கருப்பு ஒரு நல்ல கமர்ஷியல் என்டர்டெய்னராக நிற்கிறது.

மொத்தத்தில், ‘கருப்பு’ முதல் பாதி அளவுக்கு இரண்டாம் பாதியும் வலுவாக இருந்திருந்தால் இன்னும் பெரிய படமாக மாறியிருக்கும். இருந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கும் மாஸ் படங்களை விரும்புபவர்களுக்கும் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம் தான் கருப்பு.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *