Categories
Reviews

‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்பட விமர்சனம்

‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast & Crew:

Abarnathi
Lingesh
Vettri Cheliyan
Suresh Menon
Aswin
Tamilarasi
Anbu

Crew:
Written and directed by- VettriCheliyan
Producer-Velayutham
Music-Dinesh Antony
Dob-Arjun Ravi,Gnanasekar R.S
Editor-Ranjeet CK
Art director – Ragavan Sanjeevi
Executive Producer-Arun mozhi devan
Sound design – Krishna Samy
Sound design – R.KRISHNAMOORTHY D.F.Tech
Publicity Designer-Rajinkrishnan
Vfx-Art FX Studio
Post-Sasikala productions
Di-Sri kalasa studio
Di colourist-Raghuram
Stunt-Rock Prabhu

‘தி கிராண்ட் மாஸ்டர்’ “திறமைக்கு சாதி கிடையாது; வாய்ப்பு கிடைத்தால் எந்தத் திறமையும் வெல்லும்” என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’.

ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற தனது கனவை சாதிய பாகுபாடுகளையும் ஆதிக்க சமூகத் தடைகளையும் கடந்து எப்படி நிறைவேற்றுகிறான் என்பதே படத்தின் மையக்கதை.

நாயகியின் மகன் சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். ஆனால், அவரது கனவுக்கு குடும்பத்திலும் சில தடைகள் இருக்கின்றன. அவரது தாய் அபர்நதி, மகன் நன்றாகப் படித்து வழக்கறிஞராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், மகனுக்கு உலகமே செஸ் விளையாட்டைச் சுற்றியே நகர்கிறது.

அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுவன், மற்ற மாணவர்களைப் போல விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் PT ஆசிரியரிடம் செஸ் போர்டு கேட்கும் காட்சியும், அதற்குப் பதிலாக அவனுக்கு வழங்கப்படும் வேலையும் சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாட்டின் கொடுமையை வெளிப்படுத்துகின்றன. “யார் எந்த வேலையைச் செய்ய வேண்டும்” என்று சமூகமே தீர்மானிக்கும் மனநிலையை அக்காட்சி அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மகனின் கனவைப் புரிந்துகொள்ளும் தாய் அபர்நதி, அவனை செஸ் விளையாட்டில் முன்னேற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதன் பின்னணியில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் மூலம் கதையின் இரண்டாம் பாதி நகர்கிறது.

அபர்நதியின் கணவராக லிங்கேஷ் நடித்திருக்கிறார். கிராமத்தில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் இவர்களது குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கின்றன. ஏற்கனவே அபர்நதியிடம் ∆ போட்டியில் தோல்வியடைந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர், அந்தத் தோல்வியை மனதில் வைத்துக்கொண்டு அவரை அவமானப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சூழலில் ஏற்படும் ஒரு பிரச்சினையில் லிங்கேஷ்வர் கட்டி வைக்கப்படுகிறார். அவரை மீட்க வேண்டுமானால், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை செஸ் போட்டியில் அபர்நதி வெல்ல வேண்டும் என்று கிராம மக்கள் நிபந்தனை விதிக்கின்றனர். அனைவரின் முன்னிலையிலும் நடைபெறும் அந்தப் போட்டியில் அபர்நதி வெற்றி பெற்று தனது கணவரை மீட்கிறார்.

மனைவியின் செஸ் திறமையைப் பார்த்து வியக்கும் லிங்கேஷ்வர், அவரை செஸ் விளையாட்டில் சாதிக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார். சமூகத்தின் விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கும் அறிவும் திறமையும் இருக்கிறது, அவர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகிறது.

இந்தப் பயணத்தில் செஸ் கிளப்பின் தலைவராக வரும் சுரேஷ் மேனன் கதையில் வில்லனாக நடித்திருக்கிறார். அதிகாரமும் பணமும் சமூக அந்தஸ்தும் எவ்வாறு ஒருவரின் திறமையைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அவரது கதாபாத்திரம் வழியாக படம் காட்டுகிறது. அபர்நதிக்கும், சுரேஷ் மேனனுக்கும் இடையே உருவாகும் மோதல் கதையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது.

இறுதியில், அபர்நதியும் அவரது குடும்பமும் எதிர்கொள்ளும் தடைகள், வெற்றி செழியனின் செஸ் பயணம், அவனை ஒரு சாம்பியனாக உருவாக்கும் முயற்சி ஆகியவை கதையின் முக்கியப் பகுதிகளாக அமைகின்றன.

படத்தில் நாயகி அபர்நதி துப்புரவுப் பணியாளராக மிகவும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாபாத்திரத்தின் வறுமை, குடும்பப் போராட்டம், மகனின் எதிர்காலம் குறித்த அக்கறை என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவரது தோழியாக நடித்திருப்பவரின் நடிப்பும் கவனம் பெறுகிறது.

நடிகர் லிங்கேஷ் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவியின் திறமையினை புரிந்துகொண்டு அதை நிறைவேற்ற போராடும் அவரது நடிப்பு கதைக்கு வலு சேர்க்கிறது.

நடிகர் சுரேஷ் மேனன், செஸ் கிளப்பின் தலைவராக அதிகார மனப்பான்மையும் ஆதிக்க குணமும் கொண்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

கிராண்ட் மாஸ்டராக நடித்திருக்கும் சிறுவன், செஸ் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தையும், தனது கனவை நோக்கிய பயணத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் போட்டிகளில் பங்கேற்கும் பல காட்சிகள், நிஜ வாழ்க்கையின் செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தாவை நினைவுபடுத்துகின்றன. ஏனெனில், அவரும் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, இன்று உலகமே பாராட்டும் வகையில் செஸ் போட்டிகளில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவு இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறச் சூழலையும், கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறையையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் கவனம் ஈர்க்கிறது. சில காட்சிகள்( சுரேஷ் மேனனை சாக்கடையில் சுத்தம் செய்யும் காட்சி) கதையின் உணர்வை வார்த்தைகளைக் காட்டிலும் காட்சிகளின் மூலமாகவே பார்வையாளர்களுக்கு கடத்துகின்றன.

படத்தில் பாடல்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், கதையின் மையமான செஸ் விளையாட்டைச் சுற்றியே திரைக்கதை நகர்த்தப்பட்டிருப்பது வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கிறது. சாதிய அடிப்படையிலான பாகுபாடுகள், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும் மனிதர்களின் நிலை ஆகியவற்றை ‘செஸ்’ விளையாட்டின் பின்னணியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

‘செஸ்’ என்பது அறிவுக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விளையாட்டு. ஆனால், சமூகத்தில் ஒருவரின் திறமையை மதிப்பிடுவதற்குப் பதிலாக அவருடைய பிறப்பையும் சமூகப் பின்னணியையும் வைத்து மதிப்பிடும் மனநிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.

அதே நேரத்தில், படத்தின் இறுதிப்பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் வலுவாகக் காட்ட முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் செஸ் விளையாட்டை மையமாகக் கொண்டிருந்த படத்தின் கதை சமூகப் பிரச்சினைகளின் பக்கம் திரும்புகிறது. இந்த அணுகுமுறை சில இடங்களில் கதையின் மையத்துடன் எவ்வளவு இயல்பாக இணைகிறது என்பது பார்வையாளர்களின் தனிப்பட்ட கருத்துக்கு விட்டுவிடுகிறது.

மொத்தத்தில், ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திறமை இருந்தும் சமூகத் தடைகளால் வாய்ப்பு மறுக்கப்படும் மனிதர்களைப் பற்றிப் பேசும் படமாகவும் இருக்கிறது. திறமை எந்த சமூகத்தைச் சேர்ந்தவரிடம் இருந்தாலும், அவர்களுக்கு சமமான வாய்ப்பும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும்” என்பதே இப்படத்தின் முக்கியமான கருத்தாக இருக்கிறது.

#TheGrandMaster #TheGrandMasterMovie
Review By
Antoine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *