‘ரெட் லேபில்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Lenin, Azmin, R.V. Udhayakumar, Munishkanth, Anu Mohan
Directed By : K.R. Vinoth
Music By : Kailas Menon
Produced By : Revgen Film Factory – Lenin
‘ரெட் லேபில்’ கல்லூரி பின்னணியில் நடக்கும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம். கல்லூரி காலத்தில் அடிதடி அரசியல் வழக்குகள் என்று பிரச்சினை வாழ்க்கை வாழ்ந்த லெனின், படிப்பு முடிந்த பிறகு அனைத்தையும் விட்டுவிட்டு வேலை காதல் என்று அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் படித்த கல்லூரியில் நடக்க இருக்கும் மாணவர் தலைவர் தேர்தல், அவரை மீண்டும் கல்லூரிக்குள் இழுக்கிறது. அங்கு அரசியல்வாதியான ஆர்.வி உதயகுமாரின் மகன் அராஜகமாக தேர்தலை கைப்பற்ற முயற்சிக்க, அதை தடுக்க நல்ல மாணவனை வெல்ல வைக்க லெனின் களத்தில் இறங்குகிறார். இந்த சூழ்நிலையில் கல்லூரி வளாகத்திற்குள் ஒரு கொலை நடக்கிறது. கடந்த கால கறைகள் காரணமாக அந்த கொலை பழி லெனின் மீது விழுகிறது. எதிர்காலம் கெட்டுப் போகக் கூடாது என்பதால், தனது காதலியின் உதவியுடன் உண்மையை மறைத்து தப்பிக்கவும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கவும் அவர் போராடுகிறார். போலீஸ் விசாரணை, அரசியல்வாதியின் அழுத்தம், கடந்த காலத்தின் சுமை ஆகியவை ஒன்றாக சேர்ந்து கதையை பரபரப்பாக நகர்த்துகின்றன.
ஒரு சாதாரண கல்லூரி தேர்தலாக தொடங்கும் படம், கொலைக்கு பிறகு முழுக்க ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மாறுவது இதன் பெரிய பலம். பொன் பார்த்திபன் எழுதிய கதை மற்றும் திரைக்கதை, குறிப்பாக இரண்டாம் பாதியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. சில தர்க்க பிழைகள் இருந்தாலும், தொடர்ந்து வரும் திருப்பங்கள் சுவாரஸ்யத்தை குறைய விடவில்லை. குறைந்த பட்ஜெட்டில் கிடைத்த அளவுக்கு காட்சிகளை இயக்குநர் கே.ஆர் வினோத் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.
லெனினாக நடித்திருக்கும் லெனின், புதுமுக நடிகர் என்ற உணர்வே வராத அளவுக்கு கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் சுமக்கிறார். கல்லூரி காலத்து முரட்டுத்தனமும், இப்போது வந்துள்ள மன உளைச்சலும் அவரின் நடிப்பில் தெளிவாக தெரிகிறது. நாயகியாக வரும் அஸ்மின், கதைக்கு தேவையான முக்கியத்துவத்துடன் பயணித்து இறுதி வரை மனதில் இடம் பிடிக்கிறார். உட்கார்ந்த இடத்தில் இருந்தே கொங்கு தமிழில் வில்லத்தனம் செய்யும் ஆர்.வி உதயகுமார், பெரிய ஆட்டம் இல்லாமலேயே அசத்துகிறார். குறிப்பாக மகனை கண்டிக்கும் இடங்களிலும் அரசியல் பின்புலத்தை விளக்கும் காட்சிகளிலும் அவர் நடிப்பு பாராட்ட வைக்கிறது. அனுமோகன், முனீஷ்காந்த் போன்றவர்கள் குறைந்த காட்சிகளில் வந்தாலும் படத்திற்கு அடையாளமாக இருக்கிறார்கள்.
சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவு ஒரே லொக்கேஷனில் நடக்கும் கதையையும் சலிப்பில்லாமல் காட்டுகிறது. லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் படத்திற்கு வேகம் சேர்க்க, கைலாஷ் மேனனின் பின்னணி இசை இரண்டாம் பாதியின் பதற்றத்தை அதிகரிக்கிறது. மொத்தத்தில், புதுமுகங்களை வைத்து, கல்லூரி வாழ்க்கை, அரசியல், காதல், குற்றம் ஆகியவற்றை கலந்து, கடைசி வரை விறுவிறுப்பாக சொல்லப்பட்ட ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் திரில்லர் தான் ரெட் லேபிள். பெரிய ஹீரோ படம் இல்லை என்றாலும், நல்ல கதை சொல்லலை விரும்புவோருக்கு இந்த படம் ஒரு திருப்தியான அனுபவமாக இருக்கும்.

























