full screen background image
Search
Wednesday 30 April 2025
  • :
  • :
Latest Update

“உடன்பால்” திரைப்பட விமர்சனம்

“உடன்பால்” திரைப்பட ரேட்டிங்: 3/5

கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் லிங்கா, அபர்ணதி, விவேக் பிரசன்னா, காயத்ரி, தீனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “உடன்பால்”. வரும் 30 ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ட்ரெய்லர் பல தரப்பு ரசிகர்களிடையேயும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால், படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்பை எந்த அளவிற்கு பூர்த்தி செய்தது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.

கதைப்படி,

சார்லியின் மகன்களாக லிங்கா மற்றும் தீனாவும் மகளாக காயத்ரியும், மருமகனாக விவேக் பிரசன்னாவும் மருமகளாக அபர்ணதியும் இருக்கிறார்கள்.

தனது கடன் பிரச்சனைகளை தீர்க்க, வாழ்ந்து வரும் வீட்டினை விற்க முடிவு எடுக்கிறார் லிங்கா. வீட்டினை விற்றால் தனக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என காயத்ரியும் ஓகே சொல்கிறார்.

ஆனால், வாழும் வீட்டை விற்க ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிடுகிறார் சார்லி. இதனால் கோபமடைகிறார் லிங்கா. இச்சமயத்தில், அருகில் இருக்கும் காம்ப்ளக்ஸில் பணிக்காக செல்கிறார் சார்லி.

சார்லி சென்ற காம்ப்ளக்ஸ் இடிந்து விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வர, இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். மேலும், இறந்தவர்களுக்கு அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தரப்படும் எனவும் செய்தி வருகிறது.

இதனால், துக்கத்தோடு கலந்து மகிழ்ச்சியிலும் இருக்கின்றனர் குடும்பத்தினர். 20 லட்சத்தில் தனக்கு இவ்வளவு வேண்டும் என்று மாறி மாறி சண்டையிட்டுக் கொள்கின்றனர் லிங்காவும் காயத்ரியும்.

தனது கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதை எண்ணி மகிழ்ச்சியோடு தனது அப்பாவின் பிணத்தை வாங்க செல்ல முற்படும் வேளையில் ………. இதோடு கதையை நிறுத்தி கொள்ளலாம்…. அதன் பிறகு என்ன ஆனது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

ஒரு பழைய வீட்டிற்குள்ளே முழுக்கதையும் பயணம் ஆகிறது. எந்த இடத்திலும் படத்தின் கதை தொய்வடைய விடாமல் திரைக்கதையை அவ்வளவும் அழகாக நகர்த்தி நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக். லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா இருவரும் கலந்து அடிக்கும் லூட்டிகள் படம் பார்ப்பவர்களை வெகுவாகவே ரசிக்க வைத்துள்ளது.

கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து கதையோடு ஒன்றி படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கின்றனர் லிங்கா, விவேக் பிரசன்னா, அபர்ணா மற்றும் காயத்ரி. அழகு தேவதையாக தனது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்து முடித்திருக்கிறார் அபர்ணா.

அதிலும், காயத்ரியின் ரியாக்‌ஷன்ஸ் எல்லாமே அல்டிமேட் தான். எந்த இடத்திலும் முகம் சுழிக்கும்படியான ஆபாச காட்சிகள் எதுவும் படத்தில் இல்லாதது படத்திற்கு பலம்.

வெறும் ஏதோ எண்டர்டெயின்மெண்ட் செய்துவிட்டோம் என்று இல்லாமல், க்ளைமாக்ஸில் வைத்த ஒரு நுணுக்கமான செய்தி இச்சமகாலத்தில் அனைவரிடத்திலும் வேண்டும் ஒன்றாய் இருக்கக் கூடியதை தனது பாணியில் பறைசாற்றி சென்றிருக்கிறார் இயக்குனர்.

கடைசி நேரத்தில் வந்தாலும், தனக்கான கவுண்டர் காமெடிகளை தெறிக்க விட்டிருக்கிறார் தீனா. தனது அனுபவ நடிப்பால் நிமிர்ந்து நிற்கிறார் சார்லி.

பணத்திற்காக பெற்ற பிள்ளைகள் இப்படியெல்லாம் செய்வார்களா என்று எழும் கேள்விக்கு சமகாலத்தில் இப்படியெல்லாம் நடந்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை எனலாம்…

நீ என்ன விதைக்கிறாயோ அதையே நீ அறுவடை செய்வாய்.. இதுவே ஒன்லைன்..

ஒரே வீட்டை பல கோணத்தில் கேமராவை வைத்து நம்மை படம் முழுக்க ரசிக்க வைத்ததில் ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் பங்கு அலப்பறியது.

சக்தி பாலாஜியின் பின்னணி இசை கதையோடு பயணம் புரிய கைகொடுத்திருக்கிறது. தந்தையை இழந்த சமயத்தில் காமெடி காட்சிகள் அங்கே உலவியதை இயக்குனர் சற்று தவிர்த்திருந்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘உடன்பால்’ திரைப்படம் சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *