full screen background image
Search
Wednesday 9 July 2025
  • :
  • :
Latest Update

தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் – கவிஞர் வைரமுத்து பேச்சு

தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் – கவிஞர் வைரமுத்து பேச்சு

ஏழைகளின் முதுகெலும்பின்மீது
சாலைகள் போட்டுவிடக் கூடாது
கவிஞர் வைரமுத்துகருத்து

‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 18ஆம் ஆளுமையாக கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார்.தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மரபின் மைந்தன் முத்தையா முன்னிலை வகித்தார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

ஓர் இனத்தின் வரலாறும் பண்பாடும்தான் அதன் பெருமை. அதுதான் நிகழ்காலத்தை முன்நடத்தும் வலிமை. பிரிட்டன் தன் பழம்பெருமையின்மீது பற்று வைத்திருப்பதுபோல, சீனா தன் பாரம்பரியத்தின்மீது பழைமை பாராட்டுவதுபோல, கிரேக்கம் தன் நாகரிகத்தை நினைத்து நினைத்து நெகிழ்வதுபோல, தடவித் தடவிப் பார்த்துக்கொள்ளத் தமிழர்களுக்கும் பெருமைகள் உண்டு.

உலகுக்கெல்லாம் முத்தும் மிளகும் ஏற்றுமதி செய்தவர்கள் தமிழர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே சாலமன் கப்பலில் ஏற்றிச்சென்ற வணிகப் பொருள்களில் தமிழர்களின் மயில் தோகையும் ஒன்று என்று எபிரேய விவிலியம் எழுதுகிறது.எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா மதுக் கிண்ணத்தில் குளித்த முத்து கொற்கை முத்து.

அன்று முதல் இன்றுவரை உலகத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது தங்கம்தான். அதன் பெருமையை அறிந்து ஆடகம் – கிளிச்சிறை – சாம்புநதம் – சாதரூபம் என்று நான்கு வகையாகத் தங்கத்தைப் பிரித்தவர்கள் தமிழர்கள்.பாய்மரக் கப்பல்களுக்கெல்லாம் காற்றின் தயவே காரணமென்று கண்டு வாடை – கோடை – கொண்டல் – தென்றல் என்று காற்றையே நான்காகப் பிரித்தவர்கள் தமிழர்கள்

முதலாம் குலோத்துங்க சோழன் சக்கரக்கோட்டத்தை வென்றான் என்ற சரித்திரக் குறிப்பு கலிங்கத்துப்பரணியில் காணக் கிடைக்கிறது. அந்தச் சக்கரக்கோட்டம் என்பது இன்றைய மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு மேற்கே 25 மைல் தொலைவில் இருக்கிறது என்று எழுதுகிறார் சரித்திரப் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார்.விசாகப்பட்டினத்தை வென்று, அதன் பெயரைக் குலோத்துங்கப்பட்டினம் என்று மாற்றிய கல்வெட்டு இன்றும் விசாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கிறது. கங்கையும் கடாரமும்கூட சோழப் பேரரசின் வரைபடத்துக்குள் இருந்த வரலாறும் உண்டு.

எல்லாம் சரிதான். உன் பாட்டனுக்கு ஒரு யானை இருந்தது என்பது இறந்தகாலமாக இருக்கலாம். உனக்கு ஒரு கன்றுக்குட்டியாவது இருக்கிறதா என்பதே நிகழ்காலம் நம்மை நோக்கி வீசும் வினா.

இனத்தை அடகுவைத்துவிட்டு மொழியைப் பறிகொடுத்துவிட்டு இரண்டாம்தரக் குடிமகனாய் வாழ்வதற்குத் தாழ்ந்தவன் அல்ல தமிழன். உலகமே ஒரு சிற்றூராய்ச் சுருங்கிக்கொண்டு வரும் வேளையில் தமிழன் என்ற குறுகிய பார்வை தேவையா என்று குறிக்கோளற்ற சிலர் வினாத் தொடுக்கிறார்கள். ஆறடி உயரம்கொண்ட மனிதனைக்கூட ஆதார் அட்டையை வைத்துத்தானே மதிக்கிறீர்கள், அப்படியானால் இனத்திற்கு ஓர் ஆதார் அட்டை இருக்கக் கூடாதா? அதுதான் இனத்தின் அடையாளம்.

தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி வேண்டும்; திட்டங்கள் வேண்டும்; மறுக்கவில்லை. ஒன்றின் அழிவில்லாமல் இன்னொன்று இல்லை. முட்டை உடையாமல் குஞ்சு இல்லை. ஆனால் முட்டையைக் குஞ்சுஉள்ளிருந்து உடைப்பது முட்டைக்குத்தீங்குசெய்ய அல்ல. அப்படித்தான் வேண்டும் எட்டு வழிச்சாலைகளும். ஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக்கூடாது.

எனது ‘கூடு’ என்ற கவிதை தீயாகப் பரவிக்கொண்டு இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆமாம் அது என் கவிதைதான். எப்போதும் பாட்டாளிகளின் பக்கம் நிற்பவனே படைப்பாளி. தன் சாலையோரத்து வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளைப் பார்த்துத் தாய் ஒருத்தி அழுது பாடுகிறாள்.

சாமிகளாசாமிகளாசர்க்காருசாமிகளா!செலந்திக்கூடழிக்கச்சீட்டுவாங்கிவந்திகளா? சித்தெறும்பநசுக்கத்தான்சீப்பேறிவந்திகளா?அரைச்செண்டுவீடிடிக்கஆடர்வாங்கிவந்திகளா?நான்பட்டபாடுநாய்படுமாபேய்படுமா? கடையும்தயிர்படுமா? காஞ்சிவரம்தறிபடுமா? – முன்சுவருஎழுப்பத்தான்மூக்குத்திஅடகுவெச்சேன்,பித்தாளக்கொடம்வித்துப்பின்சுவருகட்டிவச்சேன் – கூடு கலச்சாக்காக் குருவிக்கு வேறமரம், வீடு இடிச்சாக்கா எங்களுக்கு ஏது இடம்?

என்று சாலை ஓர ஏழைகளுக்காய் வாதாடுகிறது அந்தக் கவிதை.
கலைஞர் முதல்வராய் இருந்தபோது அவரை மட்டும் மேடையில் அமர்த்தி நான் அரங்கேற்றிய கவிதை அது. இது அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல; சமூகத்திற்குச்சார்பான கவிதை என்றே ஆரம்பித்தேன். அவர் புரிந்துகொண்டது போலவே அரசும் புரிந்துகொண்டு ஏழைகளின் பக்கம் நிற்கும் என்று நம்புகிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *