‘வடம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Vimal, Natraj, Sanashka Sri, Munishkanth, Naren, Indhumathi, Balasaravanan, Madhusoothan Rao, Deepa Shankar
Directed By : Kenthiran.V
Music By : D.Imman
Produced By : Masani Pictures – Rajasekar.R
‘வடம்’ சிவகங்கை மற்றும் தென் மாவட்டங்களில் நடைபெறும் வட மஞ்சு விரட்டு என்ற பாரம்பரிய மாடுபிடி விளையாட்டை மையமாக வைத்து இந்தக் கதை நகர்கிறது.
கதையின் நாயகன் விமல். மாடுகள் மீது மிகுந்த பாசம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை நரேன் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளை காப்பாற்றி தனது கோசாலையில் பராமரிப்பவர். அந்த வழக்கத்தையே தொடரும் விமல் ஒரு கண் குறைபாடு உள்ள கன்றுக்குட்டியை காப்பாற்றி வீட்டில் வளர்க்கிறார். பின்னர் அதற்கு பயிற்சி அளித்து பாண்டி முனி என்ற பெயரில் மஞ்சு விரட்டு போட்டியில் யாராலும் அடக்க முடியாத காளையாக உருவாக்குகிறார். அந்த காளை மூலம் விமலும் பெருமை பெறுகிறார்.
ஆனால் விமல் ஊரில் வம்புக்கும் பெயர் பெற்றவர். திருவிழாவில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக சிலருடன் பகை உருவாகிறது. அதோடு காளை போட்டி தொடர்பான போட்டியும் பகையாக மாறுகிறது. இதற்கிடையில் விமலின் வாழ்க்கையில் சனஷ்கா ஸ்ரீ என்ற பெண் வருகிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. அந்த காதல் விமலின் வாழ்க்கையில் ஒரு புதிய மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை. எதிர்பாராத ஒரு சம்பவமும் துரோகமும் விமலின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. பலரும் விமலை கொல்ல முயற்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த பகைகளின் காரணம் என்ன, காதலின் பின்னால் இருக்கும் உண்மை என்ன, விமல் அந்த எதிரிகளையும் துரோகத்தையும் எப்படி சமாளிக்கிறார் என்பதையே படம் சொல்லுகிறது.
விமல் கிராமத்து கதாபாத்திரங்களுக்கு எப்போதும் பொருத்தமாக இருப்பவர். இந்த படத்திலும் முறுக்கு மீசையுடன் கிராமத்து வாலிபனாக இயல்பாக நடித்திருக்கிறார். காளைகளை பயிற்சி அளிக்கும் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் அவரது முயற்சி தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ அழகாகவும் குடும்பப்பாங்கான தோற்றத்துடனும் வருகிறார். ஆரம்பத்தில் சாதாரண காதல் கதாபாத்திரமாக தோன்றினாலும் பின்னர் கதையில் முக்கிய திருப்பத்தை கொடுக்கும் பாத்திரமாக மாறுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் தனது அனுபவமான நடிப்பால் கதைக்கு வலு சேர்க்கிறார். போட்டியில் தோல்வியை ஏற்க முடியாத பெருமையும் கௌரவ உணர்ச்சியும் கொண்ட மனிதராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. முனிஷ்காந்த் இந்த படத்தில் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு பல இடங்களில் கவனம் ஈர்க்கிறது. நரேன், இந்துமதி, தீபா சங்கர், பாலசரவணன், மதுசூதனன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கிராமத்து மனிதர்களாக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் முக்கிய அம்சமாக மஞ்சு விரட்டு போட்டி காட்சிகள் இருக்கிறது. காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் காட்சிகளும் போட்டி காட்சிகளும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார் கிராமத்து சூழலை இயல்பாக காட்டியிருக்கிறார். டி இமான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஒரு வணிகத் தோற்றத்தை கொடுக்கிறது.
இயக்குநர் கேந்திரன் வி வட மஞ்சு விரட்டு என்ற அதிகம் பேசப்படாத பாரம்பரிய விளையாட்டை மையமாக கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார். அதற்குள் கிராமத்து பகைமை, கௌரவம், காதல், துரோகம் போன்ற அம்சங்களை சேர்த்து கமர்ஷியல் பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் கதை ஏற்கனவே பார்த்த கிராமத்து படங்களை நினைவுபடுத்துகிறது. பல கதாபாத்திரங்களுக்கு பிளாஷ்பேக் கொடுத்ததால் சில இடங்களில் குழப்பமும் ஏற்படுகிறது.
மொத்தத்தில், ‘வடம்’ சில குறைகள் இருந்தாலும் மஞ்சு விரட்டு போட்டி காட்சிகளும் கிராமத்து பின்னணியும் காரணமாக இந்த படம் ஒரு சுமாரான திரையரங்கு அனுபவத்தை தருகிறது.























