‘எங்கள் தங்கம்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Cast: Samantha, Diganth Manchale, Gautami, Anand, Gulshan Devaiah, Sreemukhi
Written by: Raj Nidimoru, Vasanth Maringanti
Directed by: BV Nandini Reddy
Music: Santhosh Narayanan
DOP: Om Prakash ISC
Editor: Dharmendra Kakarala
Produced by: Tralala Moving Pictures
சமந்தா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகியாக திரும்பியுள்ள படம் ‘எங்கள் தங்கம்’. குடும்ப பின்னணியுடன் மாஸ் ஆக்ஷனை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஆரம்பம் முதல் இறுதி வரை சமந்தாதான் முழு படத்தையும் தாங்கி செல்கிறார்.
காதல் திருமணம் செய்து கொண்ட ஸ்வர்ணா, தனது கணவர் அனிருத்துடன் மூன்று வருடங்களுக்கு பிறகு அவரது குடும்பத்தை சமாதானப்படுத்த கிராமத்து வீட்டுக்கு வருகிறார். ஆரம்பத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாத மாமியார் குடும்பத்தின் அன்பை பெறுவதற்காக சமையல் முதல் வீட்டு வேலை வரை தனக்கு தெரியாத விஷயங்களையும் செய்து நல்ல மருமகளாக மாற முயற்சிக்கிறார். இந்த குடும்ப கலாட்டாக்களும் மருமகள்களுக்கு இடையிலான போட்டிகளும் முதல் பாதியை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன.
ஆனால் அமைதியாக வாழும் ஸ்வர்ணாவின் கடந்த காலம் மீண்டும் அவரை தேடி வரும்போது, அவர் சாதாரண பெண் இல்லை என்பதும், ஜான்சி என்ற வேறு முகம் கொண்டவர் என்பதும் தெரிய வருகிறது. அதன் பிறகு குடும்பத்தை காப்பாற்ற அவர் எடுக்கும் அதிரடி அவதாரமே இரண்டாம் பாதியின் முக்கிய அம்சம்.
சமந்தா குடும்ப பெண்ணாகவும், அதிரடி ஆக்ஷன் நாயகியாகவும் இரண்டு விதமான தோற்றங்களில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது உடல்மொழி, நடை, முகபாவனைகள் என அனைத்தும் மாஸ் ஹீரோவுக்கு இணையாக இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகும் அவரது திரை கவர்ச்சி குறையவில்லை.
குல்ஷன் தேவய்யா வில்லனாக நல்ல நடிப்பை கொடுத்திருந்தாலும், அவருடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிக அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. திகந்த், கௌதமி, ஆனந்த், மன்ஜூஷா, ஸ்ரீமுகி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. கிராமத்து குடும்ப சூழலும், ஆக்ஷன் காட்சிகளும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மாஸ் காட்சிகளை நன்றாக உயர்த்துகிறது.
படத்தின் முதல் பாதி குடும்ப பொழுதுபோக்காக கலகலப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் கதை எளிதாக யூகிக்கக்கூடியதாக மாறிவிடுகிறது. சில காட்சிகள் நீளமாக இருப்பதும், சமந்தாவின் பின்னணி மற்றும் வில்லனுடனான மோதல் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.






















