Categories
Cinema News Videos

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன் வெளியீட்டு நிகழ்வு} !!

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட் { முன் வெளியீட்டு நிகழ்வு} !!

நடிகர் சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில், வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் ப்ரீ ரிலிஸ் ஈவண்ட், படக்குழுவினருடன், திரையுலக முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

வெகு கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவினில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள், படம் பார்த்த மகிழ்ச்சியில் படம் குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

எதிர்வரும் மே மாதம் 1 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்….

இயக்குநர் ராஜு முருகன் கூறியதாவது…

எல்லாருக்கும் வணக்கம், டூரிஸ்ட்ஃபேமிலி படம் பார்த்துவிட்டேன், ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு கலகலப்பான, உணர்வுப் பூர்வமான ஃபேமிலி என்டர்டெயினர் படமாக இருந்தது. தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் அன்பைப் பேசுகிற, நம்முடைய மென் உணர்வுகளைப் பேசுகிற மனிதத்தைப் பேசக்கூடிய படைப்புகள் வருவது அரிதாகிவிட்டது. அப்படி வருகிற சில படங்கள் கூட, கிராப்ட் அளவில் சரியாக இல்லாமல், சுவாரசியம் இல்லாமல் போவதால், மக்களுக்கான படங்களாக இல்லாமல் போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில் தான், கதையும் படைப்புத் திறனும் சரியாகக் கலந்த கலவையாக இந்த அற்புதமான படைப்பு வந்துள்ளது. இந்தப்படம் பார்த்த போதே கண்டிப்பாக இப்படத்தைக் கண்டிப்பாகத் திரையரங்குகளில் மக்கள் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். இயக்குநர் அபிஷன் ஜீவிந் உடைய முதல் படம் போலவே தோணவில்லை, படத்தில் அத்தனை முதிர்ச்சி இருந்தது. ஒரு சிக்கலான பின்னணியை எடுத்துக்கொண்டு, எந்த அரசியலும் பேசாமல், மனிதர்களுக்கான அற்புதமான அரசியலைப் பேசியுள்ளார். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை, அறிவுரையாக இல்லாமல்,
செம ஜாலியாக சொல்லியுள்ளார். அவருக்குத் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. சசிகுமார் சாரை பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ அவருக்கென்று மக்களிடம் ஒரு மரியாதை இருந்துகொண்டே இருக்கும். சமீபமாக அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள், அடுத்த தளத்தில் இருக்கிறது, அந்தளவில் மிக முக்கியமான படமாக டூரிஸ்ட்ஃபேமிலி இருக்கும். அழகான கதைகள் கொண்ட மலையாள படங்கள் மாதிரி தமிழில் வருவதில்லை எனும் ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை உடைக்கிற ஒரு தயாரிப்பு நிறுவனமாக மில்லியன் டாலரை நான் பார்க்கிறேன். அப்படி ஒரு அழகான படைப்புகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். இப்படம் அவர்களுக்கு ஹார்ட்ரிக் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் சசி கூறியதாவது…

ஒரு திரைப்படம் பார்க்கிற யாரையுமே சங்கடப்படுத்தாமல் அதே சமயத்தில், சந்தோஷப்படுத்துகின்ற வகையில் ஒரு படம் செய்வது அதிலும் அதை அதை முதல் படமா செய்வதற்கு மிகப்பெரிய மனது வேண்டும். இயக்குநருக்குப் பெரிய மனது இருக்கிறது. படத்தில் ஒவ்வொரு காட்சியும் அத்தனை அழகாக அற்புதமாக உள்ளது. ஸ்ரீலங்கா பின்னணியில் ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதில் அரசியல் பேசாமல், அன்பைப் பேசியதற்காகவே இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக உருக்கும். மில்லியன் டாலர் நிறுவனம் மெயில் பார்த்து இந்தக்கதையைக் கேட்டிருக்கிறார்கள், இது தமிழ் சினிமாவில் நடக்காத அதிசயம், அவர்கள் நல்ல கதைகளைத் தேடி, தயாரிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு அப்பாவாக சசிகுமார் மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார், சிம்ரன் மேடம் உடனான காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. முழுக்க முழுக்க அன்பைப் பேசும் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது..

இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை, டீசர் பார்த்து அவ்வளவு சிரித்தேன், இங்குப் படம் பார்த்தவர்கள் பேசுவதைக் கேட்கும்போது படம் பார்க்கும் ஆவல் கூடுகிறது. சசிகுமார் சார் முகத்தில் இத்தனை நாள் பார்க்காத மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது. சசிகுமார் சாரை, மதுரையிலிருந்து இலங்கைக்குக் கூட்டிப்போனதற்கே பெரிய பாராட்டுக்கள். இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கிறேன் என ஒத்துக்கொள்ளவே ஒரு தைரியம் வேண்டும் அது அவரிடம் இருக்கிறது. ஒரு கதை சுருக்கத்தைப் படித்து ஒரு நிறுவனம் படம் செய்ய ஒத்துக்கொள்கிறது என்றால் அதை நம்ப முடியவில்லை, நல்ல கதைகளைத் தேடித் தயாரிக்கும் மில்லியன் டாலர் நிறுவனம் பெரிய வெற்றி பெற வேண்டும். பசங்க படம் தயாரித்த காலகட்டத்தில் சசிகுமார் சாரை பார்த்தது போலத் தான் அவர்களைப் பார்க்கிறேன் அதே உற்சாகம் அவர்களிடம் இருக்கிறது. வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் த செ ஞானவேல் கூறியதாவது..

இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டேன் கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும். ஒரு ஒரு போர் பத்தி, அது ஏற்படுத்துகின்ற விளைவுகள் பத்தி, ஒரு குண்டு சத்தம் இல்லாமல் ஒரு அது சம்பந்தமான ஒரு அழுகாட்சி இல்லாமல், மிக ஆழமாகப் போரின் வலியை வந்து இந்தப் படம் பேசியுள்ளது. இதோட நகைச்சுவை எல்லாரும் பேசுவார்கள் ஆனால் வலியைச் சொன்னால் கூட நமக்கு அது பாதிக்காது, ஆனால் வலியை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்னு இல்ல அப்படின்னு சொல்றது இருக்கு இல்லையா அது மிகத் துயரமானது. அழகான ரசனையான ஒரு நகைச்சுவைக்கு பின்னால் ஒரு போர் என்ன செய்யும் அப்படிங்கிறது தான் இந்த கதை. பெண்கள், குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பது போன்ற சில விதிகள் போரில் முக்கியம். ஆனால் இப்போது உலகம் கொடூரமாக மாறிவிட்டது, மனிதாபிமானம் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் கொடூரங்களை நாம் தினமும் பார்க்கிறோம். இலங்கையில் போர் எவ்வளவு இரக்கமற்றது என்பதை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். அது உருவாக்கிய தாக்கம் பேரழிவை ஏற்படுத்துவதால் மக்கள் இன்று வரை துன்பப்படுகிறார்கள். படத்தைப் பார்க்கும்போது நான் பிரமித்துப் போனேன், ஏனென்றால் அது போன்ற ஒரு நாட்டிலிருந்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும். இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் விநாயக் சந்திரசேகர் கூறியதாவது..

இந்தப் படத்தில் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் மில்லியன் டாலர் தயாரிப்பு எப்போதும் என்னுடைய படமாகத்தான் பார்க்கிறேன், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் எனக்கு இப்படத்தின் கதை சுருக்கத்தை அனுப்பினார், படிக்க அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஒரு ஆச்சரியம், அவர் ஒரு கல்லூரி ஜூனியர் மாதிரி இருக்கிறார், ஆனால் ஒரு விளையாட்டுப் போட்டியில் திடீரென்று வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வீரரைப் போல் ஆச்சரியப்படுத்துகிறார். சசிகுமார் பற்றி நினைக்கும் போதே சுப்பிரமணியம் படம் ஞாபகம் வந்துவிடும், அப்படி ஒரு சிறப்பான படத்தைக் கொடுப்பது, அவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. இப்படத்தில் அற்புதமான நடிப்பைத் தந்துள்ளார். குட் நைட் ஸ்கிரிப்டை முடித்த போது, யாருக்கும் அது உண்மையில் பிடிக்கவில்லை யாரும் தயாரிக்க முன்வரவில்லை. நான் மனச்சோர்விலிருந்தபோது, தயாரிப்பாளர் யுவராஜ் யாரும் தயாரிக்கவில்லை என்றால், நான் செய்கிறேன் என்று சாதாரணமாகக் கூறினார். மறுநாள் அவர் போன் செய்து தனது சொத்தை அடமானம் வைத்துவிட்டுத் திட்டத்தைத் தொடங்குவோம் என்று கூறினார்.அதை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். மில்லியன் டாலர் எப்போதும் நல்ல கதைகள் செய்யும், இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது..

எல்லோருக்கும் வணக்கம் வள்ளுவர் சொன்னதிலிருந்து ஆரம்பிக்கலாம் அன்பின் வழியது உயிர்நிலை அப்படின்றது ஒரு முக்கியமான ஒரு குரலா நான் பார்க்கிறேன், அதவே கவிஞர் வைரமுத்து எ அன்பே சிவம்ல அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா ! அப்படின்றாரு அதுக்கும் கொஞ்சம் முன்னாடி போனால், அவரே அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயசு 100 ன்னு சொல்றாரு. அவ்வளவு அன்பு நிறைஞ்ச ஒரு படம் எடுத்த அபிக்கு 100 வருட ஆயுள் கிடைக்கட்டும். அவ்வளவு அன்பு இருக்கிற இந்த படம் இப்போதைய காலகட்டத்தில் மிக முக்கியமான ஒரு படமாகப் பார்க்கிறேன். இப்படத்தில் அனைவருமே மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள், சசி சார் சிம்ரன் மட்டும் இல்ல அவங்கள சுத்தி நடிச்சிருக்க அத்தனை பேரும் மிகச் சிறப்பா நடித்துள்ளார்கள். இப்படி ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த மில்லியன் டாலர் நிறுவனத்திற்கு நன்றிகள், அன்பான மனிதர்கள் யுவராஜ் மகேஷ் விஜய் எல்லாரும் எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் புஷ்கர் காயத்திரி கூறியதாவது…

சசிகுமார் சார் படங்கள் மென்மையாகத் தொடங்கி இரத்தக்களரியாக முடியும், அப்படித்தான் நாம் வழக்கமாகப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தப் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவுமே இல்லை, படத்தில் முழு குடும்பத்தையும் உள்ளடக்கிய ஒரு அழகான காட்சி உள்ளது, ஸ்பாய்லர்கள் இல்லை, ஆனால் அந்தக் காட்சிக்காகவே நாங்கள் படத்தை மீண்டும் பார்ப்போம். அந்த குறிப்பிட்ட காட்சி அத்தனை அழகாக இருந்தது. அந்த சிறுவர்களிடம் எப்படி நடிப்பை வாங்கினார்கள் என இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. சசிகுமார் & சிம்ரன் என்று குறிப்பிட்டதற்குத் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பாராட்டுகள். பல படங்களில் சிம்ரன் மேடத்தின் பங்களிப்பு கவனிக்கப்படாமல் போய்விட்டது, இது நிச்சயமாக அந்தப் பட்டியலில் சேராது. இந்தப் படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். ஃபீல்-குட் படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெறுமா? என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கும்போது. மில்லியன் டாலர் பிக்சர்ஸ் சரியான படங்களை ஹிட்டாக கொடுத்து தொடர்ச்சியாக நல்ல படங்கள் ஜெயிக்கும் என நிரூபித்து வருகிறது. இந்தப்படமும் அவர்களுக்குப் பெரிய வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்

நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது…
எல்லாருக்கும் வணக்கம் இந்த படத்தைப் பார்த்து அழுகையை அடக்கிக் கொண்டு இருந்தேன். சமீபமாக சசிகுமார் சார் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே அற்புதமாக உள்ளது. அவர் அடுத்துச் செய்யப்போகும் படம் பற்றியும் தெரியும். இப்போதெல்லாம் எமோஷனலாக இருந்தால் கிரிஞ்ன்னு சொல்லிவிடுகிறார்கள். அயோத்தி டைரக்டர் இந்த டைரக்டர் என எல்லாருக்கும் பெரிய நம்பிக்கை கொடுக்கிறார் சசி சார். இப்படத்தின் இரண்டாம் அத்தனை எமோஷனலாக இருந்தது, இசையில் ஷான் கலக்கியிருக்கிறார், திரைக்கதைக்குள் சென்று பின்னணி இசை அமைத்துள்ளார். ஒவ்வொரு தயாரிப்பாளரும் படம் எடுக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும்போது, மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தங்கள் ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் மணிகண்டன் கூறியதாவது..

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் ரெடியான இந்த இரண்டு வாரத்தில் படம் பற்றி நிறைய நல்ல விசயங்களைக் கேட்க முடிகிறது. ஆனால் எனக்கு 1.5 வருடங்களுக்கு முன்பே இந்தப்படம் பற்றித் தெரியும். அதாவது இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முழு ஸ்கிரிப்டையும் எனக்குச் சொன்ன போதே மிரட்டலாக இருந்தது. அவர் கதை சொல்வதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சசி சாரைத் வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துப் பார்க்க முடியவில்லை படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும். இசையமைப்பாளர் ஷான் நல்ல நண்பர் மணிக்கணக்கில் அவருடன் போனில் பேசுவேன், அவர் மனைவி திட்டுவார். இப்படத்தில் அற்புதமான இசையைத் தந்துள்ளார். இப்படி ஒரு கதையை நம்பி தயாரிப்பது அத்தனை எளிதான விசயமல்ல, ஆனால் அதை மிக எளிதாக மில்லியன் டாலர் சாதித்துள்ளனர். கண்டிப்பாக இந்தப்படம் பார்க்கும் அனைவரையும் மகிழ்விக்கும் நன்றி.

லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூறியதாவது

இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு திரையரங்கில் கைதட்டல் நிச்சயம், இது ஒவ்வொரு அறிமுக இயக்குநரின் கனவு. கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றியைப் பெறும். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மும்பை இந்தியன்ஸ் போன்றது. அவர்கள் எங்கிருந்து புதிய திறமைகளைத் தேடுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மிக அட்டகாசமான கதைகளைத் தயாரிக்கிறார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் எதிர்காலத்தில் என்ன பெரிய படங்களைத் தயாரித்தாலும், இதே போல புதிய இளைஞர்களைத் தொடர்ந்து திரைத்துறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

லவ்வர் பட இயக்குநர் பிரபுராம் வியாஸ் கூறியதாவது..

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் திரைக்கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை இயக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனம். அவர்கள் டூரிஸ்ட் ஃபேமிலி மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒரு அறிமுக இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார்கள். இது அவர்களால் மட்டுமே முடியும். இந்தப்படமும் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.

தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறியதாவது…

டூரிஸ்ட் ஃபேமிலி உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படம். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஒரு பிராண்டாக மாறிவிட்டது. நடிகர்களும் இயக்குநர்களும் விரைவாக நட்சத்திரங்களாக மாறுவது வழக்கம். ஆனால் ஒரு தயாரிப்பு நிறுவனம் அதை அடைவது மிகவும் கடினம். குட் நைட் அப்புறம் லவ்வருக்குப் பிறகு, அந்த தயாரிப்பு நிறுவனம் மீது, மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். டீசரிலேயே டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய வெற்றி பெற்று விட்டது. எனது நண்பர்கள் பலர் இப்படம் பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். கண்டிப்பாக இப்படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் வாழ்த்துக்கள்.

நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது…

டூரிஸ்ட் ஃபேமிலி இந்த நூற்றாண்டின் சிறந்த படம் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சில மாதங்களுக்கு முன்பு, இலங்கையைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்தார்கள். நாங்கள் இங்கு வந்து 35 வருடங்கள் ஆகின்றன, ஆனால் எங்களுக்கு இன்னும் ஒரு மரியாதைக்குரிய அடையாளம் கிடைக்கவில்லை என்று அவர்கள் கவலையுடன் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். அந்த வலி இந்தப்படம் பார்க்கும் போது புரிந்தது. இந்த படத்தைத் தாண்டி அபிஷன் ஜீவிந்த் பெரிய வெற்றியைப் பெறப் பெற முடியாது. சசிகுமாருக்கு சுப்பிரமணியபுரம் என்றால், எனக்கு நாடோடிகள், அது போல அபிஷனுக்கு இந்த டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும். இதை விடச் சிறந்த படத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. நாடோடிகள் வெளியானபோது, கேபி சார் என்னுடன் சேர்ந்து அதைப் பார்க்க ஆர்வமாக இருந்தார். நாங்கள் ஒரு தியேட்டருக்குச் சென்றோம், பார்வையாளர்கள் டைட்டிலுக்கே கைதட்டினார்கள், கேபி சார் என்னை நோக்கித் திரும்பி, அவர்கள் அனைவரும் ஏன் டைட்டிலுக்கு ஆரவாரம் செய்கிறார்கள் என்று கேட்டார். எனக்கும் அது புரியவில்லை. படம் வரும் படத்தின் மீது மக்களுக்கு நல்ல அன்பு இருந்தது. இந்தப் படத்திற்கும் அந்த மேஜிக் நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தில் பல காட்சிகளை மறக்க முடியவில்லை, படத்தில் ஒரு நாய் கூட அற்புதமாக நடித்துள்ளது. படத்தைப் பார்த்த பிறகு, அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் ஆவலுடன் இருந்தேன், மேலும் ஒரு சிறிய பகுதியிலாவது என்னை டப்பிங் கலைஞராக்குமாறு குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன் ஆனால் படத்தை முடித்துவிட்டார்கள். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றியைக் குவிக்கும் நன்றி.

பாடலாசிரியர் மோகன்ராஜன் கூறியதாவது..

இங்குள்ளவர்களுக்கு இது புதிதாக இருக்கலாம் இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது முன்பே தெரியும். இந்தப்படம் மீது அத்தனை நம்பிக்கை இருந்தது. இயக்குநர் அபிஷன் ஜீவிந் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த டீசரை இயக்குநர் சசி சார் பார்த்த பிறகு, அது அவருடைய திரைப்படப் பாடல்களில் ஒன்றின் கவிதை வரியை நினைவுபடுத்தியதாகச் சொன்னார். என்னிடம் போன் நம்பர் வாங்கி உடனே இயக்குநரைப் பாராட்டினார். நான் படத்தைப் பார்க்க வரச் சொன்ன ஒரே நபர் அவர்தான். படம் முடியும் வரை அந்த மூன்று மணி நேரம் நான் மிகவும் பயந்தேன். ஆனால் பார்த்த பிறகு அவர் மிகவும் மனதைத் தொடும் வாழ்த்துக்களைச் சொன்னார். இந்த மேடையிலும் அதையே பகிர்ந்து கொண்டார். அவருக்கு நன்றி. அண்ணன் சசி மிக நன்றாக நடித்துள்ளார். இப்படையான கதையைத் தைரியமாகத் தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பல படங்கள் தயாரிக்க வேண்டும் நன்றி.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் கூறியதாவது…

டூரிஸ்ட் ஃபேமிலி என்பது மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் உடன் எனது மூன்றாவது படம், இன்றுவரை அவர்களின் அனைத்து படங்களுக்கும் நான் எடிட்டராக இருக்கிறேன். எனக்கு முழு ஆதரவு தந்து, தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்கு அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். இப்படம் கண்டிப்பாக அனைவரும் ரசிப்பீர்கள் நன்றி.

ஆவேசம் நடிகர் மிதுன் கூறியதாவது:

டூரிஸ்ட் ஃபேமிலியில் மூத்த பையன் நான் தான். ஆவேசம் எனக்கு முதல் படமாக அமைந்தது. அதே போல் மிகச் சிறப்பான படமாக டூரிஸ்ட் ஃபேமிலி அமைந்துள்ளது. இந்த மாதிரி ஸ்கிரிப்ட்டில் நான் நடிக்க என்று எனக்குச் சந்தேகம் இருந்தது. சிறுவயதிலிருந்தே எனக்குத் தமிழ் புரியும். ஆனால் இலங்கை தமிழ் பேசும் பையனாக நடிக்க எனக்குப் பதட்டமாக இருந்தது. படத்தில் நடிக்க உதவியதற்காக முழு குழுவினருக்கும் நன்றி. சசி சார், சிம்ரன் மேடம், இயக்குநர் அபி அண்ணா அனைவருக்கும் நன்றி

குழந்தை நட்சத்திரம் கமலேஷ் கூறியதாவது…

நான் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் அது தான் எனக்கு அறிமுகமாக அமைந்தது. அதன் பிறகு நான் ஜோதிகா மேடத்துடன் ராட்சசி படத்தில் அறிமுகமானேன். அதன் பிறகு கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. சசி சார், சிம்ரன் மேடமுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் என்னைச் சொந்த பையன் போலப் பார்த்துக் கொண்டார்கள், இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கூறியதாவது…

நான் இந்தத் துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நான் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மனநிலையில் இருக்கிறேன். இந்த 10 வருடத்தில் அதிர்ஷ்டவசமாக, நான் பல நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, அது முற்றிலும் என் அதிர்ஷ்டம். ஜெய் பீம் படத்திற்குப் பிறகு, நான் உருவாக்கும் இசையைப் பெரிய பொறுப்பாகவே பார்க்கிறேன். நான் எந்த படத்திற்கும் சாதாரணமாக இசையமைக்க விரும்பவில்லை. அந்தப்படம் சிறப்பாக இருக்க வேண்டும். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் எனது திரைப்பயணத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் பெருமைப்படக்கூடிய நல்ல திரைப்படங்களை எனக்குத் தந்துள்ளனர். ஜெய் பீம் படத்திற்கு முன்பே மணிகண்டன் மூலமாக அவர்களுடனான எனது பயணம் தொடங்கியது. குட் நைட் படத்தின் இசை வெற்றிக்கு அவரது நடிப்பு ஒரு முக்கிய காரணம். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனித்திறமை கொண்ட இயக்குநர். அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படத் இயக்குநராக இருப்பார், ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள், சசிகுமார் சார் எல்லோருடன் இயல்பாக ஒரு சகோதரப் பிணைப்பைக் கொண்டு வந்து விடுகிறார். இப்படம் அவருக்கு முக்கியமான படமாக இருக்கும். தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இப்போது தமிழில் என்ன மாதிரியான படங்கள் வருகின்றன என்று கேட்டால், அதற்கான பதிலாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது…

நான் சின்னப் பையனா இருந்தபோது, என் அம்மா நிறையப் பேரை ஊக்கப்படுத்திப் பாராட்டுவார். நான் இயக்குநர் ஆனதுமே எல்லோரும் என் அம்மாவை பாரட்டிபார்கள், ஏனென்று யோசித்தேன். இப்போது அவங்களலாதான் நான் நல்ல ஆளா இருக்கேன்னு எனக்குப் புரியுது. * என் அப்பா ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். சாலையோரத்தில் தூங்கி வேலை செஞ்சிருக்கார். நான் ஒரு இயக்குநரான பிறகு, என் எல்லா கஷ்டங்களையும் நானும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நான் உறுதியா இருந்தேன். ஆனால் நான் வளர்ந்து வந்தபோது, என் அப்பா எனக்கு இதுபோன்ற கஷ்டங்களைச் சந்திக்க விடவே இல்லை. சசிகுமார் சார் இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா நடித்திருக்கிறார். என்னையும் சேர்த்து மூணு குழந்தைகள். அவர் எனக்கு அப்பா மாதிரி தான். சிம்ரன் மேடம் படத்துல வந்த பிறகுதான், இந்தப் படம் அடுத்த கட்டத்துக்குப் போச்சு, எல்லாரும் அதைப் பத்திப் பேச ஆரம்பித்தார்கள். அவருக்கு நன்றி. யோகி பாபு சார் ஆரம்பத்தில் எங்களுக்கு 5 நாள் கால்ஷீட் கொடுத்தார். முதல் நாள் ஷூட்டிங் முடிஞ்சதும், அவர் வந்து, பணத்தைப் பத்தி கவலைப்படாதீங்கன்னு சொல்லி, இந்தப் படத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் டேட்ஸ் தருவதாகச் சொன்னார். எம்.எஸ். பாஸ்கர் சார் நேரம் தவறாதவர். அவர் மிகத் திறமையான நடிகர். ஒவ்வொரு காட்சிக்கும், அவர் 3 விதமான நடிப்பை வழங்குவார், எனக்கு மிகவும் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கச் சொல்வார். எனது வெற்றியில் 50% ஐ ஷான் ரோல்டனுக்கு அர்ப்பணிப்பேன். இசையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவர் ஒரு தூணாக இருந்து வருகிறார். எனது இயக்குநர் குழு சிறந்தது. எனது அடுத்த படத்திற்கும் அவர்களைக் கூடவே வைத்துக்கொள்வேன். படத்தை விளம்பரப்படுத்துவதில் முழுமையாகச் செயல்பட்ட வெங்கட்ரமணனுக்கு நன்றி. படத்தில் ‘இராகி’ என்ற அழகான பாடலையும் அவர் பாடியுள்ளார். இந்த சிறிய டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை உலகம் முழுவதும் பரவலாக எடுத்துச் சென்று எங்களுக்கு ஒரு பெரிய வெளியீட்டை வழங்கிய விதுரரின் சகோதரருக்குப் பாராட்டுகள். மில்லியன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு என் நன்றிகள்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் கூறியதாவது…

டூரிஸ்ட் ஃபேமிலி ஸ்கிரிப்டை படித்ததும் எனக்குப் பிடித்தது. இந்தக்கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்பினேன், கதை சொன்ன உடனேயே இயக்குநர் அபிஷன் ஜீவிந்திடம் நீ தமிழ் சினிமாவில் பெரிய உயரத்திற்குச் செல்வாய் என பாராட்டினேன். படத்தைப் பார்த்த பிறகு, அவர் சொன்ன அளவிற்கு 100% கொடுக்கவில்லை, ஆனால் அவர் 200% செய்து முடித்தார் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ஒரு ஸ்கிரிப்டைக் கேட்டு, தயாரிக்க முடிவு செய்த பிறகு, ஷான் ரோல்டனின் இசை, பரத் விக்ரமனின் எடிட்டிங் என அவர்களை நியமித்துவிட்டு நான் நிம்மதியாகி விடுவேன். அதில் ஆடியோ உரிமைகளும் அடங்கும். சசிகுமார் சாரைத் தேர்ந்தெடுத்த பிறகு, திங்க் மியூசிக் சந்தோஷ், விரைவாகவும் எளிதாகவும் அணுகும் வகையிலிருந்து வருகிறார். எங்கள் விநியோக கூட்டாளியான விதூர் சகோதரருடன் சேர்ந்து, வினோத் சிஜே சகோதரரும் படத்தை இவ்வளவு பெரிய அளவில் கொண்டு செல்வதில் ஒரு பெரிய சொத்தாக இருந்துள்ளார். ஒரு சின்ன படம் ஒரு பெரிய வெளியீட்டைக் காண்பது அரிது. சசிகுமார் சார் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமே இல்லை. எங்கள் எல்லா சித்திரவதைகளையும் தாங்கிக்கொண்டு இந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி. இப்போதும் நீங்கள் உங்கள் மற்ற படப்பிடிப்பை ஒத்திவைத்து, எங்களுடன் இருக்கிறீர்கள் நன்றி. நான் அடிக்கடி குழந்தைகள் காப்பகத்திற்குச் செல்வேன். நாங்கள் அந்த குழந்தைகளுக்கு குட் நைட் திரைப்படத்தைத் திரையிட்டோம், அவர்களின் எதிர்வினைகளைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் அனைவரும் இதுபோன்ற மகிழ்ச்சியான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரிக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர். அன்று நான் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்தேன், அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் நன்றி.

நடிகர் சசிகுமார் கூறியதாவது…

இவ்வளவு தரமான படத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அவர்களுக்கு நன்றி. நான் கம்பெனி புரொடக்‌ஷன்ஸைத் தொடங்கியபோது, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி சார் தான் எனக்கு அதற்கு உத்வேகமாக இருந்தார், அவர்களின் 90 படங்களில், 48 படங்கள் அறிமுக இயக்குநர்கள் தான். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தொடர்ந்து புதிய இயக்குநர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன், மேலும் அவர்களின் சிறந்த சிந்தனைக்காக மட்டுமே அவர்களின் பேனர் படங்களைப் பார்க்குமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். * இன்றுவரை தங்கள் உரிமைகள் மற்றும் அடையாளங்களுக்காகப் போராடும் அகதிகள் மீது பெரும் அக்கறையும் அன்பும் உள்ளது. அயோத்தி மற்றும் நந்தனைப் போலவே, டூரிஸ்ட் ஃபேமிலி அகதிகளின் வலியை அழுத்தமாகச் சொல்லும், மிகவும் தகுதியான பாதையை அமைக்கும் படமாக இருக்கும் என்று என்று நம்புகிறேன்

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Categories
Cinema News Videos

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” எனக்கு இந்த மேடை மிக முக்கியமான மேடை. ‘ஈசன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து..’ எனும் பாடலை நாங்கள் எந்த படத்திற்காக எழுதினோமோ.. அந்தப் படத்தில் இருந்து அந்தப் பாடலை நீக்கி விட்டார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எனக்கு போன் செய்து, ‘ஈசன் படத்தில் ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடல் இடம்பெறுகிறது. சசிகுமார் சாருக்கு அந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது’ என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த தருணங்கள் இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் ஸ்டுடியோவில் சசிகுமாரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு , ‘அவர் பாடல் சிறப்பாக இருக்கிறது’ என வாழ்த்தினார். அந்த வாழ்க்கை என்னால் மறக்க இயலாது. அந்தப் பாடல் எனக்கான அடையாளமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து யுவன் சார் ஸ்டுடியோவில் ஒருவர் என்னை சந்தித்து நான் பட தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு வாய்ப்பு தருவேன் என்று வாக்குறுதி தந்தார். அவர்தான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். அவர் தயாரித்த ‘குட்நைட் ‘ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பையும் வழங்கினார். அவர் தயாரிப்பில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நானும் பணியாற்றியதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு நாயகன் சசிகுமார் என்று சொன்னவுடன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் பாடல்களை எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதேபோல் இயக்குநர் அபிஷனும் கதையை சொன்னது போல் எடுத்திருக்கிறார். சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் சிறப்பாக உருவாகும் போது தான் அதனை நாம் கொண்டாட முடியும். இந்தப் படத்தின் இயக்குநர் அபிஷன் சின்ன பையன் தான். இருந்தாலும் மிகப்பெரிய இயக்குநராக வருவார். சசிகுமார் இப்படத்தில் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மற்றொரு தயாரிப்பாளர் மகேஷ் ராஜும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மொட்டை மாடியில் ஒரு பாடலை பாடுவார். அந்தப் பாடல் யூடியூப்பில் பிரபலமானது. அந்த பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இவருடன் இணைந்து எப்போது நாம் பணியாற்றுவோம் என ஆவலுடன் காத்திருந்தேன். இயக்குநர் பொன் குமார் மூலம் ‘1947’ எனும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். ‘குட்நைட்’ படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது. மிகவும் மகிழ்ச்சி. அவருடன் ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றும் அனுபவமே சிறப்பானது. அவருடைய பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
‘குட்நைட் ‘, ‘ லவ்வர் ‘ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும். படம் வெளியாவதற்கு முன் படத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. படம் வெளியான பிறகும் இந்த பேச்சு நீடிக்கும். இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பணியாற்றி அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், ” குட்நைட் – லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எங்களின் மூன்றாவது படம். இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறோம். இந்த படமும் ஹிட் ஆகும் என நம்புகிறேன்.
சசிகுமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்- நடிகர் என பிரபலமாக இருக்கும் அவர் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து, அவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவோம் என நம்புகிறேன்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பொருத்தவரை இது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் அபி என்னை சந்தித்து கதையை சொல்லும்போது அவருக்கு 23 வயது தான். கதையை இடைவேளை வரை கேட்கும்போது அதிர்ச்சியாகி விட்டேன். முழு கதையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.‌ அந்தக் கதையை கேட்டதும் இயக்குநர் அபியை எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்திருந்தது.‌ அந்தக் கதையில் அவர் சொன்ன விசயங்கள் ஜீவன் உள்ளதாக இருந்தது. அவர் கதையை எப்படி சொன்னாரோ… அதை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை நாங்கள் குடும்பமாக இணைந்து உருவாக்கினோம். மே மாதம் முதல் தேதி அன்று இப்படத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். ஆதரவு தாருங்கள்.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் அற்புதமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது பல காட்சிகளுடன் நம்மால் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இதற்கு இவரின் இசை உதவி செய்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், நடிகைகளும் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘குட்நைட் ‘,’லவ்வர்’ என்ற இரண்டு படத்திற்கும் வெற்றியை வழங்கி இருக்கிறீர்கள். அதனைத் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தையும் வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், ” குட்நைட் – லவ்வர் ஆகிய இரண்டு படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவால் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யை உருவாக்க முடிந்தது. இதற்காக முதலில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அபிஷன் கதையை சொல்லத் தொடங்கியதும் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு ‘மொமென்ட்ஸ்’ வரும். அதைக் கேட்டவுடன் இந்த படத்தை நிச்சயம் தயாரிக்கலாம் என்றேன். அந்தத் தருணத்தில் இந்த படம் எப்படி வரும் என்று நான் நினைத்திருந்தேனோ.. அதேபோல் இயக்குநர் அபிஷன் உருவாக்கி இருந்தார். இந்த வயதில் இவ்வளவு பெரிய கடின முயற்சியை நான் கண்டதில்லை. அவர் எதிர்காலத்தில் மிக சிறப்பான இயக்குநராக வருவார்.‌ இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும்.‌ திரை உலகில் அவருக்கு பேராதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

சசிகுமார் இல்லை என்றால் நாங்கள் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டோம். 16 வயதுடைய மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் இவரைத் தவிர வேறு யாரும் எங்களின் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையை புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிப்பதற்கு ஒரு துணிச்சல் தேவை. அதை மேற்கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்த சசிகுமாருக்கு நன்றி.

மோகன் ராஜனின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில கலைஞர்கள் இல்லை என்றால் படம் உருவாக்க வேண்டாம் என நினைப்பேன் . அத்தகைய கலைஞர்கள் தான் மோகன் ராஜன் – ஷான் ரோல்டன் – பரத் விக்ரமன். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். சில படங்களுக்கு இசையை தவிர்த்து விட்டு ரசிக்க முடியாது. எந்த கதையை நான் கேட்டாலும் முதலில் இதில் ஷான் ரோல்டனின் இசை எப்படி இருக்கும் … என்ன மாயஜாலம் செய்யும் … என்று தான் யோசிப்பேன். அப்படி யோசித்துக் கொண்டுதான் கதையையே கேட்பேன். இதுவரை நான் கேட்ட கதைகளுக்கு நான் நினைத்ததை விட அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். இதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகேஷ் என் பார்ட்னர். பொதுவாக இரண்டு பேர் இணைந்து பணியாற்றினால் கிரியேட்டிவ் டிஃபரன்ஸ் வரும்.‌ ஆனால் மகேஷ் நான் என்ன நினைத்து செய்தாலும் அதற்கு முழு பக்க பலமாக இருப்பார். நாங்கள் இதுவரை இரண்டு படங்களை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறோம். இப்பொழுது மூன்றாவது படத்தில் இணைந்திருக்கிறோம். மகேசின் ஆதரவு இல்லை என்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் யாரையும் எந்த ஒரு தருணத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தாது என்பதை மட்டும் நான் இங்கு உறுதியாக சொல்கிறேன். இந்தத் திரைப்படம் எங்கள் குழுவினரின் நேர்மையான முயற்சி. அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அன்பை கொடுக்கும். ரசிகர்களை கவர்வதற்கான அனைத்து விசயங்களும் இப்படத்தில் உள்ளது. மே முதல் தேதி அன்று வெளியாகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசுகையில், ” பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படத்தை இயக்குவது தான் லட்சியம் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு புள்ளிக்குப் பிறகு நான் யாரிடமும் பணியாற்றாமல் கதை எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய கதையை எந்தவித தயக்கமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் கேட்டனர். கதையை கேட்ட பிறகு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள் மகேஷ் – யுவராஜ் ஆகியோருக்கு என் முதல் நன்றி.
படத்தின் முதல் பாதி கதையை கேட்டதும் தயாரிப்பாளர் யுவராஜ் இப்படத்தை உருவாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் அற்புதமானது.‌

இப்படத்திற்கு சசிகுமார் தான் ஹீரோ என நிச்சயத்துக் கொண்டு அவரை சந்தித்து கதை சொல்லப் போனேன். கதையை அவரிடம் சொல்லும் போது அவர் எந்த ரியாக்ஷனையும் காண்பிக்கவில்லை. அதன் பிறகு நான் சற்று சோர்வடைந்தேன். அன்று மாலை தயாரிப்பாளர் யுவராஜ் போன் செய்து சசிகுமார் சாருக்கு கதை பிடித்து விட்டது என சொன்னார். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இப்படத்தில் குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கு சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் முதன்மையானவர் ஷான் ரோல்டன். அவரின் இசை இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்த
படத்தின் மூலம் எனக்கு பாராட்டு கிடைத்தால்.. அதில் 50 சதவீதம் ஷான் ரோல்டனைத்தான் சாரும். அந்த அளவிற்கு இந்த படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார்.

மோகன் ராஜனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் சிலிர்ப்பானது. ‘முகை மழை’ என்ற வார்த்தைக்கு அவர்தான் பொருள் சொல்லி புரிய வைத்தார். ஷான் ரோல்டன் – மோகன் ராஜன் ஆகிய இருவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.

சிம்ரன் மேடம் போன்ற அனுபவம் மிக்க நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.‌ மிதுன் ஜெய் சங்கர் – கமலேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நிறைய நடந்தது.‌ அதனால் முதலில் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் என்னிடம் எப்போது நம்பர் ஒன் ஆக வரப்போகிறீர்கள் ? என கேட்கிறார்கள். நான் அதற்காக வரவில்லை.‌ நல்ல படைப்புகளுக்கு இசையை வழங்கி அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் மூலமாக கிடைக்கும் நல்ல விசயங்கள் தான்.. என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

திடீரென்று உயரத்திற்கு சென்று விட்டால்… அந்த உயரத்தில் நின்று கொண்டு, அந்த உயரத்தை தக்க வைப்பது என்பது கடினமான செயல்.‌ பலர் பல ஐடியாக்களை சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை இசை இந்த சமூகத்திற்கு எப்படி பலன் அளிக்க வேண்டும். எந்த மாதிரியான இசையை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது போன்ற சிந்தனையை கொண்டவன் நான். அந்த வகையில் நான் இதுவரை என்னுடைய சினிமா இசை பயணத்தில் சந்தித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நல்ல படங்களில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.

என்னுடைய நண்பரும் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர்மான விஜய் இப்படத்தின் கதையை கேளுங்கள் என்று சொன்னார். பொதுவாக நான் கதையை கேட்பதை தவிர்த்து விடுவேன். திரைக்கதையை வழங்கி விடுங்கள். நான் வாசித்து தெரிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன். திரைக்கதையை வாசிக்கும் போது அந்த திரைக்கதையில் இசைக்கான வேலை என்ன? என்பது தெரிந்துவிடும். ஏனெனில் சில கதாபாத்திரங்களில் மன ஓட்டத்தை இசையால் சொல்லிவிட முடியும்.

இருந்தாலும் இப்படத்தின் இயக்குநர் அபி கதையை நான் ஒரு முறை சொல்கிறேன் கேளுங்கள் என்றார். கதையை இரண்டு மணி நேரம் சொன்னார். கதையை சொல்லும்போது திரையில் காட்சிகளாக இப்படித்தான் தோன்றும் என்ற விசுவலை உண்டாக்கினார். அவர் கதை சொன்ன விதத்தை பார்த்து வியந்து போனேன். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் நல்ல கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். ஒரு டிராமா இருக்க வேண்டும். குடும்ப மதிப்பீடுகள் இருக்க வேண்டும்.. என பல விசயங்கள் உண்டு. இதனை அனுபவமிக்க இயக்குநர்களுக்கு இயல்பானது. ஆனால் அபி போன்ற ஒரு புதுமுக இயக்குநருக்கு… இத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.‌

ஒரு கட்டமைப்புக்குள் இயங்குவது என்பது வேறு. ஒரு இயக்குநராக என்னுடைய குரல் இது என வெளிப்படுத்துவது வேறு. ஆனால் இயக்குநர் அபி தன் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னார். இந்தப் படம் என்னை சிந்திக்க வைத்தது. இதற்காக உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.

சசிகுமாரை இயக்குநராகவும், நடிகராகவும் பல கோணங்களில் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணைந்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பாடலாசிரியர் மோகன் ராஜன் என்னுடைய இனிய நண்பராக அறிமுகமானதற்கும் அவருடைய ஈசன் படத்தில் இடம்பெற்ற பாடல் தான். அதற்காகவும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.‌ சசிகுமாரின் நடிப்பு இந்தப் படத்தில் ஸ்பெஷலாக இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். மகிழ்ந்தேன்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் – அவருடைய தமிழ் இந்த கால இளைஞர்களுக்கு அவசியமானது. புதுமை என்பது.. ஏற்கனவே இருந்ததன் தொடர்ச்சி தான். தமிழ் திரை உலகில் பணியாற்றுகிறோம். பாடலில் தமிழுக்கு இடமில்லை என்றால் எப்படி? இது போன்ற விசயத்தில் என்னைப்போல் உறுதியாக இருந்து பாடலில் தமிழை இடம்பெறச் செய்வதில் அவருக்கும் பங்கு உண்டு. நாங்கள் தங்கிலீஷிலும் பாடல் எழுதுவதுண்டு. இருந்தாலும் தமிழிலும் பாடல்கள் இடம்பெற வேண்டும். தமிழ் மொழியை காதில் கேட்க வேண்டும். ஏனெனில் தமிழ் ஒரு செம்மொழி. அவரும் நானும் சந்தித்து பேசத் தொடங்கினால்.. நேரம் செல்வதே தெரியாது. மகிழ்ச்சி நீடிக்கும்.

கலை என்பது மகிழ்ச்சியிலிருந்து தான் பிறக்கிறது. கலைஞர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடமிருந்து பிறக்கும் கலையும் மகிழ்ச்சியாக இருக்கும். கலை என்பது உட்கிரகித்தல் தான். ஒத்த சிந்தனை உள்ளவர்கள் இணையும்போது தான் நல்ல படைப்பு கிடைக்கும். இப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தை நீங்கள் தியேட்டரில் நன்றாக அனுபவித்து ரசிப்பீர்கள்.

இங்கு குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை பழைய விசயமாக பேசுகிறார்கள். இது தவறு. குடும்பங்கள் தான் நல்ல விசயங்களை நினைவு படுத்தும். என் குடும்பம் இல்லை என்றால் நான் இந்த தொழிலில் இருக்க முடியாது.‌ சில பேர் ‘குடும்பம் தானே தடையாக இருக்கிறது’ என்பார்கள். ஆனால் குடும்பம் தான் நமக்கு பக்க பலமாக இருக்கிறது. நீங்கள் தவறு செய்தால் முதலில் கேள்வி கேட்பது குடும்பம் தான். அதே தருணத்தில் நீங்கள் வீழ்ச்சி அடையும் போது உங்களை கை தூக்கி விடுவதும் குடும்பம் தான். அதனால் குடும்ப படங்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.

குடும்பங்களில் சினிமாவின் தாக்கம் அதிகம். அதனால் குடும்பத்தை பற்றிய சினிமாக்களின் எண்ணிக்கை குறையக்கூடாது. அந்த வகையில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நாம் கொரிய நாட்டு திரைப்படங்களை பார்த்து ரசிக்கிறோம். எந்த மாதிரியான கொரியன் படங்களை பார்த்து ரசிக்கிறோம் என்பதை பாருங்கள். மொழி என்ற எல்லையை கடந்து மனித குடும்பத்திடம் பேசும் படங்களை தான் பார்த்து ரசிக்கிறோம். அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி தமிழ் படமா? என்று கேட்டால்.. ஆமாம் தமிழ் படம் தான். அதையும் கடந்து நம் மனித குடும்பத்திற்கு தேவையான அழகான கொண்டாடப்பட வேண்டிய கொண்டாட்டமான அன்புச் செய்தியை சொல்லப் போகும் சிறந்த படமாக இருக்கும் ” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், ” படக்குழுவினர் மேடையில் இவ்வளவு விசயங்களை பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இது போன்ற மேடையில் தான் தங்களது நன்றியை தெரிவிக்க இயலும். படம் வெளியான பிறகும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை மட்டும் அறிமுக இயக்குநருக்கு அறிவுரையாக சொல்கிறேன். நன்றி தெரிவிப்பது நல்ல விசயம்.

இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவிற்காகத்தான் சற்று பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினரான நாங்கள் பேசுவதை விட.. படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த ‘குட்நைட்’ ‘லவ்வர்’ என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என நினைத்து, நான் தான் இந்த படத்தில் படத்திற்குள் வந்தேன். இது எனக்கு தான் பெரிய விசயம்.

கதை சொல்லும் போது இயக்குநர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதை கவனித்துக் கொண்டே இருந்தேன். இயக்குநருடன் வந்த தயாரிப்பாளர் யுவராஜ் ரியாக்சன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நான் இது போன்றதொரு நல்ல கதையை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையை சிறிது மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.

எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். அவர்களுக்கும் இந்த கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும் இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ. அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.

இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால் இந்த கதையின் நாயகன் ஈழத்தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை பார்க்கும் போது காமெடியாக இருக்கும்.

பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும். உங்களை – ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியையும் , விசயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் . இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து- மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.

உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது? என்று கேட்டபோது அவர் ‘தெனாலி’ திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது ‘தெனாலி’, ‘மொழி’ போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார்.

இந்த படத்தில் பாடல்களும், இசையும் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் அன்பை போதிக்கிறது. மே மாதம் முதல் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.