‘மிஷன் சாப்டர் 1’ திரைபட ரேட்டிங்: 3/5
Casting : Arun Vijay, Amy Jackson, Nimisha Sajayan, Abi Hassan, Bharath Bopanna, Iyal, Viraj, Jason Shah
Directed By : Vijay
Music By : GV Prakash Kumar
Produced By : Subaskaran Allirajah, M. Rajashekar, S. Swathi, Surya Vamsi Prasad, Kotha, Jeevan Kotha
மகள் சனாவின் (இயல்) சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார், குணசீலன் (அருண் விஜய்). மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு நாள் குறிக்கிறார்கள். அங்கிருக்கும் கேரள செவிலி (நிமிஷா சஜயன்) அவர்களுக்கு உதவுகிறார். திடீரென ஒரு கொள்ளைக் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் குணசீலன், அவர்களைத் தாக்குவதால், சிறைக்குச் செல்ல வேண்டி வருகிறது. இதற்கிடையே சிறையைஹேக் செய்யும் தீவிரவாத கும்பல் ஒன்று, அங்கிருக்கும் தங்கள் ஆட்களைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் இறங்குகிறது. இதை அறியும் குணசீலன், அந்த தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க களம் இறங்குகிறார். அதை அவரால் செய்ய முடிந்ததா? குணசீலன் யார்? அவர் குழந்தையின் அறுவை சிகிச்சை நடந்ததா? என்பது மீதி படம்.
கொஞ்சம் சென்டிமென்ட், நிறைய ஆக்ஷன் என யோசித்திருக்கிறார், இயக்குநர் விஜய். ஒரு பக்கம் மகளின் சிகிச்சை, மற்றொரு பக்கம் சிறை சிக்கல் என இரண்டும் மெயின் கதையாக இருந்தாலும் மருத்துவமனையில் மகளுக்கு உதவும் செவிலிக்கு இருக்கும் எதிரி, சிறை அதிகாரிகளுக்குள் இருக்கும் தீவிரவாத ஒற்றன் என சின்னச் சின்னத் துணை சதிகள் கதைக்கு உதவுகின்றன. அவர்களுக்கான கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
ஹவாலா மூலம் பணம் எப்படி கைமாற்றப்படுகிறது என்கிற தகவலையும் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பணத்தை ஹீரோபெற்று விடுவாரா? குழந்தைக்கு சிகிச்சை நடந்துவிடுமா? என்கிற பதைபதைப்பை அழகாகக் கடத்தும் கதையில் சிறைக்குள் வேறொரு விஷயம் வந்ததும் பரபரப்பாகிறது படம்.
இந்த முதல் பாதியை அடுத்து வரும் வழக்கமான ‘டெம்பிளேட்’காட்சிகளும் யூகிக்க முடிகிற திரைக்கதையும் படத்தோடு ஒன்ற விடாமல் தடுக்கின்றன.
அப்பா – மகள் சென்டிமென்ட் காட்சிகள் சில இடங்களில் நெகிழ வைத்தாலும் இந்த ஆக்ஷன் கதைக்குள் அது தொடராமல் தொலைந்து விடுகிறது. குணசீலனுக்கான பிளாஷ்பேக் காட்சிகளும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அருண் விஜய், மகள் இயலிடம் காட்டும் பாசம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகளில் சிறந்த நடிப்பை வழங்கிஇருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவர் வேகம் பரபரக்க வைக்கிறது. அவர் வில்லன்களைத் தாக்குவதுநம்பும்படியாக இருக்கிறது. குறிப்பாகச் சிறைச்சாலைக்குள் நடக்கும் அந்தச் சண்டைக் காட்சி சிறப்பு. தமிழ்ப் பேசும் லண்டன் போலீஸ் அதிகாரியாக எமி ஜாக்சன் சில காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார். எப்போதும் கேமரா பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும் தீவிரவாதி பரத் போபண்ணா , சர்தாராக வரும் அபி ஹாசன், வார்டு பாய் விராஜ் உட்பட துணை பாத்திரங்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்துக்கு ஆழமாக உதவியிருக்கிறது. லாஜிக் இல்லாத ஆக்ஷனை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த ‘மிஷன்’ பிடிக்கலாம்.