full screen background image
Search
Sunday 16 August 2026
  • :
  • :
Latest Update

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5

CAST :

Suriya – Vishwanath
Mamitha Baiju – Maddy
Radhika Sarathkumar – Nirmala Devi
Raveena Tandon – Anjali

CREW

Written & Directed by Venky Atluri
Produced by Suryadevara Naga Vamsi & Sai Soujanya
Music: G.V. Prakash Kumar
Director of Photography: Nimish Ravi
Editor: Navin Nooli
Production Designer: Banglan
Banners: Sithara Entertainments, Fortune Four Cinemas
Presenter: Srikara Studios
Pro: Yuvraaj

சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஒரு பணக்கார தொழிலதிபரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட குடும்ப உணர்வுகள் நிறைந்த திரைப்படம். திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற முடிவில் இருக்கும் சஞ்சய் விஸ்வநாத் தன்னுடைய அம்மாவின் ஆசைக்காக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார். எதிர்பாராத விதமாக அந்த குழந்தைக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட, குழந்தையை பெற்ற மமிதா பைஜு மீண்டும் சஞ்சயின் வாழ்க்கைக்குள் வருகிறார். அதன் பிறகு அவர்களுக்குள் உருவாகும் உறவும் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களும்தான் படத்தின் முக்கிய கதை.

இயக்குநர் வெங்கி அட்லூரி ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து வழக்கமான மாஸ் கதையை சொல்லாமல், குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் மையமாக வைத்து ஒரு அழகான பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக அப்பா மகன் உறவு, அம்மா மகன் பாசம், காதல், குடும்பம் மற்றும் திருமணம் குறித்த பார்வை என பல விஷயங்களை ஒரே கதைக்குள் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்.


சூர்யா சஞ்சய் விஸ்வநாத் கதாபாத்திரத்தில் மிகவும் ஸ்டைலிஷாகவும் அதே நேரத்தில் இயல்பாகவும் நடித்திருக்கிறார். மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் தன்னை சுற்றியிருப்பவர்களை மதிப்பது, ஊழியர்களை குடும்பமாக பார்ப்பது, அம்மா மீது பாசம் வைத்திருப்பது என கதாபாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருக்கும் மனிதராகவும், குழந்தைக்கு அப்பாவாகவும், தாயின் மீது பாசம் கொண்ட மகனாகவும் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. குறிப்பாக அம்மாவை நினைத்து உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை நெகிழ வைக்கிறது.

மமிதா பைஜு இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். துறுதுறுப்பான இளம் பெண்ணாகவும், குழந்தையின் மீது பாசம் கொண்டவராகவும், சூர்யாவை காதலிக்கும் பெண்ணாகவும் அவர் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். சிரிப்பு, காதல், வெட்கம், சோகம் என பலவிதமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். சூர்யாவுக்கும் மமிதாவுக்கும் இடையிலான காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. ராதிகாவுடன் இணைந்து வரும் காட்சிகளும் படத்திற்கு நல்ல நகைச்சுவையையும் குடும்ப உணர்வையும் கொடுக்கின்றன.

ராதிகா சரத்குமார் சூர்யாவின் அம்மாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையும், பேரனை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், பின்னர் மமிதா பைஜுவுடன் உருவாகும் பாசமும் என அவரது கதாபாத்திரம் படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு நல்ல ஆதரவாக இருக்கிறது.

படத்தின் மற்ற நடிகர்களான ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, ராஜீவ் மேனன் உள்ளிட்டோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குழந்தையும் திரையில் அழகாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.

படத்தின் இன்னொரு சிறப்பு அதன் கருத்துக்கள். பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை முழுமையானதாகிவிடாது, பெற்றோர்களை மதிக்க வேண்டும், நம்மை நம்பி இருப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், குடும்ப உறவுகளின் மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும் என பல நல்ல விஷயங்களை படம் சொல்லுகிறது. திருமணம் குறித்த வழக்கமான பார்வையை மட்டும் பேசாமல் வயது வித்தியாசம், வாடகைத்தாய் முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகள் போன்ற விஷயங்களையும் படம் தொட்டுச் செல்கிறது.

முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் சில இடங்களில் கதை சற்று மெதுவாக நகர்கிறது. அதிகமான கதாபாத்திரங்கள் இருப்பதால் சில பகுதிகள் சற்று நீளமாகவும் தோன்றுகின்றன. ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இருப்பதால் இந்த குறைகள் பெரிதாக தெரியவில்லை.

நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகான தோற்றத்தை கொடுத்திருக்கிறது. ஜி வி பிரகாஷ் குமாரின் இசையும் பின்னணி இசையும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு நல்ல பலம் சேர்க்கின்றன. நவீன் நூலியின் படத்தொகுப்பும் படத்தை சோர்வில்லாமல் நகர்த்த உதவுகிறது. தயாரிப்பு தரமும் பிரம்மாண்டமாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ சில இடங்களில் வேகம் குறைந்தாலும் குடும்பத்துடன் ரசித்து பார்க்கக்கூடிய ஒரு நிறைவான திரைப்படமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இருக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *