‘இரும்பன்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
குறவர் இனத்தைச் சேர்ந்த ஆஃபீஸுக்கு, சமண மதத்தைச் சேர்ந்த மஹிமா மீது காதல் வந்துவிடுகிறது. அவர்கள் காதலைச் சேர்க்க பரதர் (மீனவ) இனத்தைச் சேர்ந்த பீட்டர், பிளேடுடனும் ஆஸ்பித்திரியுடனும் இணைந்து மஹிமாவைக் கடத்தி விடுகின்றனர். ஆஃபீஸின் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை.
அலுவலகத்தில் பிறந்ததால் ஆஃபீஸ் என்றும், மருத்துவமனையில் பிறந்ததால் ஆஸ்பித்திரி என்றும் பெயர் வைத்துவிடுகின்றனர். ஆஃபீஸாக ஜூனியர் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். எம்ஜியார் – ஜானகியின் வளர்ப்பு மகள் சுதாவின் மகனாவார். வலது தோள் பட்டையில் எம்ஜியாரைப் பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார்.
குறவர்களை அசூயையாகப் பார்க்கும் மக்களுக்கு மத்தியில், மஹிமா ஆஃபீஸை அன்புடன் பார்த்தவுடன், நாயகனுக்குக் காதல் வந்துவிடுகிறது. சமணத் துறவியாக மடத்தில் சேரும் மஹிமாவைக் கடத்திக் கடலுக்குக் கொண்டு சென்று விடுகின்றனர் ஆஃபீஸின் நண்பர்கள்.
வாழ்வின் லட்சியமே துறவியாவதுதான் என நாயகி அடம்பிடிக்கிறார். ஆனால் அவர்கள் சென்ற படகு பழுதாகிக் கரையிலிருந்து 220 நாட்டிக்கல் மைல் தொலைவில் சிக்கிக் கொள்ளுகின்றனர். குடி நீர் இல்லாமல் தவிக்கின்றனர். காற்று பலமாக வீச நாயகி கடலில் தூக்கியெறியப்படுகிறாள். நீச்சல் தெரியாத நாயகன் தொபக்கடீர் எனக் கடலில் குதிக்க, நீச்சல் தெரிந்த நாயகி நாயகனைக் காப்பாற்றிய வேகத்தில் தொபக்கடீரெனக் காதலில் விழுகிறார். நீண்ட நாளாகப் போட்டியில்லாமல் அன்னப்போஸ்டில் ஜெனலியா பெற்ற பட்டத்தை, மஹிமாவாக நடித்த ஐஸ்வர்யா தத்தாவிற்குத் தந்துவிடலாம். காதல் வந்ததும் பாடலுக்குப் போயாக வேண்டுமல்லவா? ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க’ என்ற அருமையான பாடலை ஆராவாரமாக ரீமேக் செய்து ஒரிஜினல் பாடலை நினைத்துக் கவலை கொள்ளச் செய்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.
இயக்குநர் கீராவை இரண்டு விஷயங்களுக்காகப் பாராட்டியே ஆகவேண்டும். குறிஞ்சித் திணையின் மக்கள் குறவர்கள் என்றால், அத்திணையின் பறவைகளில் ஒன்று கிளி. படத்தில், ஓவியா எனும் கிளியை நாயகன் வளர்ப்பதாகச் சித்தரித்துள்ளார் இயக்குநர். அநேகமாக அக்கிளி,அத்துவானக் கடலில் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுது, படகில் சிறிய ட்ரெளசருடனே இருப்பார் ஐஸ்வர்யா தத்தா. இது எப்போதும் தமிழ் சினிமாவில் நடப்பதுதானே என இருமாந்திருக்கும்போது, க்ளைமேக்ஸ் சண்டையில் நாயகனின் கைலியை உருவி அவரையும் சின்ன ட்ரெளசருடன் நிற்க வைத்து, தானொரு பாரபட்சமற்ற காத்திரமான படைப்பாளி என நிரூபித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார் இயக்குநர் கீரா.