‘சக்தித் திருமகன்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Vijay Antony, Sunil Kirpalani, Trupti Ravindra, Vagai Chandrasekar, Cell Murugan, Kiran Kumar, Shoba Vishwanath
Directed By : Arun Prabu
Music By : Vijay Antony
Produced By : Vijay Antony Film Corporation – Fatima Vijay Antony, Meera Vijay Antony
அதிகாரத்திற்கு எதிராக பல படங்கள் வந்திருந்தாலும், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட குரலோடு வந்திருப்பது சக்தித் திருமகன். அரசியலின் பின்னணியில் இடைத் தரகர் (மீடியேட்டர்) எவ்வளவு சக்திவாய்ந்தவர் என்பதை கதை சொல்லுகிறது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள கிட்டு, ஒரு சாதாரண இடைத் தரகரல்ல – அதிகாரிகளின் தொடர்புகளை கையில் வைத்துக் கொண்டு, கமிஷன், லஞ்சம் என எதையும் சாதிக்கும் மனிதர். “முடியாத காரியமே இல்லை” என்ற பெயரைப் பெற்றவர். ஆனால், கோடிக்கணக்கான டீலில் பிரபல தொழிலதிபரும் அரசியல் சாணக்கியனுமான அபயங்கர் (கண்ணன்) பாதிக்கப்படுவதால், கிட்டுவின் மீது அகில இந்திய அளவில் அரசியல்வாதிகளின், தொழிலதிபர்களின் கண்கள் விழுகிறது. பின்னர் அவரை பிடிக்க எல்லாத் தரப்பும் வலை விரிக்க, அதிலிருந்து அவர் எப்படி தப்புகிறார்? என்னென்ன காய் நகர்த்துகிறார்? என்பதே கதை.
‘சைலன்ட் ஹீரோ’வாகப் பேசப்படும் விஜய் ஆண்டனி, மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்த கதாபாத்திரம். பெரிய சண்டைகள், அலட்டல்கள் இல்லாமல், புத்திசாலித்தனமும் சாணக்கியத்தனமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோயிசம் இருந்தாலும், அது அடக்கமான பாணியில் வந்திருப்பது சிறப்பு. ஹீரோயினாக திருப்தி ரவீந்திரா சில காட்சிகளில் மட்டுமே காதல், கண்ணீர் கலந்த பங்களிப்பைச் செய்கிறார். அபயங்கராக கண்ணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வந்து, நரித்தனம் நிறைந்த வில்லத்தனத்தை எளிதாக வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் நெட்வொர்க்கில் நம்பிக்கையுடன் இருப்பவராக செல் முருகன், அரசியல் பாடம் சொல்லும் மூத்தவராக வாகை சந்திரசேகர், மேலும் கிரண் குமார், ஷோபா விஸ்வநாத் போன்றோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர் காலிஸ்ட் தனது வேலை மூலம் படத்திற்கு பெரிய கேன்வாஸ் உருவாக்கியுள்ளார். காட்சிகளின் வேகம், கேமரா இயக்கம் – அனைத்தும் கதை சொல்லும் பாணிக்கு ஏற்றதாக இருக்கிறது. எடிட்டிங் செய்த ரேமண்ட் டெரிக், தின்சா ஆகியோர் கதை ஓட்டத்தை சுறுசுறுப்பாக வைத்துள்ளனர். பின்னணி இசையில் விஜய் ஆண்டனி பிரம்மாண்டத்தையும் உணர்ச்சியையும் ஒருங்கே கலந்துள்ளார்.
அரசியலில் இடைத் தரகர் எவ்வளவு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும், எந்த அளவுக்கு அமைப்பின் ஓட்டையைப் பயன்படுத்தி பலன் பெற முடியும் என்பதை சுவாரஸ்யமாக சித்தரித்துள்ளார் இயக்குநர் அருண் பிரபு. இடைவேளை வரை படம் வேகமாக ஓடினாலும், இரண்டாம் பாதியில் மேலும் பரபரப்பை கூட்டி “டாப் கியர்”க்கு செல்கிறது. ஆனால் காட்சிகள், தகவல்கள் அடர்த்தியாக இருப்பதால், சாதாரண ரசிகருக்கு சற்றே சிரமமாக இருக்கலாம். இருந்தாலும், அரசியலின் மறுபக்கங்களைத் திறம்படக் காட்டியுள்ளார்.
நாட்டை ஆளுபவர்கள் அரசாங்கம் என்றாலும், அதன் பின்னால் இயங்குபவர்கள் யார் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் படம் இது. கடைசியில் வரும் நீண்ட கிளைமாக்ஸ் வசனங்கள் பராசக்திக்குப் பிறகு பேசப்படும் அளவுக்கு செறிவுடன் எழுதப்பட்டுள்ளன. வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் பேசப்படும் சக்தி கொண்ட படம் சக்தித் திருமகன்.
மொத்தத்தில் இந்த, ‘சக்தித் திருமகன் – அரசியலின் மறுபக்கம் காட்டும் விறுவிறுப்பான படம்