full screen background image
Search
Monday 28 April 2025
  • :
  • :

‘குருதி ஆட்டம்’ திரைப்பட விமர்சனம்

‘குருதி ஆட்டம்’ திரைப்பட ரேட்டிங்: 2/5

நடிகர்கள்: அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி மற்றும் பலர்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்

எடிட்டிங்: அனில் கிரிஸ்

தயாரிப்பு: Rock Fort Entertainment

இயக்கம்: ஸ்ரீ கணேஷ்.

பல தடைகளைத் தாண்டி அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம். எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில் டி. முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், ராதா ரவி, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மதுரையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பழி வாங்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மதுரை என்றதுமே சண்டை, கத்தி, இரத்தம், கட்ட பஞ்சாயத்து என இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமா மதுரையை எப்படி காட்டி வந்ததோ அதே மதுரையை மீண்டும் தூசி தட்டி அதர்வாவை வைத்து ஒரு பெரிய ஆக்ஷன் படமாக எடுத்துள்ளார் ஶ்ரீ கணேஷ்

அக்காவின் அரவணைப்பில் வாழ்கிறார் அதர்வா. கபடி விளையாடச் செல்லும் அதர்வா, மதுரையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராதிகா சரத்குமார் மகன் கண்ணா ரவியையும், அவரது நண்பர் பிரகாஷ் ராகவனையும் தோற்கடிக்கிறார். இருவருக்கும் கபடி பந்தயம் காரணமாக பகை இருந்து வரும். அதே நேரத்தில் மதுரையின் முக்கிய புள்ளியாக இருக்கும் ராதிகாவை கொலை செய்ய ஒரு சதி நடைபெறுகிறது.

இதனிடையே அதர்வாவிற்கும் பிரகாஷ் ராகவனுக்கும் இருந்த பகை ஒரு கட்டத்தில் பெரிதாக மாற பிரகாஷ் ராகவனை அதர்வா அடித்து அவமானப்படுத்தி விடுவார். இதனால், அதர்வாவை கொலை செய்ய பிரகாஷ் ராகவன் தன் ஆட்களை கொண்டு முயற்சி செய்வார். அதே நேரத்தில் கண்ணா ரவி அதர்வாவிற்கு உதவி செய்வார். ஒரு கட்டத்தில் தனது நண்பன் கண்ணா ரவி மற்றும் அவரது அம்மா ராதிகாவையே கொலை செய்ய கூலிப்படையை ஏவுவார்.

இந்த பிரச்சினையில் இருந்து அதர்வா எப்படி தப்பித்தார். ராதிகா சரத்குமார் மற்றும் அவரது மகன் கண்ணா ரவி இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பது தான் குருதி ஆட்டம் படத்தின் கதை.

சண்டை, இரத்தம், காதல், குடும்ப பிரச்சினை என ஒரு பெரிய கமர்சியல் படத்தை தன்னால் முடிந்தவரை இயக்குனர் ஶ்ரீ கணேஷ் சிறப்பாக கொடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதை முழுமையாக பதிவு செய்தாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். யுவனின் பின்னனி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஆனால் யுவன் சங்கர் ராஜாவையும் சரியாக பயன்படுத்த தவறி விட்டார்களே என்ற வருத்தம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

படம் முழுவதும் அதர்வா தன்னால் முடிந்தவரை தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். காதல் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த படத்தை தன்னுடைய தனித்தன்மையான நடிப்பால் தாங்கி பிடித்துள்ளார் ராதிகா சரத்குமார். மொத்த படத்திலும் ராதிகா சரத்குமாரின் காட்சிகள் தான் சற்று ஆறுதலை தருகிறது. அதே நேரத்தில் ராதிகா சரத்குமாரின் சண்டை காட்சிகள் மீண்டும் பழைய ராதிகாவை நம் கண் முன் கொண்டு வந்துள்ளது.

படத்தின் வில்லனாக நடித்துள்ள வாட்சன் சக்ரவர்த்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தின் தலைப்புக்கு ஏற்பவும் அவருக்காகவுமே இத்தனை சண்டை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதோ என்ற உணர்வு இயல்பாக வருகிறது.

ராதா ரவி, வினோத் சாகரை பெரிய அளவில் பயன்படுத்தாமல் போனது சற்று வருத்தம் தரும் விஷயம். ஒரு கதையில் அதிக கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும். பல கதைகளை ஒரு படத்தில் சொன்ன நினைத்ததே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். அதே நேரத்தில் இரத்தம், சண்டை ஆக்ஷன் காட்சிகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் நண்பர்களுடன் திரையரங்கில் பார்த்து ரசிக்கும் வகையில் குருதி ஆட்டம் படம் உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *