full screen background image
Search
Thursday 27 March 2025
  • :
  • :
Latest Update

‘விடாமுயற்சி’ திரைப்பட விமர்சனம்

‘விடாமுயற்சி’ திரைப்பட விமர்சனம்

Casting : Ajith Kumar, Trisha, Arjun, Regena Cassandra, Aarav, Ravi Raghavendra, Ramya Subramaniyam, Nikhil Sajith, Sanjay Ganesh Saravanan

Directed By : Magizh Thirumeni

Music By : Aniruth

Produced By : Lyca Productions – Subaskaran

அஜர்பைஜான் நாட்டில் மனைவி திரிஷாவுடன் அஜித் வசிக்கிறார். 12 வருடம் தம்பதியாக வாழ்ந்த அஜித்தும், திரிஷாவும் விவாகரத்து பெற முடிவு செய்திருக்கும் நிலையில், இருவரும் காரில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். பயணத்தில் மனைவியை தொலைத்த கணவன் அவளைத் தேடும் படலமே இந்த விடாமுயற்சி.

அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாக்குவில் காதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் அஜித். இனிய இல்லறத்தில் தாய்மை அடைகிறார் திரிஷா. ஆனால் சிறிய விபத்தில் குழந்தை வயிற்றுக்குள்ளே இறந்து விட, மருத்துவர்களின் கடுமையான போராட்டத்தில் திரிஷா மட்டும் உயிர் பிழைக்கிறார்.

ஆனால் இந்த விபத்து அவருக்கு மறுபடியும் பிள்ளைப் பேற்றுக்கான வாய்ப்பை அடியோடு தகர்த்து விட, அப்போது முதலே தம்பதிகளுக்குள் சின்ன சின்ன விரிசல் ஆரம்பம்.

இப்படி 12 வருடம் கடந்த நிலையில் ஒருநாள் கணவரிடம் நாம் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்கிறார் திரிஷா. அதுவரை ஊரில் உள்ள பெற்றோருடன் இருந்து கொள்கிறேன் என்றும் சொல்ல…
மனைவியின் பிடிவாதத்துக்கு மறுப்பு சொல்ல முடியாத நிலையில் காரில் அழைத்துச் செல்கிறார் அஜித். போகும் வழியில் நட்ட நடு பாலைவனத்தில் கார் ரிப்பேர் ஆகி நின்று விட, அப்போது அங்கே ட்ரக்கில் வரும் அர்ஜுன்- ரெஜினா தம்பதிகள் அஜித்திடம், ‘இது பாதுகாப்பான இடமில்லை. அதனால் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள காபி ஷாப் ஒன்றில் திரிஷாவை பாதுகாப்பாக தங்க வைப்பதாகவும், கார் ரிப்பேரை சரி செய்த பிறகு அங்கு போய் அழைத்துக் கொள்ளுங்கள்’ எனவும் சொல்ல…அஜித்தும் அதை நம்புகிறார்.

அவர்கள் போன சிறிது நேரத்தில் கார் சரியாக, கொஞ்ச தூர பயணத்தில் அந்த காபி ஷாப்பை கண்டு பிடிக்கிறார். ஆனால் அங்கே திரிஷா இல்லை. வந்தாரா வரவில்லையா என்ற தகவலும் மொழி பிரச்சனையால் அவரால் உடனடியாக அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. ஒருவழியாக திரிஷா கடத்தப்பட்டு இருப்பது உறுதியானபோது, தன் மனைவியை மீட்க அஜித் ஆடும் அசுர ஆட்டமே மீதிக் கதை.

அஜித் படம் என்றாலே அடிக்கு ஒரு தரம் ஆக்ஷன் தூள் பறக்கும். சில சமயங்களில் கார் கூட பறக்கும். ஆனால் இந்த படத்தில் கதை என்ன கேட்கிறதோ அதை தனது நடிப்பில் கொடுத்து கதை நாயகனாக நடிப்பில் உயர்ந்து இருக்கிறார் அஜித். மனைவி விவாகரத்து பற்றி முடிவெடுத்த நிலையில் அதை ஏற்க இயலாத மனநிலையை நடிப்பில் நெஞ்சுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறார். வஞ்சகர்களின் சதி தெரியாமல் அவர்களுடன் மனைவியை அனுப்பி வைத்து விட்டோம் என்ற குற்ற உணர்வு அடுத்தடுத்த காட்சிகளில் அவர் உடல் மொழி வரை நிரவிக் கிடக்கிறது. கொலைக்கு அஞ்சாத எதிரிகளின் கூடாரத்தில் மனைவியை தேடி அவர் பயணப்படும் கிளைமாக்ஸ் காட்சி வரை நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

அஜித்தின் மனைவி கேரக்டரில் திரிஷாவின் ஆரம்ப கால அன்னியோன்ய அன்பும் பெரு மகிழ்வும் நடிப்பில் கொட்டி கிடக்கிறது. கணவரை பிரிய வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு அவரது நடிப்பில் புது மேனரிசம் தெரிகிறது. வில்லனுக்கு இன்னொருவரை யோசிக்கவே முடியாத அந்த கேரக்டரில் அர்ஜுன் தனது நடிப்பால் பிரமிக்க வைக்கிறார். திரிஷாவை கடத்தி விட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்காத மாதிரி அந்த ஊர் போலீசை அவர் நம்ப வைக்கும் இடத்தில் அந்த அப்பாவி முகம் ரொம்ப டேஞ்சரப்பா. அவரது மனைவியாக ரெஜினா வில்ல முகம் காட்டும் இடத்தில் நிஜமாகவே வயிற்றுக்குள் பயப் பந்து உருண்டோடுகிறது. அர்ஜுனனின் அடியாட் களில் ஆரவ் தனித்து தெரிகிறார். திரிஷாவின் தோழியாக சில காட்சிகளில் ரம்யா சுப்பிரமணியன் வந்து போகிறார். அனிருத்தின் பின்னணி இசையில் இன்னும் பசை இருந்திருக்கலாம். அஜர்பைஜானை அந்தப் பரந்த நிலப்பரப்பை கண்களுக்கு நெருக்கமாக்குகிறது ஓம் பிரகாஷின் கேமரா.

கணவன் மனைவி இல்லற பேதத்தை அடி நாதமாக எடுத்துக் கொண்டு கதையை படிப்படியாக ஆக்ஷன் மோடுக்குள் கொண்டு வரும் வித்தையில் தெளிவாக தேர்ந்து தெரிகிறார், இயக்கிய மகிழ் திருமேனி. இடைவேளை ட்விஸ்ட்டும் கிளைமாக்ஸ் நெகிழ்வும் மகிழ் திருமேனியின் சிறப்பு முத்திரை.

மொத்தத்தில், ‘விடாமுயற்சி’ விஸ்வரூப வெற்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *