‘பம்பர்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Vetri, Hareesh Peradi, Shivani Narayanan, Kavitha Bharathi, GP Muthu, Thangaduai, Kalki, Dhilipan, Aruvi Madhan, Aadhira, Soundarya
Directed By : M.Selvakumar
Music By : Govind Vasantha
Produced By : Vetha Pirctures – S.Thyagaraja B.E and T.Anandhajothi MA,B.ED
தூத்துக்குடியில் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து திருட்டு வேலை செய்து வருகிறார் நாயகன் வெற்றி. இவர்களை போலீஸ் தேடுவதால், இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுகின்றனர். நான்கு பேரும் சபரிமலை கோவிலுக்குச் செல்கின்றனர். அங்கு வயதான முஸ்லீம் நபரான ஹரீஷ் பெராடி லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்து 10 கோடி ரூபாய்க்கான பம்பர் லாட்டரி சீட்டினை வாங்குகிறார். அந்த லாட்டரியை அங்கேயே விட்டுச் சென்று விடுகிறார் வெற்றி. அதை எடுத்து வைத்துக் கொள்ளும் ஹரீஷ் பெராடி, சில நாட்களில் அந்த லாட்டரிக்கு பத்து கோடி ரூபாய் பம்பர் விழுந்திருப்பதை அறிகிறார்.
காசுக்காக, காந்தி ஜெயந்தி அன்று கூட கள்ள மார்க்கெட்டில் மது விற்கும் அளவுக்கு கீழிறங்கும் 420 புலிப்பாண்டி கதாபாத்திரம், ஏன் அப்படி ஆனது என்பதை அழுத்தமாக வார்த்திருக்கிறார் இயக்குநர் செல்வகுமார். புலிப்பாண்டி, அவர் நண்பர்களோடு கூட்டுக் களவாணியாக இருக்கும் உள்ளூர் காவல் நிலைய ஏட்டுக்கும் (கவிதா பாரதி) இடையிலான இணக்கமும் முரண்களும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டிருப்பதால் கதையோட்டத்துடன் ஒன்றி பயணிக்க முடிகிறது.

மதம், இனம், மொழி கடந்த மனிதம், அதன் வேராக இருக்கும் அறம் ஆகியவற்றை இறுதிவரைப் பற்றிக்கொண்டிருக்கும் இஸ்மாயில் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் புறவுலகச் சிக்கல்கள் பதற வைக்கின்றன. கதையின் நாயகன் புலிப்பாண்டியா–இஸ்மாயிலா என்கிற சந்தேகம் எழும் அளவுக்கு நகரும் இரண்டாம் பாதியை இழுக்காமல் சட்டென்று முடித்துவிடுவது சிறப்பு.
புலிப்பாண்டியாக வெற்றியின் நடிப்பு தரம். அவர் நண்பர்களாக வருபவர்களையும் குறை சொல்ல முடியாது. புலிப்பாண்டியின் மாமன் மகளாக வரும் ஷிவானி நாராயணன், தனக்கு இயல்பாக நடிக்க வரும் என்பதைக் காட்டியிருக்கிறார். தமிழில் ஒரு டஜன் படங்களுக்குமேல் வில்லனாக பயமுறுத்திய அவரா இவர் என வியக்க வைத்திருக்கிறார், இஸ்மாயிலாக வாழ்ந்து காட்டியிருக்கும் ஹரீஷ் பெரேடி.
ஓர் அசலான கதை, அதில் ரத்தமும் சதையுமான கதாபாத்திரங்கள், ஆராவாரம் இல்லாத திரைக்கதை, அலங்காரம் இல்லாத உரையாடல் ஆகியவற்றோடு கோவிந்த் வசந்தாவின் உணர்வு பூர்வமான இசையும்–அதில் கார்த்திக் நேத்தாவின் ரசமான வரிகளும் சேர்ந்துகொண்டதில் சிலுசிலுவென குளிர்ந்த தென்றாக வீசுகிறது இந்த ‘பம்பர்’.











