full screen background image
Search
Monday 28 April 2025
  • :
  • :

Last 6 Hours Tamil Movie Review

‘Last 6 Hours’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

பரத் நடிப்பில் வெளியான லாஸ்ட் 6 ஹவர்ஸ் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவரது நடிப்பில் சுனிஷ் குமார் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் லாஸ்ட் 6 ஹவர்ஸ்.

இந்தப் படத்தில் பரத்துடன் அனூப் காலித், விவியா சாந்த், அடில் இப்ராஹிம், அனுமோகன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடற்படையில் பணியாற்றிய ஷான் (பரத்) பார்வையிழந்தவர். மலைப் பகுதியில் தனிமையான சூழலில் அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசிக்கிறார். அவரது வீட்டில் கறுப்பு பணம் இருப்பதாக எண்ணி, அதை கொள்ளையடிக்க 4 பேர் கொண்ட கும்பல் திட்டமிடுகிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. நள்ளிரவில் ஷானின் பங்களாவுக்குள் நுழையும் அவர்களுக்கு, அதிகாலை பால்காரர் வருவதற்குள் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச் செல்ல 6 மணிநேரம் மட்டுமே அவகாசம் இருக்கிறது. அதற்குள் அவர்களால் திருட முடிந்ததா, பார்வையிழந்த ஷானை அவர்களால் ஏமாற்ற முடிந்ததா என்பது ‘லாஸ்ட் சிக்ஸ் அவர்ஸ்’ படத்தின் கதை.

கடந்த 2013-ல் வெளியான ‘ஈவில் டெட்’ திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் இயக்குநராக வெற்றிபெற்றவர் உருகுவே நாட்டை சேர்ந்த பெடே அல்வரஸ். அவரது இயக்கத்தில் 2016-ல் வெளியான ‘டோன்ட் ப்ரீத்’ படத்தின் சாயலுடன் வெளிவந்திருக்கும் படம். முதல் பாதியில் ஹைடெக் திருட்டு கும்பலை சேர்ந்த 4 பேரின் வாழ்க்கையை மேம்போக்காக சித்தரிக்கிறது திரைக்கதை. இதனால், இடைவேளை வரையிலான காட்சிகளில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ஷானின் பங்களா வீட்டுக்குள் அவர்கள் ஊடுருவிய பிறகு படம் சூடுபிடிக்கிறது.

வீட்டுக்குள் அந்நியர்களை உணரும் ஷானின் அதிரடி தாக்குதல் அவர்களை நிலைகுலையச் செய்யும்போது, நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அந்த வீட்டுக்குள் நிகழும் எதிர்பாராத திருப்பங்கள், படத்தின் முடிவுக்கு முன்னர் விரியும் முன்கதை ஆகியவை எதிர்பாராததாக இருந்தாலும், அவற்றில் புதிதாக எதுவும் இல்லை. கட்டுக்கோப்பான ‘எய்ட் பேக்ஸ்’ உடலுடன் பார்வையிழந்த முன்னாள் கடற்படை வீரராக ஆக்‌ஷனில் சமரசம் இல்லாமல் அசரடிக்கிறார் பரத். வசனம் அதிகம் இல்லாமல் நன்றாக நடிக்கிறார். எலிசபெத், ரேச்சல் என 2 பெயர்களுடன் திடுக்கிட வைக்கும் கதாபாத்திரத்தில் விவியாவின் நடிப்பு சிறப்பு.

மற்ற 3 நண்பர்களாக வரும் அனூப் காலித், அடில் இப்ராஹிம், அனு மோகன் ஆகியோர் தங்களுக்கு தரப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்கின்றனர். சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு, தனிமை பங்களாவுக்குள் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. கைலாஷ் மேனனின் பின்னணி இசையும் த்ரில் தன்மையுடன் ஒலிக்கிறது. வெற்றிபெற்ற ஆங்கில வணிக சினிமா ஒன்றின் தாக்கத்துடன் உருவாகும் படத்துக்குள், பிராந்தியத் தன்மையை கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியம். அதில் அக்கறை காட்டாத இந்த படம், நம்முடைய 2 மணி நேரத்தை அழுத்தம் மிகுந்ததாக மாற்றிவிடுகிறது.

மொத்தத்தில் ‘Last 6 Hours’ இன்னும் கொஞ்சம் சிரத்தையோடு முன்பகுதியை கவனமாக எடுத்துருக்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *