full screen background image
Search
Saturday 28 February 2026
  • :
  • :
Latest Update

‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்பட விமர்சனம்

‘ஃபோர்த் ஃப்ளோர்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Aari Arujunan, Deepshika, Pavithra, Subramaniya Siva, Thalaivasal Vijay

Directed By : LR Sundarapandiyan

Music By : Tharankumar

Produced By : A Raja

Fourth Floor எல்.ஆர்.சுந்தரபாண்டியன் எழுதி இயக்கிய திகில் கிரைம் திரில்லர் படம். ஆரி அர்ஜுனன், பவித்ரா, தீப்ஷிகா, சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைப்படி ஐடி துறையில் வேலை பார்க்கும் தீரன் மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். தனது முன்னாள் காதலியிடமிருந்து வரும் அவசர அழைப்பே இந்த பயணத்துக்கு காரணம். சென்னை புறநகர் பகுதியில் உள்ள ராயல் டவுன் அபார்ட்மென்டின் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். ஆனால் அந்த மாடி பற்றி ஏற்கனவே பல வதந்திகள் இருக்கின்றன. அங்கு யாரும் நீண்ட நாள் தங்கியதில்லை. வீடு முழுக்க தூசி, சிலந்தி வலை, அசாதாரண அமைதி.

தங்கிய சில நாட்களில் தீரனுக்கு விசித்திரமான கனவுகள் வர ஆரம்பிக்கின்றன. தன்னை யாரோ தள்ளுவது போல, யாரோ பின்தொடருவது போல, சிலர் கொல்லப்படுவது போல. அதைவிட அதிர்ச்சியாக அந்த வீட்டிலேயே தனது முன்னாள் காதலியின் புகைப்படத்தை கண்டுபிடிக்கிறார். நிஜமா கனவா என்ற குழப்பத்தில் அவர் சிக்கிக்கொள்கிறார். இதே நேரத்தில் கட்டட நிர்வாகமும் சில ரவுடி கும்பலும் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறது.

கதை அமானுஷ்ய பாதையிலேயே போகும் போல தோன்றினாலும், பின்னர் இது ஒரு பெரிய சதி கதையாக மாறுகிறது. மறைக்கப்பட்ட கொலைகள், ரியல் எஸ்டேட் மோசடி, அரசியல் தொடர்புகள், போலீஸ் கூட்டுச்சதி என்று பல அடுக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த எல்லா விஷயங்களும் ஒரே நேரத்தில் குவிந்துவிடுவதால் சில இடங்களில் கதை சீராக நகரவில்லை என்ற உணர்வு வருகிறது. ஒரு திகில் காட்சி முடிந்தவுடன் சண்டை, அடுத்ததாக காதல் ஃபிளாஷ்பேக், பிறகு கோர்ட் விஷயம் என்று காட்சிகள் ஒன்றோடு ஒன்று நன்றாக கலப்பதற்குப் பதிலாக அருகருகே வைக்கப்பட்டுள்ளன போல தெரிகிறது.

ஆரி அர்ஜுனன் படத்தை முழுவதும் தாங்கி செல்கிறார். காதலி பிரிந்த வேதனை, குழந்தை பற்றிய உண்மை தெரிந்தபின் வரும் குற்ற உணர்ச்சி, தூக்கமின்மை, மன அழுத்தம், அமானுஷ்ய அச்சம் என பல உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக கனவும் நிஜமும் கலக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு பலமாக இருக்கிறது. ஆனால் கதாபாத்திரம் சில இடங்களில் வெறுமையாக இருப்பது போலவும், பல ஆதாரங்கள் அவருக்கே சுலபமாக கிடைப்பது ஹீரோயிசத்தை குறைக்கிறது.

பவித்ராவுக்கும் தீப்ஷிகாவுக்கும் இடையே யார் முக்கிய நாயகி என்ற குழப்பம் இருக்கிறது. இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவில் நடித்துள்ளனர். சுப்பிரமணிய சிவா வில்லனாக வித்தியாசமான முகபாவனையால் மிரட்டுகிறார். ஆனால் படம் முழுக்க அமானுஷ்ய அம்சத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் அவரது வில்லத்தனம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. தலைவாசல் விஜய் கதைக்கு தேவையான கம்பீரத்தை கொடுக்கிறார்.

இசையில் தரண்குமார் பாடல்கள் ஓகே என்ற அளவில் இருந்தாலும் புதியதாய் ஒன்றும் இல்லை. பின்னணி இசை சில இடங்களில் பதட்டத்தை கூட்டுகிறது, சில இடங்களில் அதிக இரைச்சலாகவும் தோன்றுகிறது. ஒளிப்பதிவாளர் ஜெ லக்ஷ்மண் அடுக்குமாடி குடியிருப்பின் இருள் சூழ்ந்த காட்சிகளை நன்றாக பதிவு செய்துள்ளார். கனவு மற்றும் நிஜ காட்சிகளுக்கிடையிலான மாற்றங்களை எடிட்டிங் சரியாக கையாளுகிறது.

மொத்தத்தில், ‘Fourth Floor’ ஒரு நல்ல ஐடியாவுடன் தொடங்கும் படம். ஆரி அர்ஜுனனின் நடிப்புக்காகவும் சில திகில் தருணங்களுக்காகவும் ஒருமுறை பார்க்கலாம் என்ற வகையில் படம் இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *