full screen background image
Search
Thursday 25 June 2026
  • :
  • :
Latest Update

‘ஆர்யன்’ திரைப்பட விமர்சனம்

‘ஆர்யன்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Casting : Vishnu Vishal, Selvaraghavan, Shraddha Srinath, Maanasa Choudhary, Karunakaran, Avinash Y

Directed By : Praveen. K

Music By : Ghibran

Produced By : Vishnu Vishal Studioz – Shubhra, Aryan Ramesh and Vishnu Vishal

ஆர்யன் விமர்சனம்: எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை மனுசன் பார்க்குறது மாதிரி ஒரு படத்தை பார்த்துரணும்னு ரொம்ப நாளா முடிவு பண்ணி இருந்தேன். பெரிதும் எதிர்பார்த்த தீபாவளிக்கு நாம எதிர்பார்த்த மாதிரி எந்த படமும் வரல.

தீபாவளிக்கு பிறகு 12 நாட்களுக்கு பிறகு விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன் ரிலீசாகி இருக்கு . திராவிட ஆட்சியில் வந்திருக்கும் ஆரிய படம் என சரின்னு போயிட்டேன்.

படத்தை பிரவீன் கே இயக்கி இருக்கார், விஷ்ணு விஷால் தயாரிச்சு நடிச்சிருக்கார். அவர் கம்பெனி மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் இசையமைச்சிருக்கார். உண்மைய சொல்லணும்னா ஜிப்ரான் மட்டும் இல்லனா படம் கொஞ்சமாவது கவர்ந்திருக்குமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


ஓபனிங்ல ஒரு டிவியில ஒரு இண்டர்வியூ நடக்க இருக்குது, அதை தொகுத்து வழங்குறவங்க நம்ம ரங்கராஜ் பாண்டே மாதிரி நேருக்கு நேரா காந்திக்கு நேரா உண்மையா நெற்றிப்பொட்டில் அடித்தது போல கேள்வி கேட்குறவங்க, அன்னைக்கு அந்த ஸ்டுடியோவுக்கு வர வேண்டிய அரசியல்வாதி வராத நிலையில், மக்கள் வெளிச்சம் உள்ள ஒரு நடிகர் வருகிறார். அவர் திமிர் பிடித்தவர் பொம்பள பொறுக்கி என பேட்டி எடுப்பவர் எடுக்க மறுக்க, அந்த டிவியின் அதிகாரி, அது நமக்கு தேவையில்ல இண்டர்வியூதான சும்மா எடுத்து விடு என்கிறார், அந்த நிகழ்ச்சி தொகுப்பாளரும் அதிரடியாக அந்த நடிகரிடம் கேள்விகள் கேட்கிறார். நிகழ்ச்சி லைவில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மறுபுறம் இன்னொரு பக்கம், செல்வராகவன் ஒரு அந்தக்கால ஜி ராமநாதன் ஸ்டைல் பாடல் ஒன்றை வானொலியில் கேட்டுகொண்டே குளித்து சாப்பிட்டு டிரஸ் சேஞ்ச் செய்து வீட்டில் இருந்து வந்து அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராய் அமர்கிறார்.

அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அந்த நடிகரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு திணறடிக்க, பார்வையாளர் மாடத்தில் இருந்து செல்வராகவனும் அதிரடியாய் கேள்வி கேட்க அந்த நடிகர் யார்யா நீ வெளிய போயா என சொல்ல துப்பாக்கியை எடுத்து பட்டென்று அவர் காலில் சுட , படம் வேகமெடுக்கிறது. அப்படியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது, அந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினர் போல் உட்கார்ந்து தன்னுடைய திறமைக்கு யாரும் மதிப்பு தரல நான் ஒரு ரைட்டர் என்கிறார். அதனால் ஏன் இப்படி செய்றிங்க என நெறியாளர் கேட்டதற்கு, அப்படித்தான் இன்னைலருந்து அஞ்சு நாளைக்கு டெய்லி ஒருத்தர போட்டுத்தள்ளுவேன், போட்டுத்தள்ளும் முன் ஒரு மணி நேரம் முன்னால் அவர் யார் என அறிவிப்பேன் என்கிறார். அவரும் த.. கொ செய்து கொள்கிறார். ஆனால் அவர் சொன்னபடி ஒவ்வொருவராக கொ.. செய்யப்படுகின்றனர், அதற்கு முன்னால் ஏதாவது ஒரு ஊடகத்தில் அவரது பேட்டி வெளிவந்து அவர் சொன்னபடி ஒரு மணி நேரத்தில் அவர் கொ.. செய்யப்படுகிறார், செல்வராகவன் இறந்த நிலையில் எப்படி இது சாத்தியம் என்ற நிலையில் எல்லாவற்றையும் தந்திரமாக அவர் செய்து முடிக்கிறார். அவர் கொ.. செய்த ஆட்கள் யார் என பார்த்தால் சமுதாயத்திற்கு நல்லது செய்தவர்கள், நாட்டை காப்பாற்றிய மில்ட்ரிமேன், மருத்துவ சேவையை சிறப்பாக செய்த நர்ஸ், ஆற்றில் மணல் அள்ளுபவரிடம் தர்க்கம் செய்யும் சமூக ஆர்வலர், வீட்டிலிருந்து துரத்தப்பட்ட திருநங்கை , இப்படி சமூகத்துக்காக போராடிய இவர்களை ஏன் செல்வராகவன் ஒவ்வொருவராக போட்டுத்தள்ள வேண்டும் என்பதில் ஒரு டுவிஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

இதை கண்டுபிடிக்க டிசியாக விஷ்ணு விஷால் கேப்டன் விஜயகாந்த் அறிமுக பாணியில் அறிமுகமாகிறார். அது என்ன கேப்டன் பாணி என புலன் விசாரணை, உளவுத்துறை, சத்ரியன் போன்ற படங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கு கிடைக்குதுன்னு மகாநதி படத்துல கமல் ஒரு காலத்தில் சொன்னார், அது இப்போ மாறிப்போச்சு நல்லவனுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் இப்போ கிடைக்கிறதில்ல, கெட்டவர்களுக்கு அதிக அங்கீகாரமும், ஒரு மோசமான ரீல்ஸ் போடுறவனுக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை கூட உண்மையில் நல்லா பாட தெரிந்தவருக்கோ, ஆட தெரிந்த திறமையுள்ளவருக்கோ, நாட்டை காத்தவருக்கோ, சமூக சேவை செய்பவருக்கோ இந்த சமூகம் கொடுப்பதில்லை என தற்போதைய மாறி போன இந்த உலகத்தின் அவலமான ஒரு பக்கத்தை எடுத்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.

நான் நீண்ட காலமாக மனதில் நினைத்திருக்கும் கருத்து இது. மோசமான வீடியோ போட்டு லைக் வாங்குபவர்களை இயக்குனர் சாடியிருப்பதை வரவேற்கிறேன்.

பாவப்பட்டவர்கள் இந்த பூமியில் இருக்க வேண்டாம் என நான் கடவுள் பட கான்செப்ட் போல இப்படம் லைட்டாக அந்த வாடை அடிக்கிறது.

ஆரம்ப காட்சிகளில் வந்து அதகளம் செய்கிறார் செல்வராகவன், அவர் நடித்த படங்களிலேயே இதுதான் சிறப்பான படம். அவர் ஸ்டுடியோவுக்குள் உட்கார்ந்து கொண்டு கேசுவலாக அனைவரையும் கடத்தி வைத்துக்கொண்டு பேசும் வசனங்கள் எல்லாம் அந்தக்கால சத்யராஜை ஞாபகப்படுத்துகிறது.

படத்தின் ஆரம்ப காட்சிகள் அட போட வைக்கிறது, பின்பு கொஞ்சம் தொய்வாக இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் தொய்வும் கடைசி அரைமணி நேரம் வேகமாகவும் போறது மாதிரி இப்படம் இருக்கு. என்ன ஒண்ணு ராட்சஸன் பட பாணியையே பின்பற்றி ஒவ்வொருத்தருக்கும் அதே மாதிரி பின்னணி இசையுடன் ப்ளாஷ்பேக் கதை சொல்ற அந்த பேட்டர்ன மாத்தி இருக்கலாம். அது ராம்குமார் இயக்கிய படம் அதையே விஷ்ணு விஷால் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அதே பாணியிலேயே ஜிப்ரான் பின்னணி இசையிலேயே சைக்கோ கில்லர் கதைகளை தயாரித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் உயரதிகாரியாக நடித்திருப்பதால் உடம்பை ஏற்றி ஜிம்பாடிடா ஜிம்பாடி என்ற வகையில் வலம் வருகிறார். மீசையை வேறு வழித்துவிட்டு அவரை பார்க்க முடியவில்லை, உடற்பயிற்சி செய்யும்போது வாயை ஊதிக்கொண்டே செய்தாரா என தெரியவில்லை. கன்னம் சும்மா பிரட்டை நனைச்சு பஜ்ஜி மாவில் முக்கி பஜ்ஜி போட்டது மாதிரி ஓவரா புஸ்ஸுனு இருக்கு. கன்னம் பன்னு மாதிரி இருக்குங்க.

சரிங்க சுத்தி வளைச்சு பேச விரும்பல படம் நல்லா இல்லையா நல்லாருக்கான்னு கேட்டா நல்லா இருக்கு. ஒரு முறை கண்டிப்பா பார்க்கலாம், அடேய் லூசு நாங்க ஒருமுறை தாண்டா பார்க்க போறோம் ஒன்பது தடவையா பார்க்க போறொம் என எவனாவது வந்து தீவிரவாத கமெண்டிஸ்டுகள் கமெண்ட் பண்ணுவார்கள், அவனுகளை சமாளிக்கிறது வேற பெரிய வேலையா இருக்கு. ஒரு பேச்சுக்கு சொல்ல விட மாட்றானுக.

முதலில் எடுத்த உடன் ஆரம்பித்த வேகம் இன்னும் போக போக அதிகமாயிருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆர்யன் முதலுக்கு மோசமில்லை.

மொத்தத்தில் இந்த ‘ஆர்யன்’ – ஒரு புதிய வகை க்ரைம் திரில்லர் அனுபவம்!




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *