full screen background image
Search
Saturday 22 March 2025
  • :
  • :

Moviebuff FirstClap Season 2 Awards

குறும்பட இயக்குனர்களை உற்சாகப்படுத்திய சூர்யா..!

பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி

“நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி ; குறும்பட விழாவில் சூர்யா பாராட்டு

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள்.. அந்தவிதமாக மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்வு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன், மூவிபப் CEO செந்தில்குமார், க்யூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்தின் CEO அரவிந்த் ரங்கநாதன், Knock ஸ்டுடியோஸ் நிர்வாகி கல்யாணம், எடிட்டர் ரூபன், சென்சார் அதிகாரி லீலா மீனாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களது கரங்களால் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழையும் பரிசுத்தொகையையும் வழங்கினார்கள்.

இந்த குறும்பட போட்டியில் ‘கல்கி’யை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூ.3 லட்சத்தை பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது…

இவருக்கு அடுத்ததாக ‘கம்பளிப்பூச்சி’ இயக்குனர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 லட்சம் பரிசுத்தொகையும், பேரார்வம்’ குறும்படத்திற்காக சாரங் தியாகு ரூ.1 லட்சம் ,குக்கருக்கு விசில் போடு குறும்படத்தை இயக்கிய ஷ்யாம் சுந்தர் மற்றும் ‘மயிர்’ குறும்படத்தை இயக்கிய யோகி ஆகியோர் தலா ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார்கள்.

2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் பேசும்போது, “இப்படி ஒரு நிகழ்வில் எங்களது பங்கும் இருப்பதற்கு மகிழ்ச்சி.. நிறைய திறமையாளர்களால் ஆன்லைன் மூலமாக கூட தங்களது திறமையை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அப்படிப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியாகத்தான் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. சீசன்-3 இதைவிட பிரமாண்டமாக இருக்கும்” என்றார்.

மேலும் இந்த குறும்படங்களை பார்த்து சரியான நேரத்தில் சென்சார் செய்து சான்றிதழ் தர ஒத்துழைத்த சென்சார் அதிகாரி லீலா மீனாட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்ட ராஜசேகரன், முன்பெல்லாம் ரிலீஸ் தேதியை பிக்ஸ் செய்துவிட்டு குறித்த நேரத்தில் சென்சார் சான்றிதழ் பெறுவது கொஞ்சம் கடினமாக இருந்தது.. இப்போது லீலா மீனாட்சி வந்தபிறகு, திரையுலகினர் தைரியமாக எங்களது ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவிக்க முடிகிறது என பாராட்டினார்.

விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், “ஒரு படம் எடுப்பது .சுலபம்.ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி அதையம் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி.. இந்த விழாவிற்கு வந்திருப்பது ஏதோ கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு வந்தது போல உணர்கிறேன்..இந்த வயதில் யாராவது உதவி பண்ணினால் மேலே வந்துவிடலாம்.. ஆனால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் இனி வரும்நாட்களில் புதிய முயற்சிகளை உருவாக்க போகிறவர்கள் .நானெல்லாம் எழுபதுகளின் குழந்தைப்பருவத்தை பார்த்தவன்..ஆனால் இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு அனுபவம் கிடைக்கிறது.

எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும்கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோன்னு நினைத்தால் அதை அப்போதே உடனே .சரிசெய்து விடவேண்டும் எங்கேயும் குறைவந்துவிட கூடாது என இயக்குனர் பாலா அண்ணன் அடிக்கடி சொல்வார். அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.. ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.

நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். கம்பளிப்பூச்சி குறும்படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல, அதை பார்த்து ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.

இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட்.. 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட்.. கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு அந்தப்படம் பார்த்தவர்கள் மத்தியில் விவசாயிகள் குறித்த பார்வையை மாற்றியிருக்கும் என்பது தான் சந்தோசம்.

எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக அதை செய்யுங்கள் ..இந்த மார்க்கெட் ஒப்பனனானது.. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம்.. இரண்டுமே விலைபோகும்.. ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்” என கூறினார் சூர்யா.

முன்னதாக ரசிகர்கள் என்.ஜி.கே படம் தீபாவளிக்கு வெளியாகாமல் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து சூர்யாவிடம் கேட்க, “இந்த குறும்படங்களை போல ஒரு வித்தியாசமான முயற்சியாகத்தான் என்.ஜி.கே உருவாகிவருகிறது. சில நேரங்களில் எங்களையும் மீறி ஒரு விஷயம் நடக்கும்போது நாம் அமைதியாக ஒத்துழைப்பு கொடுத்துதான் ஆகவேண்டும்..உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.. இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க” அவர்களை அமைதிப்படுத்தினார் சூர்யா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *