‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Jiiva, Prathana Nathan, Thambi Ramaiah, Anuraj, Ilavarasu, Jenson Dhivakar, Sarjin Kumar, Jaiwanth,Rajesh Pandian, Amith Mohan, Subash Kannan, Sharath, Savithri
Directed By : Nithish Sahadev
Music By : Vishnu Vijay
Produced By : Kannan Ravi Productions – Kannan Ravi
ஜீவா இந்த படத்தில் ஊர்க்கார பஞ்சாயத்து தலைவர். தேர்தல் வாக்குக்காக மட்டும் இல்ல, ஊர்ல நடக்குற நல்லது-கெட்டது, கல்யாணம், இறப்பு எல்லாத்துக்கும் முன்னால நின்று நடத்துற ஆள். எல்லாரிடமும் சிரிச்ச முகத்தோட பேசுறார், அன்பா பழகுறார். அந்த இயல்பே இந்த படத்தின் பெரிய பலம்.
கதை சிம்பிள் தான். இளவரசு வீட்டில் கல்யாணம் நடக்குது. அதே நேரத்துல பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவின் அப்பா இறந்து போயிடுகிறார். ஏற்கனவே இந்த இரண்டு குடும்பத்துக்குள்ளும் முன்பகை இருக்கு. கல்யாணம் நடக்குற அதே நேரத்துல தான் இறுதி ஊர்வலம் நடத்தணும்னு தம்பி ராமையா பிடிவாதம் பிடிக்கிறார். இளவரசும் “கல்யாணம் என் வீட்ல தான் நடக்கும்”ன்னு இறங்கி பிடிக்கிறார். இந்த இரு ஆணவங்களுக்கும் நடுவுல சிக்கி, இந்த இரண்டு நிகழ்ச்சியையும் சரியா நடத்த ஜீவா எப்படி பஞ்சாயத்து பண்ணுகிறார் என்பதுதான் படம்.
ஜீவா முழு படத்தையும் தன் தோளில் சுமக்கிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் லேசான கலகலப்போட போகுது. பெரிய ஹீரோ மாதிரி அலட்டல் இல்ல, ஆனா படத்தோட மையமா நிற்கிறார். அவரைச் சுற்றி வர்ற சின்ன சின்ன கதாபாத்திரங்களோட அலப்பறைகளுக்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷன்களே பல இடங்களில் சிரிப்பை வரவழைக்குது.
மணமகளாக வரும் பிரார்த்தனா நாதன் (‘பார்க்கிங்’ படத்துல வந்தவர்) எளிமையா, அழகா, இயல்பா நடிச்சிருக்கார். கதையோட சில முக்கிய திருப்பங்கள் அவரைச் சுற்றியே வரும்போது, அவர் காட்டும் முகபாவனைகள் நம்பகமா இருக்கு.
இளவரசு, தம்பி ராமையா – இந்த இரண்டு கேரக்டர்களும் கதையின் முக்கிய தூண்கள். இருவரும் தங்கள் அகங்காரத்தால பிரச்சினையை பெருசாக்கிட்டு போகிறாங்க. குறிப்பா தம்பி ராமையாவின் கோபம், பழிவாங்குற எண்ணம் எல்லாம் சில நேரம் ஓவரா இருந்தாலும் ரசிக்க வைக்குது. இந்த இரண்டு பேருக்குள்ள நடக்குற மோதல்களே கதைக்கு சுவாரசியம் கூட்டுது.
படம் முழுக்க சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நிறைய. கன்னியப்பன், அவன் நண்பன், தம்பி ராமையாவின் சித்தப்பா குழு, தவிடு பாத்திரம் என்று எல்லாரும் தங்களுக்கான இடத்துல வந்து சிரிக்க வைக்கிறாங்க. புதுமுகங்கள் நிறைய இருந்தாலும், எல்லாரும் கதைக்குள்ள கலந்துபோய் இருக்கிறாங்க.
ஒரே லொக்கேஷன்ல கதை நடந்தாலும், படம் அப்படின்னு தோணவே இல்ல. எடிட்டிங் வேகமா இருக்கு. “அடுத்து என்ன நடக்கும்?”ன்னு எதிர்பார்ப்பை விடாம கொண்டு போகுது. ஒளிப்பதிவு கலர்புல்லா இருக்கு, மலையாள படம் பார்க்கிற மாதிரி ஒரு ஃபீல் தருது. விஷ்ணு விஜயின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு நல்ல துணை.
நகைச்சுவையோட சேர்ந்து, நம்ம ஊர்ல நடக்குற வதந்தி, அவதூறு, ஆணவம், பழி வாங்குற மனசு, கூட்டமா நின்னு வேடிக்கை பார்க்குற மனநிலை – இதையெல்லாம் லேசா குத்திக்காட்டுது படம். ஆரம்பத்திலும் முடிவிலும் வரும் எம்.ஆர்.ராதா வசனம் இதுக்கெல்லாம் ஒரு அர்த்தம் கொடுக்குது.
மொத்தத்தில், ‘தலைவர் தம்பி தலைமையில்’ பெரிய மசாலா படம் இல்ல. ஆனா நம்ம ஊர் வாழ்க்கையை, மனிதர்களை, சின்ன சின்ன பிரச்சினைகளை சிரிப்போட சொல்லி, சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்ல திரையரங்க அனுபவம். குடும்பத்தோட உட்கார்ந்து லேசா ரசிக்கலாம்.


























