full screen background image
Search
Tuesday 2 June 2026
  • :
  • :
Latest Update

கலைஞர் டிவியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் சமூகப் புரட்சியாளர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு!

கலைஞர் டிவியில் கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் சமூகப் புரட்சியாளர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு!

வைணவத் துறவியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி தொலைக்காட்சித் தொடராக ஆவணப்படுத்தியுள்ளார். கலைஞர் டி.வி.க்காக அவர் எழுதிய இந்தத் தொடர், ராமானுஜரின் ஆன்மிகப் பங்களிப்பைத் தாண்டி, அவர் நிகழ்த்திய சமூகப் புரட்சிகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரிதினும் அரிதான இந்த மெகாத் தொடர், ஜூன் 3 முதல் திங்கள் – வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிறது.

மதத்தில் புரட்சி செய்த மகான்:

கி.பி. 1017-ல் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர், விசிட்டாத்துவைத தத்துவத்தை உலகிற்கு வழங்கியவர். எனினும், அன்றைய காலகட்டத்திலேயே சாதி, மத பேதங்களை உடைத்தெறிந்து தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதோடு, சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழிக்கும், திவ்ய பிரபந்தத்திற்கும் முன்னுரிமை அளித்துச் சமத்துவக் குருவாக விளங்கினார்.

திராவிடக் கொள்கையும், ராமானுஜரின் சீர்திருத்தமும்:

பகுத்தறிவு மற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளில் தீவிரப் பற்றுக் கொண்ட கலைஞர் கருணாநிதி, ராமானுஜரின் முற்போக்குச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அத்தொடரை எழுதினார். ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டையொட்டி, “இராமானுஜர்: மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தலைப்பில், அத்தொடருக்கான திரைக்கதை மற்றும் வசனங்களை அவர் தனது கைவண்ணத்தில் வடித்திருந்தார். சாதி ஒழிப்பு மற்றும் சமூகச் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த இத்தொடர், ஆன்மிகத் தலைவர்களையும், திராவிடச் சிந்தனையாளர்களையும் ஒரு புள்ளியில் இணைத்த முக்கிய வரலாற்றுப் பதிவாகக் கருதப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *