*“கல்லூரிகளுக்குச் சென்று படங்களை புரமோட் பண்ணுவது டைம் வேஸ்ட்.” ; ‘தாரணி’ பட விழாவில் இயக்குநர் கேபிள் சங்கர் நெத்தியடி பேச்சு*
*“படங்களை ரகசியமாக எடுப்பது போல ரிலீஸ் செய்வதையும் ரகசியமாக செய்யக்கூடாது” ; இயக்குநர் கேபிள் சங்கர்*
*“பேயை நம்பினால் சினிமாவில் அவன் எப்போதும் சம்பாதிப்பான்” ; ‘தாரணி’ பட விழாவில் இயக்குநர் சுப்ரமணிய சிவா நம்பிக்கை*
*“சுந்தர்.சி சொல்வதை கேட்பதா ? அமீர் சொல்வதை கேட்பதா ?” ; தாரணி பட விழாவில் நடிகர் விஜய் விஷ்வா எழுப்பிய சந்தேகம்*
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’. இயக்குநர் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக மாரி நடிக்க கதாநாயகியாக அபர்ணா மற்றும் விமலா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ஆனந்த், இலக்கியா, இம்ரான், சசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு காயத்ரி குருநாத் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் மாவேரிக்’ ஒளிப்பதிவு செய்ய, நவீன் சுந்தர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கல் சுப்பிரமணிய சிவா, கேபிள் சங்கர், இசையமைப்பாளர் தாஜ்நூர், நடிகர் விஜய் விஷ்வா, சினத்திரை நடிகர் கமலேஷ் மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுடன் கூடவே இந்த படக்குழுவினரின் அடுத்த படமாக உருவாக உள்ள என் திரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது..
இந்த நிகழ்வில்
*நடிகை இலக்கியா பேசும்போது,*
“நான் திருச்சியை சேர்ந்தவள். இந்த படமும் திருச்சியை சுற்றி தான் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வில்லத்தனம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் என்னையே நான் ஒரு புது விதமாக பார்க்கிறேன்” என்று பேசினார்.
*இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசும்போது,*
“புதியவர்களை அறிமுகப்படுத்துவது தான் இன்றைய சூழலில் சிரமமாக இருக்கிறது. முன்பு பெரிய இயக்குனர்கள் அவர்களை அறிமுகப்படுத்துவார்கள். இன்று அவர்களே பெரிய ஹீரோக்களை தேடிப் போகிறார்கள். இந்த படம் ஹாரர் பாணியில் உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. பேய் கதை நம்மை எப்போதும் கைவிடாது, பேயை நம்பினால் சினிமாவில் அவன் எப்போதும் சம்பாதிப்பான் என்று இயக்குநர் சுந்தர் சி சொல்வார். மனிதன் எதை எதிரியாக நினைக்கிறானோ அதை விரும்ப ஆரம்பிக்கிறான் என்றால் அவன் நமக்கு அடிமை. பயத்தை நாம் விரும்புகிறோம், பயத்தை விரும்பும் வரை பேய் படங்களுக்கு வரவேற்பு இருக்கும். பெரும்பாலும் பெண்கள்தான் பேயாக இருக்கிறார்கள். பெண்களை நாம் சாமியாக பார்ப்பதால் அவர்களையே பேயாகவும் பார்க்கிறோம். முதல் படத்தின் ஆடியோ ரிலீஸின் போதே இரண்டாவது படத்திற்கு பூஜை போடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல.. அதை நீங்கள் செய்து இருக்கிறீர்கள்.. எம்ஜிஆர் காலத்தில் அவரது ரசிகர்கள் தங்களது ரத்தத்தை விற்று அவரது படங்களை பார்த்தார்கள்.. அதுதான் சினிமா.. அப்படிப்பட்ட சினிமாவிற்குள் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.. நல்ல சிறப்பான படங்களை எடுத்து மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்” என்று வாழ்த்தினார்.
*நடிகை அபர்ணா பேசும்போது,*
“இதுதான் எனக்கு முதல் படம். இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போதே, நான் இன்னும் நிறைய விஷயங்கள் நான் கற்றுக்கொள்ள வேண்டும் என எனக்கே தெரிகிறது” என்று பேசினார்.
*நாயகன் மாரி பேசும்போது,*
“அடிப்படையில் நான் ஒரு டான்சர். நடன இயக்குராக மட்டுமல்லாமல் ஒரு நடன ஸ்டுடியோவும் நடத்தி வருகிறேன். இதன். மூலமாகத்தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குனர் ஆனந்திற்கு நன்றி. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்” என்று பேசினார்.
*நடிகை ஐஸ்வர்யா பேசும்போது,*
“இந்தப் படத்தின் டிரைலரை பார்த்தபோது, கதாநாயகி முத்தக் காட்சியில் சிறப்பாக நடித்திருந்தார். என்னுடைய படத்திலும் அப்படி ஒரு காட்சி இருந்தது. நடிக்க ரொம்பவே சிரமப்பட் டேன்.. முத்தக்காட்சியில் நடிப்பது இஷ்டம் இல்லை.. ரொம்பவே கஷ்டம்” என்று பேசினார்.
*இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது,*
“தாரணி டிரைலரை பார்க்கும்போதே ஒரு சுவாரசியமான பேய் படமாக இருக்கிறது. சென்னை, கோடம்பாக்கத்தை தாண்டி தற்போது திருச்சி, திருநெல்வேலி என எல்லா ஏரியாக்களிலும் சினிமாவை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சினிமா ஜனரஞ்சகமான, சமத்துவமான தொழிலாக மாறி வருகிறது. ஆனால் எங்கே படம் எடுத்தாலும் ரிலீஸ் பண்ண சென்னைக்கு தான் வந்தாக வேண்டி இருக்கிறது. ஓடிடி தளங்களுக்கு படம் வாங்குவதற்காக நிறைய படங்களை பார்க்கிறோம். சில படங்களை பார்க்கும் போது இதற்காக ரிலீஸ் செய்வதற்கு செலவு செய்ய வேண்டாம், உங்கள் ஊரிலேயே இரண்டு தியேட்டர்களை புக் செய்து ரசிகர்களுக்கு போட்டு காட்டி விடுங்கள் என்று சொல்லி இருக்கிறோம். அதைக் கேட்காமல் செலவு செய்து கையை சுட்டுக் கொண்டவர்களும் உண்டு.
சினிமா எடுப்பது எவ்வளவு சுலபமாகிவிட்டதோ, ஆனால் அதைவிட மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மிகவும் கஷ்டமாகிவிட்டது. சில படங்கள் நல்ல படங்களாக இருந்தும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத சூழல். அப்படிப்பட்ட படங்களை எங்கள் ஓடிடி பிளஸ் தளத்தில் ரிலீஸ் செய்கிறோம். சமீபத்தில் கூட கசிவு என்கிற படத்தை இப்படி ரிலீஸ் செய்தோம். நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் ரிலீஸுக்கு செய்வதை விட ஓடிடி தளங்களில் வெளியிடுவது ரொம்பவே பாதுகாப்பானது.
படங்களை ரகசியமாக எடுப்பது போல ரிலீஸ் செய்வதையும் ரகசியமாக செய்யக்கூடாது. அதை விளம்பரப்படுத்த வேண்டும். கல்லூரிகளுக்குச் சென்று படங்களை புரமோட் பண்ணுவது டைம் வேஸ்ட்.. அதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது. நம் படங்களுக்கு யார் ஆடியன்ஸ் என்பதை டார்கெட் பண்ணி சரியாக மார்க்கெட் பண்ணினால் ஓரளவு சிறியதாக சம்பாதிக்க முடியும். சின்ன படங்கள் தான் சினிமாவுக்கான பிசினஸை இப்போது வரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மக்கள் இப்போது சினிமாவை தியேட்டரில் மட்டும் பார்க்கவில்லை.. அது பார்க்கும் இடங்கள் எல்லாம் தற்போது மாறிக்கொண்டிருக்கிறது, அந்த இடங்களுக்கு நம் படங்களை கொண்டு சென்றால் நிச்சயம் படம் வெற்றி பெறும்” என்று கூறினார்.
*எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் கமலேஷ் பேசும்போது,*
“முற்றிலும் புதியவர்களாக ஒன்றிணைந்து இந்த தாரணி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களது இந்த முயற்சிக்கு நாம் வரவேற்பு தெரிவிக்க வேண்டும். இந்த படத்தைப் பார்த்தால் சின்ன பட்ஜெட்டில் எடுத்திருப்பது போன்று தெரியவில்லை. எல்லா விஷயங்களிலும் ஒரு பெரிய படம் போலவே தெரிகிறது. சின்னத்திரையில் 30 வருட பயணத்தில் ஒரு நடிகராக பயணித்து சமீபத்தில் கலைமாமணி விருதும் பெற்றேன். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு நடிகராக வருவது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இன்று சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ஆனந்த் அவருடைய அடுத்த படத்தில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்” என்று பேசினார்.
*இசையமைப்பாளர் தாஜ்நூர் பேசும்போது,*
“இந்த படத்தில் 12 உதவி இயக்குநர்கள் பணியாற்றி இருக்கிறார்கள் என்று கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் இத்தனை படைப்பாளர்கள் சேர்ந்து இருக்கும்போது படம் நன்றாக வந்திருக்கும் என்றும் தெரிகிறது. அது மட்டுமல்ல இயக்குநர் ஆனந்த் ரொம்பவே தன்னம்பிக்கையுடன் தனது அடுத்த படத்திற்கும் இதே மேடையில் பூஜை போட்டு உள்ளார் என்பது மிகப்பெரிய விஷயம்” என்று பேசினார்.
*நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது,*
“இயக்குநர் தைரியமாக ஒரு விஷயத்தை இதில் சொல்லியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் இதில் கலந்து கொள்ளாமலேயே தனது நண்பனுக்காக இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார் என்றால் மிக அற்புதமான நண்பரை இயக்குனர் ஆனந்த் பெற்றுள்ளார். இப்படிப்பட்ட நண்பர்கள் தயாரிப்பாளர்கள் ஆக கிடைக்கும்போதுதான் மிகுந்த சுதந்திரம் கிடைக்கும். இந்தப் படத்திற்கு ஒரு பெண் விஎஃப்எக்ஸ் பணிகளை செய்துள்ளார், ஒரு பெண் இசையமைத்துள்ளார் என்பது மிகப்பெரிய ஆச்சர்யம்.. பெண்கள் இன்று மேல்நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. நான், யோகி பாபு, ரோபோ சங்கர் நடித்திருக்கிறோம். அடுத்ததாக பிரம்ம முகூர்த்தம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. டைம் மேனேஜ்மென்ட் என்பது சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ரொம்பவே முக்கியமானது. உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அது எங்கே போய் முடியும் என்று சமீபத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில காலதாமதத்தினால் 41 பேர் இறந்தும் போயிருக்கிறார்கள்.. அதனால் நமக்கு கிடைக்கிற நேரத்தில், கிடைக்கும் விஷயத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பேயை வைத்து படம் எடுத்தால் வெற்றி என சுந்தர்.சி சொன்னதாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா சொன்னார். சமீபத்தில் இயக்குநர் அமீர் பேசும்போது, கண்ணுக்குத் தெரியாத சாமியையும் பேயையும் வைத்து படம் எடுப்பதற்கு பதிலாக கண்ணுக்குத் தெரியும் சாதியை வைத்து படம் எடுங்கள் என்று சொன்னார். இதில் எது சரி என்று எனக்கு தெரியவில்லை. அதனால் போகிற போக்கில் நமக்கு எது சரி என்று தெரிகிறதோ, பாசிட்டிவாக இருக்கிறதோ அதை எடுத்து கொள்வதுதான் நல்லதாக இருக்கும். சிறிய, பெரிய ஹீரோக்கள் அனைவரின் படங்களுக்கும் ஒரே டிக்கெட் தான். ஆனால் விளம்பரங்களை பொறுத்துதான் அவை சிறிய படங்களா, பெரிய படங்களா என்பது முடிவாகிறது” என்று பேசினார்.
*படத்தின் இயக்குநர் ஆனந்த் பேசும்போது,*
இது என்னுடைய முதல் படம். அதிலும் முற்றிலும் புதியவர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியதால் மிகுந்த சிரமங்களுக்கிடையே இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். நான்கு மாதம் முன்பு வரை நான் இப்படி ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது என் வீட்டிற்கே தெரியாது. விஜய்சேதுபதி சார் போலத்தான் என்னுடைய கதையும்.. ஆபீஸ் போவதாக பொய் சொல்லி விட்டு சினிமாவுக்காக சுற்றினேன். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்த விஷயமே வீட்டிற்கு தெரியவந்தது. நான் இல்லாத சமயத்தில் கூட கோ டைரக்டர் சசிகுமார் உறுதுணையாக இருந்து இந்த படத்தை பார்த்துக் கொண்டார்.
இந்த சினிமா துறையில் ஒரு பெண் எவ்வளவு கஷ்டப்பட்டு மேலே வர போகிறாடுகிறாள் என்பதையும், ஆனால் இந்த திரையுலகில் உள்ள சிலரால் அவள் எவ்வளவு பாதிக்கப்படுகிறாள் என்பதையும் மையமாக வைத்து தான் இந்த தாரணி படத்தை எடுத்துள்ளேன். இந்த படத்தின் டிரைலரை பார்த்து விட்டு எனது அடுத்த படமாக ‘என் திரை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நடிகர் கமலேஷ். முதல் படம் வெளியாகாத நிலையில் அப்படி ஒரு வாய்ப்பை வேறு யாரும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுடன் ஒரு தயாரிப்பாளரிடமும் சென்று என்னை அறிமுகப்படுத்தினார். அதனால் தான் இந்த மேடையில் எனது இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்” என்று பேசினார்.



















