‘எப்போதும் ராஜா – பாகம் 1’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Win Star Vijay, Deplina, Kumthash, Joe Malluri, P.Soma Sundaram, Lion Kumar
Directed By : Win Star Vijay
Music By : Kabileshwar – Ramji
Produced By : Win Star Vijay
குளோபல் ஸ்டார், யுனிவர்சல் ஸ்டார், பவர் ஸ்டார் வரிசையில், வின் ஸ்டார் என்ற பட்டத்துடன் நாயாகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வின் ஸ்டார் விஜய் கோலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் படம் ‘எப்போதும் ராஜா – பாகம் 1’.
நாயகன் வின் ஸ்டார் அண்ணன், தம்பி என இரண்ட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தம்பி வாலிபால் விளையாட்டு வீரராகவும் இருக்கிறார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரியான அண்ணனுக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள். வாலிபால் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் தம்பிக்கும் பல எதிரிகள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் தங்களது எதிரிகளையும், அவர்களால் வரும் சோதனைகளையும் தாண்டி வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார்கள், என்பது தான் ‘எப்போதும் ராஜா – பாகம் 1’ படத்தின் கதை.
போலீஸ் மற்றும் விளையாட்டு வீரர் என்று முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் வின் ஸ்டார் விஜய், காதல், கோபம், சோகம், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளையும் அசால்டாக வெளிப்படுத்தி அதகளப்படுத்தியிருக்கிறார். தான் நடிப்பது தான் நடிப்பு, என்று அவர் இஷ்ட்டத்துக்கு நடித்திருந்தாலும், ரசிகர்களை இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து சிரிக்க வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் டெப்ளினா, வில்லியாக நடித்திருக்கும் கும்தாஸ், மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பிரியா என அனைவரும் இயக்குநர் வின் ஸ்டாரின் கைப்பாவைகளாக சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்கள்.
ஜோ மல்லூரி, பி.சோம சுந்தரம், லயன்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் கதைக்கு ஏற்ற்படி அல்லாமல் தங்களுக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவாளர் கேமரா மட்டும் இன்றி செல்போனில் கூட சில காட்சிகளை படமாக்கியிருப்பார் போல, அந்த அளவுக்கு காட்சிகளின் தரம் இருக்கிறது.
எழுதி இயக்கி தயாரித்திருக்கும் நாயகன் வின் ஸ்டார் விஜய், ஒரு திரைப்படத்தை எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதற்கான உதாரணமாக இந்த படத்தை எடுத்திருந்தாலும், படத்தின் முதல் அரை மணி நேர காட்சிகளில், நம் வயிறு மட்டும் அல்ல, குடல், கிட்னி உள்ளிட்ட அனைத்து பாகங்களும் வலிக்கும் வகையில் சிரிக்க வைக்கிறார்.
சந்தானம், யோகி பாபு இணைந்து காமெடி செய்திருந்தால் கூட நாம் இப்படி சிரித்திருக்க மாட்டோம், ஆனால் வின் ஸ்டார் விஜய், அதை வஞ்சனை இல்லாமல் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல துடிப்பான வசனங்களை பேசி கைதட்டலும் பெறுகிறார்.
இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து ஜாலியாக இருக்க வேண்டுமானால் நிச்சயம் வின் ஸ்டார் விஜயின் இந்த ‘எப்போதும் ராஜா – பாகம் 1’ படத்தை தாராளமாக பார்க்கலாம்.
மொத்தத்தில் ‘எப்போதும் ராஜா – பாகம் 1’ இரட்டைக் குழல் துப்பாக்கி.