full screen background image
Search
Monday 28 April 2025
  • :
  • :

’ஓம் வெள்ளிமலை’ திரைப்பட விமர்சனம்

’ஓம் வெள்ளிமலை’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Casting : Super Good Subramani, Veerasubash, Anju Krishna, Giriraj, Vijayakumar, Charles Pandiyan, Kaviraj, Pazhanisamy

Directed By : Om Vijay

Music By : NR Raghunanthan

Produced By : Superb Creations – Rajagopal Elangovan

அறிமுக இயக்குனர் ஓம் விஜய் இயக்கத்தில் முண்டாசுப்பட்டி, பிசாசு, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரான சூப்பர் குட் சுப்ரமணியன் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “வெள்ளிமலை”. சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை போற்றும் படியாக உருவாகியுள்ள இப்படம் மக்களை கவருமா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி, ஒரு அழகிய மலைக்கிராமத்தில் மக்கள் சிலர் வசித்து வருகின்றனர். அங்கு, சூப்பர் குட் சுப்ரமணியன் சித்த மருத்துவ வைத்தியராக வருகிறார்.. இவருக்கு, அன்சு கிருஷ்ணா (மனோண்மணி) மகளாக வருகிறார்.

அக்கிராமத்தில் வசிக்கும் எவரும், சித்த மருத்துவத்தின் அருமையை அறியாமல் சுப்ரமணியிடம் வைத்தியம் பார்க்காமல் வெளியே சென்று மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இக்கிராமம் எனது அருமையை உணர்ந்து கொள்ளும் காலம் வரும் என்று சுப்ரமணியன் இருக்க, அதற்கேற்றாற் போல், சென்னையில் இருந்து கிராமத்திற்கு வரும் விஜய்குமார் (புயல்ராசு) உடலில் அரிப்பு ஏற்படும் ஒரு விதமான தொற்று நோயை கொண்டு வந்து விடுகிறார்.

இதனால், அக்கிராம மக்கள் அனைவருக்கும் அரிப்பு ஏற்பட, தங்களது உடலை சொறிந்து கொண்டே இருக்கின்றனர்.

இறுதியாக அக்கிராம மக்கள் சூப்பர்குட் சுப்ரமணியனின் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்து கொண்டனர்களா இல்லையா.? அரிப்புக்கு தீர்வு ஏற்பட்டதா.? என்பதே படத்தின் மீதிக் கதை.

குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி கதாபாத்திரம் என்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி முத்திரை பதித்திருக்கும் சூப்பர் குட் சுப்ரமணியன் அவர்களுக்கு இப்படம் ஒரு மைல்கல் தான். தான் எடுத்திருக்கும் கதாபாத்திரத்தை உணர்வுபூர்வமாக மனதில் எடுத்துக் கொண்டு அதை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார். கோவணம் அணிந்து கொண்டு இவர் வரும் காட்சியில், இக்கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் இவர் தான் என்று அடித்து கூறும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக நடித்து அந்த கேரக்டரை வலுவடைய வைத்திருக்கிறார்.

எந்த வித மேக்-அப் இல்லாமல், அப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பாத்திரமாகவே மாறி தனது கேரக்டரை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் படத்தின் நாயகி அஞ்சு கிருஷ்ணா.

கொரொனா காலத்தில் மக்கள் எந்த விதமான மருத்துவத்தை கையில் எடுத்தார்கள் என்பதை இந்த உலகம் அறியும். தடுப்பூசி வரும் முன் நிலவேம்பு கசாயம் என்ற ஒன்று மட்டுமே உயிர் காக்கும் காரணியாக இருந்து பல லட்சம் உயிர்களை காப்பாற்றியது.

ஆயிரம் நோய்கள் பூமியில் எட்டிப் பார்த்தாலும் அதற்கு லட்சக்கணக்கான மருத்துவ நிவர்த்திகளை சித்தர்கள் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை இந்த உலகுக்கு எடுத்துரைக்க வந்திருக்கிறது இந்த வெள்ளிமலை.

வீர சுபாஷ் (வனராஜா), கிரிராஜ் (மொரட்டாள்), விஜயகுமார் (புயல்ராசு), சார்லஸ் பாண்டியன் (காட்டுத்தீ), கவிராஜ் (கரும்பாரை), பழனிச்சாமி (பயில்வான்) உட்பட படத்தில் நடித்த கிராமத்தினர் அனைவரையும் நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ஓம் விஜய்.

கதையின் ஓட்டத்தில் சற்று வேகம் ஏற்றியிருந்தால், கதையின் விறுவிறுப்பும் இன்னும் சற்று கூடியிருந்திருக்கும். காமெடி, காதல் இதிலும் சிறிது கவனம் செலுத்திக் கொண்டே சென்றிருந்தால் இன்னமும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்திருக்கும்.

மணி பெருமாளின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். அழகிய மலைகளை கண்முன்னே நிறுத்தி கதைக்குள் நாமும் பயணப்பட வைத்ததில் ஒளிப்பதிவின் பங்கு அளப்பறியது.

ரகுநந்தனின் இசையில் இறப்பு பாடல் கேட்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் பாடலும் மனதை உருக வைக்கிறது.

மொத்தத்தில்,’வெள்ளிமலை’ – சித்த மருத்துவ மகத்துவம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *