“விடுதலை-1” திரைப்பட ரேட்டிங்: 4.5/5
நடிகர்கள்:சூரி,விஜய் சேதுபதி,பவானிஸ்ரீ
இயக்கம்: வெற்றிமாறன்
சினிமா வகை:Action, Drama, Crime
கால அளவு:2 Hrs 30 Min
வெற்றிமாறன் படம் என்பதாலேயே விடுதலை மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பையும் மிஞ்சி படம் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ரயில் குண்டுவெடிப்புக்கு பிறகு நடப்பதுடன் படம் துவங்குகிறது. ஆரம்பமே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.
மக்களையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க போராடும் குழுவுக்கும், காவல் துறைக்கும் இடையேயான பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கிறது விடுதலை.
பிரச்சனை உச்சத்தில் இருக்கும் மலை பகுதியில் போலீஸ் டிரைவராக இருக்கிறார் குமரேசன்(சூரி). அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காப்பாற்றும் குமரேசன் தன் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகிறார்.
அருமபுரி என்கிற ஊருக்கு அருகில் சுரங்கம் அமைக்க அரசு முடிவு செய்கிறது. அதை எதிர்த்து வாத்தியார் (விஜய் சேதுபதி)தலைமையில் அப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். வாத்தியாரை பிடிக்க கோஸ்ட் ஹன்ட் என்கிற ஆபரேஷனை காவல் துறை கொண்டு வருகிறது.
வாத்தியார் இருக்கும் இடம் யாருக்குமே தெரியாது. அப்படி இருக்கும் போது வாத்தியார் இருக்கும் இடம் பற்றி தனக்கு தெரியும் என்கிறார் குமரேசன். இதற்கிடையே பழங்குடியினத்தை சேர்ந்த பெண்(பவானிஸ்ரீ) மீது குமரேசனுக்கு காதல் ஏற்படுகிறது.
அதே சமயம் வாத்தியாரை பிடிக்க காவல் துறையினர் அப்பகுதி மக்கள் மீது அடக்குமுறையை கையாள்கிறார்கள். பல உயிர்களை காப்பாற்ற வாத்தியாரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை தவிர குமரேசனுக்கு வேறு வழியில்லை.
விடுதலை படம் மூலம் மேலும் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன். படம் துவங்கியதில் இருந்தே கதையுடன் ரசிகர்கள் ஒன்றிவிடுகிறார்கள். தியேட்டரில் இருக்கும் யாரும் இருக்கையை விட்டு நகரவில்லை. அந்த அளவுக்கு கதையுடன் ஒன்றிவிட்டார்கள்.
கிளைமாக்ஸ் காட்சிகளை செதுக்கியிருக்கிறார் வெற்றிமாறன். சூரி அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். குறைவான நேரமே வந்தாலும் வாத்தியாராக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.
இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம். இளகிய மனமுள்ளவர்களால் பார்க்க முடியாத அளவுக்கு சில காட்சிகள் இருக்கின்றது. சேத்தன், ராஜீவ் மேனன், கவுதம் மேனன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படம் ஓடும் இரண்டரை மணிநேரமும் அடுத்தது என்ன, அடுத்தது என்னவென்று டென்ஷனிலேயே உட்கார வைத்துவிட்டார் வெற்றிமாறன்.
விடுதலை- கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.