‘ரசவாதி’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Arjun Das, Tanya Ravichandran, Reshma, Sujith Shankar, GM Sundar, Ramya Subramaniyam, Rishikanth
Directed By : Santhakumar
Music By : Thaman.S
Produced By : DNA Mechanic Company – Santhakumar
தன் கடந்த காலத்தை மறந்து வாழ நினைக்கும் இளைஞன். ‘சிவனே’ன்னு இருக்கும் அவனை எமன் போல் ஒருவன் கொல்ல நினைக்கிறான். யார் அவன்? ஹீரோவின் கடந்த காலத்தில் அப்படி என்ன நடந்தது? நார்மலான த்ரில்லர் பாணியில் விவரிக்கிறது ‘ரசவாதி’ திரைப்படம்.
கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருப்பவர், சதாசிவப்பாண்டி (அர்ஜுன் தாஸ்). இவருக்கும், அந்த ஊருக்கு புதிதாக வேலைக்கு வரும் சூர்யாவிற்கும் (தான்யா ரவிச்சந்திரன்) காதல். இவர்களின் காதலை பிரித்து விடவும், சதாவின் வாழ்க்கையை கெடுக்கவும் நினைக்கிறான், அந்த ஊருக்கு புதிதாக வரும் காவல் அதிகாரி பரசு (சுஜித்). எப்பாடு பட்டாவது சதாவின் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என நினைக்கும் இவன், ஒரு கட்டத்தில் அவனை கொல்லவும் துரத்துகிறான். ஹீரோவை கொல்லும் அவன் முயற்சி வென்றதா? அந்த போலீசுக்கு ஹீரோ மீது இவ்வளவு வெறுப்பு வர காரணம் ஏன்? விடையாக வருகிறது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி.
படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளில், படம் பார்ப்பவர்களை இறுக்கையில் இறுக்கமாக அமர வைத்து விட்டாலே படத்திற்கு வெற்றி என சிலர் கூறுவர். இந்த வேலையை சரியாக செய்திருக்கிறார், படத்தின் இயக்குநர் சாந்தகுமார். ஆனால், அப்படி யோசித்ததிற்கு அதற்கடுத்தடுத்த காட்சிகள் கொஞ்சம் தொய்வை பரிசாக கொடுக்கின்றன. த்ரில்லர் கதை என்பதற்காக, அதில் கொஞ்சம் நம்ப முடியாத காட்சிகளை அடுக்காமல் சாதாரணமாக கதையை நம்பும்படி காண்பித்திருக்கிறார். அதற்காக பாராட்டுகள். ஹீரோவிற்கு பஞ்ச் வசனம் வைக்க தேவையில்லை, ஆனால் மனதில் நிற்கும் படியான வசனங்களை வைத்திருந்தால் மனதிற்கு ஆறுதலாய் அமைந்திருக்கும். ஹீரோவிற்கும் வில்லனிற்கும் என்ன சம்மந்தம் என்று விவரித்த இடத்தில் ‘இத எதிர்பார்க்கலையே..’ என சொல்ல வைக்கிறார் இயக்குநர். இருப்பினும், கொஞ்சம் வலுவில்லாத திரைக்கதையால் ‘என்னவோ மிஸ் ஆகுதே..’ என்ற உணர்வை தருகிறார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி படத்தில் போய் உட்கார்ந்தால் ஒரு நார்மலான த்ரில்லர் படம் பார்த்த அனுபவத்தை தருகிறது ‘ரசவாதி’ திரைப்படம். இந்த படத்திற்கு, ஒளிப்பதிவிற்காக மட்டும் போனஸ் மதிப்பெண்கள் கொடுக்கலாம். கொடைக்கானலின் அழகினை இன்னும் கொஞ்சம் அழகூட்டி எடுத்திருக்கின்றனர்.
ரசவாதி படத்தின் கதை, வில்லனின் இண்ட்ரோவிற்கு பின்புதான் கொஞ்சமாவது நகர ஆரம்பிக்கிறது. காவல் துறையின் உயர்ப்பதவியில் இருக்கும் இவர், தன் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பிறரை அவமானப்படுத்துவதும், அதிகார தொனியில் அனைவரிடமும் பேசுவதும், வலையில் மாட்டிய எலியை தீ வைத்து கொளுத்தி ஓட வைப்பதும் இவரது கொரூர எண்ணத்தை காண்பிக்கிறது. ஹீரோவிற்கு மாஸ் டைலாக் இருக்கிறதோ இல்லையோ, வில்லனுக்கு கைத்தட்டலும் சிரிப்பும் வர வழைக்கும் வகையில் டைலாக்குகள் படத்தில் நிறையவே இருக்கிறது. படம் முழுக்க தனது நடிப்பாலும் வசனங்களாலும் ஸ்கோர் செய்கிறார், வில்லன் சுஜித்.
படத்தில் வில்லனுக்கு அடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர், சந்திரா கதாப்பாத்திரத்தில் வரும், ரேஷ்மா வெங்கடே, அர்ஜுன் தாஸுடன் காதல் செய்யும் இடத்திலும், டாக்சிக் கணவரிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் இடத்திலும், இறுதியில் அவனையே காரித்துப்பும் இடத்திலும் கைத்தட்டல் பெறுகிறார். இன்னும் இது போல இவருக்கு நிறைய கதாப்பாத்திரங்கள் கிடைக்க வாழ்துகள்.
வில்லனாகவே நடித்து பழகிப்போன அர்ஜுன் தாஸ், ரொமாண்டிக் ஹீரோவாக நடிக்க சில காட்சிகளில் சிறமப்படுவது தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது. ஆனாலும், படம் பார்க்கும் பெண்களை சில காட்சிகளில் தனது ஆக்ஷன்களால் வெட்கப்பட வைக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், இவரது ரொமான்சும் பெரிதாக பேசப்பட்டிருக்கும். சண்டை காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.
தான்யா ரவிச்சந்திரன், தனக்கு கொடுத்த வேலையை பக்காவாக செய்து கொடுத்திருக்கிறார். இவர் புகைப்பிடிக்கும் காட்சிகள் பின்னாளில் சர்ச்சையாகாமல் இருந்தால் சரி.
மொத்தத்தில், நீங்கள் த்ரில்லர் படங்களை பார்த்து பயப்படும் ஆளாக இருந்தால், இந்த படத்தை நீங்கள் பயப்படாமல் பார்க்கலாம்.
                                                                    



















