‘கான் சிட்டி’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
CAST & CREW
Arjun Das
Anna Ben
Yogi Babu
Vadivukkarasi
Akilan
Nandagopal
VTV Ganesh
Deepa Ramanujam
Radha Ravi
Director: Harish Durairaj
Producer: Harish Durairaj
Music: Sean Roldan
Cinematography: Aravind Viswanathan
Editor: Arul Moses A
‘கான் சிட்டி’ கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சரவணா, மித்ரா, ஜாக்கி, ஜானகி ஆகிய நான்கு பேரும் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற ஆசையில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் மோசடிகளில் இறங்குகிறார்கள். ஆனால் அவர்கள் போட்ட திட்டமே அவர்களை ஏமாற்றி, தங்களுடைய பணத்தோடு மக்களின் பணத்தையும் இழக்க வைக்கிறது. போலீசில் சிக்கிய அவர்கள் அங்கிருந்து தப்பித்து வேறு ஊரில் ஒரு குடும்பமாக வாழ ஆரம்பிக்கிறார்கள். அந்த வாழ்க்கையிலும் ஒரு குழந்தை கடத்தப்படும் சம்பவம் நடக்க, மீண்டும் பழைய மோசடி உலகத்திற்குள் அவர்கள் இழுக்கப்படுகிறார்கள். இறுதியில் அவர்கள் திட்டம் வெற்றி பெற்றதா, குழந்தையை காப்பாற்றினார்களா, நேர்மையான வாழ்க்கைக்கு திரும்பினார்களா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
அர்ஜுன் தாஸ் இதுவரை பார்த்திராத வகையில் சீரியஸுடன் நகைச்சுவையும் கலந்து நடித்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கு தேவையான உடல்மொழி, வசன உச்சரிப்பு என பல இடங்களில் கவனம் ஈர்க்கிறார். அன்னா பென் அமைதியான ஆனால் அழுத்தமான நடிப்பால் கதைக்கு நல்ல பலம் சேர்க்கிறார். யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி இணையும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம். இருவரின் இயல்பான காமெடி பல இடங்களில் சிரிக்க வைக்கிறது. விடிவி கணேஷ், நந்தகோபால், ராதா ரவி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, அருள்தாஸ், ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஷான் ரோல்டனின் பின்னணி இசை பல காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது. அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு படத்தின் டார்க் காமெடி சூழலை அழகாக பதிவு செய்கிறது. முதல் பாதி வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தேவையற்ற நீளமாக இருப்பதால் சிறிது தொய்வு ஏற்படுகிறது.
மோசடி, பேராசை, பணத்தாசை ஆகியவற்றை டார்க் காமெடி பாணியில் சொல்ல முயன்றிருக்கும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ், பல இடங்களில் புத்திசாலித்தனமான திரைக்கதையால் ரசிக்க வைக்கிறார். சில குறைகள் இருந்தாலும், நகைச்சுவை, த்ரில்லர், உணர்ச்சி ஆகியவற்றை கலந்த ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு படமாக கான் சிட்டி அமைந்துள்ளது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ரசிகர்களை சலிக்காமல் ஈர்க்கும் அளவுக்கு படம் சுவாரஸ்யமாக பயணிக்கிறது. மொத்தத்தில் கான் சிட்டி ஒரு நல்ல டார்க் காமெடி த்ரில்லர் மற்றும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம்.















