“டிரைவர் ஜமுனா” திரைப்பட ரேட்டிங்: 3/5.
நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீ ரஞ்சனி, ஆடுகளம் நரேன்; இயக்கம்: கின்ஸ்லின்.
ஐஸ்வர்யா ராஜேஷ் இதற்கு முன்பாக நடித்து வெளிவந்த பூமிகா, சுழல் ஆகியவை, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருந்த நிலையில், தற்போது வெளிவந்திருக்கும் டிரைவர் ஜமுனாவும் அதே பாணியில் அமைந்திருக்கிறது. இயக்குநர் கின்ஸ்லின் இதற்கு முன்பாக வத்திக்குச்சி படத்தை இயக்கியவர்.
டிரைவர் ஜமுனா படத்தின் கதை இதுதான்: தனது தந்தை கொலைசெய்யப்பட்ட பிறகு, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் செய்து வந்த கால் டாக்ஸி ஓட்டுநர் பணியை செய்ய ஆரம்பிக்கிறார் ஜமுனா (ஐஸ்வர்யா ராஜேஷ்).
வீட்டை அடமானம் வைத்து விட்டு ஓடிவிட்ட தம்பி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அம்மா (ஸ்ரீ ரஞ்சனி) என வீட்டில் நெருக்கடியான சூழல். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏவான மரகதவேலை (ஆடுகளம் நரேன்) கொலை செய்யக் கிளம்பும் ஒரு கூலிப்படை, ஜமுனாவின் கால் டாக்சியில் ஏறுகிறது. பின்னர், அந்தக் கூலிப்படையைத் துரத்தி வருகிறது போலீஸ்.
கூலிப்படையின் திட்டம் நிறைவேறியதா, இவர்களுக்கும் நாயகியின் தந்தை கொலைசெய்யப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்திற்கு தற்போது ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான விமர்சனங்கள், படத்தின் இரண்டாம் பாதியில் திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன.
இதுவும் வழக்கமான சினிமாவா?
“பார்வையாளர்களுக்கு ஒரு தீவிரமான உணர்வைத் தர தீவிரமாக முயற்சிக்கிறது டிரைவர் ஜமுனா. ஆனால், படத்திற்குள் மோதல்கள் குறைவாக இருப்பதும் மேம்போக்கான காட்சிகளும் சேர்ந்து ஒரு வழக்கமான சினிமாவைத் தந்திருக்கின்றன,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது.
“பாத்திரங்களை அறிமுகப்படுத்தவும் அவர்களது நோக்கங்களைச் சொல்லவும் நேரம் எடுத்துக்கொள்கிறார் இயக்குநர் கின்ஸ்லின். படத்தின் மையக் கதாபாத்திரம் ஒரு சிக்கலில் சிக்கிக்கொள்ளும்போது கதை சுவாரஸ்யமானதாக மாறுகிறது.
கூலிப்படையினர் ஜமுனாவின் காருக்குள் ஏறும்போது பரபரப்புத் தொற்றிக்கொள்கிறது. ஆனால், அந்த த்ரில் அரைமணி நேரம் கூட நீடிப்பதில்லை என்பதுதான் மிகப் பெரிய ஏமாற்றம்.”
“பெரிதாக ஏதோ நடக்குமென எதிர்பார்க்கும்போது, கதை சொல்லும் விதம் பலவீனமடைந்து பாத்திரங்கள் அபத்தமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கின்றன.
உதாரணமாக, ஒரு கூலிப் படை கொலையாளி கதாநாயகியை எளிதில் கொலை செய்திருக்க முடியும் என்ற நிலையில், ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, கொல்லாமல் விடுகிறார். கதையின் முக்கியமான கதாபாத்திரம், படம் நெடுக வர வேண்டுமென்றால், அதற்கான புத்திசாலித்தனமான காட்சிகள் வேண்டும்.
உச்சகட்ட காட்சிகளில் வரும் திருப்பம் சிறப்பாக இருக்கிறது. ஜமுனாவின் பின்னணிக் கதையும் அவர் இந்த வேலையை எடுத்துக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருக்கின்றன.
ஆனால், முக்கியக் கதாபாத்திரங்களோடு ஒன்றச் செய்யும்வகையில் சம்பவங்கள் இல்லை. மேலும் காவல்துறையினர் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதும் தெரியவில்லை. 80களில் வரும் படத்தைப் போல, கதாநாயகி அவர்களை அழித்த பிறகுதான் காவல்துறையே வருகிறது” என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் விமர்சனம்.
சிந்திக்க வைக்கும் கின்ஸ்லினின் இயக்கம்
படத்தின் துவக்கம் சிறப்பாக இருந்தாலும், போகப்போக திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் விட்டிருப்பதாக விமர்சித்துள்ளது இந்தியா டுடே இணையதளம்.
“‘டிரைவர் ஜமுனா சிறப்பாகத்தான் துவங்குகிறது. ஆனால், அவர் கொலைகாரர்களிடம் மாட்டிக்கொண்டதும், அந்த சிறப்பான தன்மை முடிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு வரும் கதையில் ஏகப்பட்ட லாஜிக் கோளாறுகள்.
கின்ஸ்லின் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பல இடங்கள் அதிர வைக்கின்றன. மிகப் பெரிய லாஜிக் ஓட்டைகளையெல்லாம் எப்படி கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்று தோன்றுகிறது.
வெளி வேலைக்குச் செல்லும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பப் பெண், எத்தகைய ஆபத்தான சூழ்நிலையையும் துணிச்சலுடனும், புத்திக்கூர்மையுடனும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை உனர்த்துவதால், இந்த ஆண்டில் வெளியான முக்கியமான படமாக இதைக் கொள்ளலாம்.
’டிரைவர் ஜமுனா’ – சுவாரஸ்யமான சாதனைப்பெண்! குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!