full screen background image
Search
Tuesday 21 July 2026
  • :
  • :
Latest Update

‘தொடரும்’ திரைப்பட விமர்சனம்

‘தொடரும்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

Casting : Mohanlal, Shobana, Maniyanpilla, Irshadh, Prakash Varma, Binu Pappu, Farhan Fazil, Shaijo Adimali, Thomas Mathew, Amrithavarshini

Directed By : Tharun Moorthy

Music By : Jakes Bejoy

Produced By : Rejaputhra Visual Media – M.Renjith

சென்னையில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மனைவி, ஒரு மகள், ஒரு மகன் என அளவான குடும்பம், அது தான் தன் உலகம் என்று வாழும் மோகன்லாலுக்கு அவரது பழைய அம்பாசிட்ட கார் மீதும் கொள்ளை பிரியம்.

இதற்கிடையே, மோகன் லால் ஊரில் இல்லாத போது, அவரது காரை போலீஸ் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துவிடுகிறது. ஊரில் இருந்து திரும்பும் மோகன்லால் காரை மீட்க போராடுகிறார். சப்-இன்ஸ்பெக்டர் காரை கொடுக்க முடியாது என்று முரண்டு பிடித்தாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணை காட்டி காரை திரும்ப ஒப்படைக்கிறார். அதே சமயம், அந்த காருடன் மோகன்லால், இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்களுடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அந்த இரவு பயணம் மோகன்லால் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் பயணமாக அமைகிறது. அது என்ன? என்பதை யூகிக்க கூடிய விதத்தில் சொன்னாலும், கதையோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கும் விதத்தில் சொல்வதே ‘தொடரும்’.

பென்ஸ் என்கிற சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் பொறுப்பான குடும்ப தலைவராக நடித்திருக்கும் மோகன்லால், பிள்ளைகளிடம் எதார்த்தமாக பழகுவது, சிறு சிறு குறும்புத்தனம் மூலம் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவது என்று ரசிக்க வைக்கிறார். தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு பழி தீர்ப்பதற்காக ஆக்ரோஷமாக களம் இறங்கும் போது, மாஸாக மிரட்டுபவர் சண்டைக்காட்சிகளில் கூட சிறந்த நடிகராக கவனம் ஈர்க்கிறார்.

மோகன்லாலின் மனைவியாக நடித்திருக்கும் ஷோபனா, தன் அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரகாஷ் வர்மா, சிரித்துக்கொண்டே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். போலீஸ் எஸ்.ஐ-யாக நடித்திருக்கும் பினு பப்புவின் நடிப்பிலும் குறை இல்லை. காவலராக நடித்திருக்கும் பர்ஹான் பாசில், தாமஸ் மேத்தீவ், அமிர்தவர்ஷினி, ஷாஜி அடிமல்லி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் அளவான நடிப்பு மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா, இளவரசு மற்றும் சென்னை எப்பிசோட் பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாரின் கேமரா, மலை, வனம், மழை என இயற்கையோடு பின்னி பிணைந்திருப்பதோடு, அவைகளையும் கதையின் மாந்தர்களாக பயணிக்க வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் கதைக்களத்தை விவரிக்கும் பாடல்களும், கதைக்களத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்யும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. அதிலும், சண்டைக்காட்சிகளில் மோகன்லாலின் மாஸை அதிகப்படுத்தியிருப்பதோடு, அளவான சத்தத்தை பயன்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

படத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும், பார்வையாளர்களுக்கு அயர்ச்சி ஏற்படாத வகையில், காட்சிகளை கதையோடு தொடர்புபடுத்தி தொகுத்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்கள் சபீக்.வி.பி மற்றும் நிஷாத் யூசுப்.

கே.ஆர்.சுனில் மற்றும் தருண் மூர்த்தி ஆகியோரது எழுத்தில், ஆணவக் கொலை பற்றி அழுத்தமாக பேசவில்லை என்றாலும், அதனை மையப்படுத்திய ஒரு கதையை வெவ்வேறு பாதையில் பயணிக்க வைத்து, பார்வையாளர்களையும் கதையுடன் பயணிக்க் வைத்திருக்கிறார்கள்.

படத்தின் ஆர்மபத்தில் காட்டப்படும் நிலச்சரிவு, கார் மீது மோகன்லாலுக்கு இருக்கும் பிணைப்பு ஆகியவற்றின் மூலம் முதல் பாதி கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் தருண் மூர்த்தி, இரண்டாவது பாதியில் பார்வையாளர்களின் யூகத்தின்படி திரைக்கதையை அமைத்திருந்தாலும், வழக்கமான பழிவாங்கும் திரைக்கதையை மிக எதிர்பார்ப்புடனும், சுவாரஸ்யத்துடனும் சொல்லியிருக்கிறார்.

மோகன்லாலை எதார்த்தமான குடும்பத் தலைவராகவும், மாஸான ஆக்‌ஷன் ஹீரோவாகவும் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தருண் மூர்த்தி, இரண்டாம் பாதியில் வரும் சண்டைக்காட்சிகளின் நீளத்தை சற்று குறைத்து, ஆணவக் கொலை பற்றி இன்னும் கூட அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம். இருந்தாலும், சமூகப் பிரச்சனையை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், அதை மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்கள் மூலம் சொல்லியிருப்பதால் இயக்குநர் சொல்ல வந்த விசயம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மொத்தத்தில், ‘தொடரும்’ வெற்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *