“விவசாயம்” இசை வெளியீட்டு விழா
இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படுவது விவசாயம். ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் நாடு முழுவதும் நலிந்து வருகின்றனர்.
விவசாயிகள் மற்றும் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் மையமாகக் கொண்ட இசைத்தொகுப்பை முனைவர் ச. பரிவு சக்திவேல் (SO WHAT STUDIOS) தயாரிப்பில் இயக்குநர் எம்.சி.ரிக்கோ இசையமைத்து பாடலை உருவாக்கியிக்கிறார்.
“விவசாயம் என்ன ஆனது ?” எனத் தொடங்கும் இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும், விவசாயிகள் படும் துன்பத்தையும் அதற்கு இளைஞர்கள் ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டியவை குறித்தும் உணர்த்தி இயக்கியிருந்தார். அதற்கு ஏற்றார் போல காணொளி தொகுப்பும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த இசைத்தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள கிராண்ட் வர்த்தக மையத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் முனைவர் பரிவு ச.சக்திவேல் சிறப்புரையாற்றினார்.
அதில் வாழை தோட்டத்திற்கு தண்ணீர் இல்லாததால் மனமுடைந்த 38 வயதே ஆன விவசாயி தற்கொலை செய்துகொண்டதை
அவர் பகிர்ந்துகொண்டபோது அவ்விடத்தில் சில நொடிகள் மயான அமைதி நிலவியது. பின்னர் இறந்த விவசாயிகளுக்கு 30 நொடிகள்
மவுன அஞ்சலி செலுத்தி நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் ஏ.எம்.நந்தகுமார், கௌதமன், நடிகர்கள் ஆரி, போஸ்வெங்கட், ஈஸ்டர், அபி சரவணன், சமூக ஆர்வலர்கள் அப்துல் கனி, ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரெஹானா மற்றும் ராப் பாடகர் எம்.சி.ஜாஸ் மற்றும் தயாரிப்பாளர் ஏ.பி.ஸ்ரீதர், டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கணேசன், மில்கி ராஜ், செல்வராஜ், ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“விவசாயம் அழிந்தால், அரிசியை டவுன்லோடு செய்யமுடியாது” என்று கெளதமன் பேசினார்.
“உழவுத்தொழில் தான் உலகத்தின் அச்சாணி . உழவன் வீழ்ந்தால் உலகமே வீழ்ந்து போகும்” என்று இயக்குநர் ஏ.எம்.நந்தகுமார் குறிப்பிட்டார்.
“விவசாயம் பற்றி ஏதுமறியாத நகர இளைஞர்கள் கூடும் இதுபோன்ற வணிகவளாகத்தில் விவசாயம் சார்ந்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்துவது சிறப்பான ஒன்று ” என்றார் நடிகர் ஈஸ்டர்.
“விவசாயி தற்கொலை செய்துகொள்வது அல்லது அழிவது என்பது உணவுச்சங்கிலி அறுபடுவது போன்றது, இது தேசத்திற்கே பெரிய அழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தார் அப்துல்கனி.
“விவசாயம் காக்க இன்றைய இளைஞர்கள் முன்வரவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டனர் ஆரியும் அபி சரவணனும்.
“சாதி, மத, அந்தஸ்து வேறுபாடு இல்லாமல் தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டார் ஆரி.
டெல்லி போராட்டக் களத்தில் விவசாயிகளுடன் கலந்து கொண்ட நடிகர் அபி சரவணன், அவர்களின் துன்பங்களை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
விவசாயம் பாடலை விவசாயிகள் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் பாடல் திரையிடப்பட்டது. இறுதியாக உறுதி மொழியுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
விவசாயம் என்றால் என்னவென்கிற புரிதல் இல்லாதவர்கள், முனைவர் பரிவு ச. சக்திவேல் தயாரித்திருக்கும் விவசாயம் பாடல் தொகுப்பை இணையதளத்தில் பார்த்து, விவசாயம் பற்றி ஓரளவாவது புரிந்துகொள்ள முடியும் .
“விவசாயம் – #SaveFarmers Music Album Making Video | MC RICO | Parivu Dr S Sakthivel | Trend Music” on YouTub
|