Categories
Reviews

‘அங்காரகன்’ திரைப்பட விமர்சனம்

‘அங்காரகன்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Sreepathy, Sathyaraj, Niya, Appukutty, KC Prabath, Reina Karad, Angadi Theru Mahesh

Directed By : Mohan Dachu

Music By : Ku Karthik

Produced By : Sreepathy

குறிஞ்சி மலை வனப்பகுதியில் இருக்கும் ரிசார்ட்டில் தம்பதியான நாயகன் ஸ்ரீபதி – நாயகி நியா மற்றும் மேலும் பல விருந்தினர்கள் தங்குகிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரிசார்ட்டில் இருக்கும் ராணி பங்களா மட்டும் பூட்டியே இருக்கும் நிலையில், ரிசார்ட்டின் புதிய மேலாளரான அங்காடி தெரு மகேஷ், அந்த அறையை திறந்து சுத்தப்படுத்தி, அதில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்து முடிந்த பிறகு அங்கிருந்த இரண்டு பெண்கள் மாயமாகி விடுவதோடு, நாயகன் ஸ்ரீபதியும், மற்றொரு விருந்தினரும் அடித்துக்கொள்கிறார்கள். அப்போது, அங்கு திடீர் வருகை தரும் போலீஸ் அதிகாரி சத்யராஜ், நடத்தும் விசாரணையில் அந்த ரிசார்ட்டின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்ததா?, மாயமான பெண்களின் நிலை என்ன? என்பதை திகில் மற்றும் மர்ம பின்னணியோடு சொல்வது தான் ‘அங்காரகன்’.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீபதி புதுமுகம் என்றாலும் நடிப்பு, ஆட்டம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் பாஸ் மார்க் வாங்கும் அளவுக்கு இருக்கிறார். எந்த நேரமும் சரக்கு கையுமாக இருக்கும் அவர், சரக்கை தேடி அலையும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.நாயகியாக நடித்திருக்கும் நியாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் என்றாலும் அதில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், மொட்டை தலையுடன் மீண்டும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால், அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு காட்சிகளில் அழுத்தம் இல்லாதது ஏமாற்றம். ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக விசாரணை நடத்தும் சத்யராஜ், திடீரென்று அவதாரம் எடுப்பது கவனம் பெற்றாலும், அதை சரியான முறையில் சொல்லாமல் கோட்டை விட்டிருக்கிறார்கள்.கருந்தேள் ராஜேஷின் கதைக்கு நாயகன் ஸ்ரீபதி திரைக்கதை அமைத்திருக்கிறார். திகில் மற்றும் மர்ம பின்னணியை கொண்ட கதையை ஸ்ரீபதியின் திரைக்கதை முற்றிலும் மாற்றியிருக்கிறது. (திரைக்கதை எழுதும்போதும் கதாபாத்திரமாக மாறி போதையில் இருந்திருப்பாரோ)

திரைக்கதை எழுதிய ஸ்ரீபதி தான் தடுமாறியிருக்கிறார் என்றால் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் மோகன் டச்சு அதை விட மோசம். ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச அனுகுமுறை கூட இல்லாமல் காட்சிகளை கையாண்டு முழு படத்தையும் சொதப்பியிருக்கிறார். கு.கார்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. படத்தொகுப்பு வளர் பாண்டியன் என்று டைடில் கார்டில் போடுகிறார்கள். ஆனால், படத்தை பார்த்தால் படத்தொகுப்பு செய்தது போலவே இல்லை. எடுத்த காட்சிகளை அப்படியே சேர்த்து வெளியிட்டது போல் இருக்கிறது.

மாயமான பெண்கள் நிலை என்ன? என்ற விசயம் மட்டும் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த காட்சிகள் நகராமல் திரைக்கதை தொய்வாக நகர்கிறது.

மொத்தத்தில், இந்த ‘அங்காரகன்’ அலங்கோலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *