full screen background image
Search
Saturday 27 June 2026
  • :
  • :
Latest Update

‘அறிவான்’ திரைப்பட விமர்சனம்

‘அறிவான்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Ananth Nag, Janany Kunaseelan, Boys Rajan, Birla Bose, Gowri Shankar,Gurumoorthi

Directed By : S. Arun Prasath

Music By : Karthik ERA

Produced By : MD Films – Durai Mahadevan

அறிவான் ஒரு கிரைம் திரில்லர் படம். நெய்வேலி பின்னணியில் நடக்கும் தொடர்கொலைகளை மையமாக வைத்து கதை நகர்கிறது. நேர்மையான போலீஸ் அதிகாரி சூர்யா அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும் ஒருவர். சஸ்பென்ஷனில் இருந்து திரும்பி நெய்வேலியில் பொறுப்பேற்கும் அவர், பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மர்மமான ஒரு மரணம் சந்திக்கிறார். ஆரம்பத்தில் அது சாதாரண விபத்து போல தோன்றினாலும், தொடர்ந்து நடக்கும் கொலைகள் இது ஒரு தொடர் கொலை என்று அவருக்கு தெளிவாகிறது. விசாரணை தீவிரமாகும் போது போலீஸ் நிலையத்திலேயே ஒரு கொலை நடப்பது வழக்குக்கு இன்னும் அழுத்தம் தருகிறது. அதே சமயம் அவரது காதலி வினிஷாவின் குடும்பத்தில் நடக்கும் திடீர் சம்பவம் கதைக்கு உணர்ச்சி பரிமாணத்தையும் சேர்க்கிறது.

கதை வெறும் கொலையாளியை தேடும் போலீஸ் கதையாக மட்டும் இல்லாமல், குடும்பத்திற்குள் மறைந்து கிடக்கும் சமூக அநீதிகளை தொடுகிறது. பல ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் ஒரு விஷயம் இந்த கொலைகளுக்கு காரணம் என்பதை கிளைமாக்ஸில் வெளிப்படுத்துகிறது. அதனால் படம் ஒரு சமூக விழிப்புணர்வு நோக்கத்தையும் கொண்டு செல்கிறது.

நாயகனாக ஆனந்த் நாக் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பை வெளிப்படுத்துகிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழி இருந்தாலும், சில இடங்களில் இன்னும் கம்பீரம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதிரடி வசனங்களுக்குப் பதிலாக அமைதியான விசாரணை முறை அதிகம். ஜனனி குணசீலன் யூடியூப்பராக நடித்துள்ளார். கதையில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லையெனினும் தன்னால் முடிந்த அளவில் கதைக்கு துணை நிற்கிறார். சில இடங்களில் அவர் கேரக்டர் நம்பகத்தன்மை குறைவாக தோன்றினாலும், இயல்பான நடிப்பு கவனிக்க வைக்கிறது. மற்ற நடிகர்கள் தங்களுக்கான வேடங்களில் தேவையான பங்களிப்பை செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் பாலாஜி நெய்வேலி சூழலை ட்ரோன் ஷாட்கள் மற்றும் இரவு காட்சிகள் மூலம் அழகாக பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கார்த்திக் எரா வழங்கிய பின்னணி இசை விசாரணை காட்சிகளில் பதற்றத்தை தருகிறது. பாடல்கள் ஓகே அளவில் உள்ளன. குறைந்த பட்ஜெட்டில் தொழில்நுட்ப ரீதியாக சீராக அமைக்கப்பட்ட படம் என்ற உணர்வு கிடைக்கிறது.

இயக்குனர் அருண் பிரசாத் ஒரு சமூக கருத்தை கிரைம் திரில்லர் வடிவில் சொல்ல முயற்சி செய்துள்ளார். திரைக்கதையில் சில நல்ல திருப்பங்கள் வேலை செய்துள்ளன. ஆனால் முதல் பாதியில் பதட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. சில காட்சிகளில் செயற்கை தனம் தெரிந்தாலும், கிளைமாக்ஸில் கொலையாளியின் காரணத்தை நியாயப்படுத்தும் விதத்தில் முடிவை கொண்டு செல்கிறார். பெண்களுக்கு எதிரான அநீதிகளை சுட்டிக்காட்டி அவசர உதவி எண் 181 பற்றிய விழிப்புணர்வையும் கூறுவது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில் அறிவான் ஒரு ஓரளவு பரபரப்பை தரும், சமூக செய்தியையும் சேர்த்துக் கூறும் கிரைம் திரில்லர். சிறு குறைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பார்த்தால் ஒருமுறை பார்க்கக்கூடிய படம் என்று சொல்லலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *