full screen background image
Search
Thursday 23 January 2025
  • :
  • :

12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’

12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’

எஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் சாகுல் அமீது தயாரித்திருக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’. நவீன் மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில்
விகாஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா, வெங்கடேஷ், பிரவீன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது, நடிகர்களின் பட்டியலை பார்த்தாலே தெரிகிறது. அதிலும், சுமார் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் சித்ரா, இப்படத்தில் இதுவரை நடிக்காத ஒரு கெட்டப்பில் நடித்திருக்கிறார்.

இவ்வளவு பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் 12 நாட்களில் இயக்குநர் நவீன் மணிகண்டன் முடித்திருப்பது தான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும், மூன்று பாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகளையும் இந்த நாட்களிலேயே படமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதற்கு இயக்குநர்களிடம் சரியான திட்டமிடல் இல்லாததும், அதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகரிப்பதும் தான் காரணம், என்று பல தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இயக்குநர் நவீன் மணிகண்டனின் இப்பட தகவல், அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறது.

12 நாட்களில் முடித்தாலும், ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் எப்படிப்பட்ட கமர்ஷியல் விஷயங்கள் இருக்குமோ அவை அனைத்தையும் கொண்டு, பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் போல இப்படம் உருவாகியிருப்பது கூடுதல் சிறப்பு என்றே சொல்லலாம்.

இப்படி 12 நாட்களில் படப்பிடிப்பை முடித்தது எப்படி, என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, “தான் சினிமாத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினாலும், கேமரா உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறேன். இதனால், பல இயக்குநர்கள் பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன். அத்துடன், படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு, எப்படி தயாராக வேண்டும், என்பதிலும் தெளிவாக இருந்ததால் தான், 12 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது.

இளைஞர்களுக்கான ஒரு படமாகவும், குடும்பமாக பார்க்க கூடிய ஒரு படமாகவும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ இருக்கும். சித்ரா மற்றும் டெல்லி கணேஷ், ஹீரோவின் அம்மா, அப்பாவாக நடித்திருக்கிறார்கள். அவர்களது போர்ஷன் செண்டிமெண்டாக இருப்பதோடு, காமெடியாகவும் இருக்கும்.

பொறுப்பில்லாமல் இருக்கும் ஹீரோவை திருத்த அவரது அப்பா பல முறை முயற்சித்தாலும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதே அப்பாவுக்காக ஹீரோ பொறுப்பானவராக மாறுகிறார், அதற்கு அவரது காதலியும் ஒரு காரணமாக அமைகிறார், அது எப்படி என்பது தான் கதை.

சாதாரணமான கதையாக இருந்தாலும், படம் ரசிகர்களை எண்டர்டெயின் பண்ணக்கூடிய விதத்தில் சிறப்பாக வந்திருக்கிறது. ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர் ஆகியோர் காமெடியில் தனி முத்திரை பதிப்பார்கள்.” என்றார்.

எஸ்.ஆர்.ராம் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கவி கார்கோ, ஹரிதாஸ் ஆகியோர் பாடல்கல் எழுதியிருக்கிறார்கள். ராக்கி ராஜேஷ் சண்டை காட்சிகளை வடிவமைக்க, பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார்.

விஜய் டிவி புகழ் செந்தில், ராஜலட்சுமி தம்பதி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள் பாடியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.

சினிமா பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான விழாவாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரபலங்களுக்கு பாடல்கள் திரையிடப்பட்டது. பாடல்களையும், அதை படமாக்கிய விதத்தையும் பிரபலங்கள் வெகுவாக பாராட்டி பேசியதோடு, பாடல்களை பார்க்கும் போதே தெரிகிறது, இது ரசிகர்களுக்கான படம் என்றும், வாழ்த்தினார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *