‘ஐ , நோபடி’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Cast & Crew :-
Prithviraj Sukumaran – Rajeevan
Parvathy Thiruvothu – Meera
Hakkim Shahjahan – Anas
Ashokan – Jacob
VijayaRaghavan – Chief Minister
Madhupal – CI jomon
Shankar Ramakrishnan – Dysp Ajith
Nakshathra – Jia
Director : Nisam Basheer
Producers : Supriya Menon, Mukesh R Mehta, CV Sarathi
Production Houses : Prithviraj Productions & E4 Experiments
‘ஐ நோபடி’ ஒரு வங்கி கொள்ளையை மையமாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர். ஆனால் இது வழக்கமான கொள்ளை படம் இல்லை. கொள்ளையர்களை மையமாக வைத்து கதை நகராமல், எந்த தொடர்பும் இல்லாத ஒரு சாதாரண மனிதன் எப்படி அந்த சம்பவத்தில் சிக்கிக்கொள்கிறான் என்பதையே படம் பேசுகிறது. அரசு ஊழியரான ராஜீவன் ஒரு வேலைக்காக வங்கிக்கு செல்லும் நேரத்தில் கொள்ளை நடக்கிறது. கொள்ளையர்களால் பிணைக்கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்படுகிறார். ஆனால் கொள்ளையர்கள் விபத்தில் உயிரிழந்ததும் கொள்ளை பணம் மாயமாகிறது. அதன்பிறகு ராஜீவனே முக்கிய சந்தேக நபராக மாறுகிறார். போலீஸ் விசாரணை, ஊடகங்களின் பரபரப்பு, சமூகத்தின் தீர்ப்பு, குடும்பத்தின் மீது விழும் அழுத்தம் என ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை எப்படி சில மணி நேரங்களில் தலைகீழாக மாறுகிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறது.
பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு மாஸ் ஹீரோவாக இல்லாமல் பயம், பதற்றம், குடும்ப பாசம், மன அழுத்தம் ஆகிய உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பார்வதி திருவோத்து குறைவான காட்சிகளில் வந்தாலும் மனைவியாகவும் தாயாகவும் மனதில் நிற்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார். ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்தின் பதற்றத்தை ஒவ்வொரு காட்சியிலும் உணர வைக்கிறது. குறிப்பாக வங்கி கொள்ளை, பேருந்து, மின்தூக்கி மற்றும் துரத்தல் காட்சிகள் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக அமைந்துள்ளன. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை சஸ்பென்ஸை மேலும் உயர்த்துகிறது. ரமீஸ் எம் பியின் படத்தொகுப்பு முதல் பாதியை வேகமாக நகர்த்துகிறது.
எழுத்தாளர் சமீர் அப்துலின் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் புதிய திருப்பங்களை கொடுத்து அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து உருவாக்குகிறார். இயக்குநர் நிசாம் பஷீர் ஒரு சாதாரண மனிதனை மையமாக வைத்து மீடியா, சமூக வலைதளங்கள், அதிகார அரசியல் மற்றும் பொதுமக்களின் பார்வை போன்ற விஷயங்களையும் கதையோடு இணைத்த விதம் பாராட்டுக்குரியது.
படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் சில சண்டைக்காட்சிகளும் நீளமான காட்சிகளும் சற்று சோர்வை ஏற்படுத்துகின்றன. சில சமூக கருத்துகளை இன்னும் சுருக்கமாக சொல்லியிருக்கலாம் என்ற எண்ணமும் வருகிறது. இருந்தாலும் அந்த குறைகளை மறக்க வைக்கும் அளவுக்கு திரைக்கதையின் சஸ்பென்ஸ் மற்றும் தொழில்நுட்ப தரம் படத்தை தாங்கி நிற்கிறது.
மொத்தத்தில், ‘ஐ நோபடி’ வழக்கமான கொள்ளை படங்களை விட வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் இந்த படம் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.





















