full screen background image
Search
Saturday 7 February 2026
  • :
  • :
Latest Update

‘திரெளபதி 2’ திரைப்பட விமர்சனம்

‘திரெளபதி 2’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Richard Rishi, Rakshana Indichoodan, Natty Natraj, Vela Ramamoorthy, Chirag Jani, Dinesh Lamba, Ganesh Gurang, Y.G. Mahendran, Bharani, Deviyyani Sharma, Divi, Saravana Subbiah, Arunodhayan Lakshmanan

Directed By : Mohan G.

Music By : Ghibran

Produced By : Nethaji Productions – Sola Shakkaravarthi

ரிச்சர்ட் ரிஷி ஒரு சாதாரண மனிதராக வருகிறார். ஊருக்குச் சொந்தமான நிலம், கோவில் தொடர்பான பிரச்சனை, வக்பு வாரியக் கோரிக்கை என சில சிக்கல்கள் உருவாகின்றன. அதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து வரும் இரண்டு பெண்கள், கோவிலை மையமாக வைத்து பேச ஆரம்பிக்க, அதில் ஒரு பெண்ணுக்கு சன்னதம் வந்தது போல கடந்த ஜென்மக் கதை வெளிப்படுகிறது. அங்கிருந்து கதை 14-ஆம் நூற்றாண்டுக்கு போகிறது.

அந்த காலத்தில் திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்த வீர வல்லாள மகாராஜா, அவருக்கு விசுவாசமான வீரசிம்ம காடவராயர் ஆகியோரின் கதை விரிகிறது. துக்ளக், கில்ஜி, மதுரை சுல்தான் போன்ற ஆட்சியாளர்கள் மக்கள்மீது நடத்திய கொடுமைகள், ஜிசியா வரி, மதமாற்ற அழுத்தங்கள் என நிறைய விஷயங்கள் காட்டப்படுகின்றன. நாட்டையும் மக்களையும் காப்பாற்ற காடவராயர் எடுக்கும் முடிவுகள், அதனால் அவர் குடும்பத்தில் உருவாகும் பிரச்சனைகள், குறிப்பாக மனைவி திரௌபதியின் சந்தேகம் – பிரிவு ஆகியவை கதையின் முக்கியமான பாகம்.

ரிச்சர்ட் ரிஷி இரண்டு காலகட்டத்திலும் நடித்திருப்பது தெரியும் அளவுக்கு உழைப்பு இருக்கிறது. வீரசிம்ம காடவராயராக அவரது சண்டை காட்சிகள், விசுவாசம், தியாகம் எல்லாம் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. இன்னும் கொஞ்சம் நுணுக்கமான முகபாவனைகள் இருந்திருந்தால் இன்னும் வலுவாக இருந்திருக்கும்.

திரௌபதி தேவியாக நடித்த ரக்ஷனா இந்துசூடன் படம் முழுக்க கவனம் ஈர்க்கிறார். வீரமும், புத்திசாலித்தனமும், தியாகமும் கலந்த ஒரு வலுவான பெண் கதாபாத்திரமாக அவர் பதிகிறார். சில காட்சிகளில் அவர் தான் படத்தின் பெரிய பலம்.

வீர வல்லாளராக நட்டி நடித்திருப்பது கலவையான அனுபவம். கம்பீரம் இருக்கிறது, ஆனாலும் மேக்கப் மற்றும் தோற்றம் எல்லா இடங்களிலும் ஒத்துப்போகவில்லை. துக்ளக் ஆக வரும் சிராக் ஜானி, மற்ற சுல்தான்கள் எல்லாம் கொடூரமாக காட்ட முயற்சி செய்தாலும், சில இடங்களில் அது பயமூட்டுவதற்குப் பதிலாக நெருடலாக மாறுகிறது.

பிலிப் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு, ஜிப்ரானின் இசை, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு எல்லாம் படம் குறைந்த பட்ஜெட் என்பதை மறக்க வைக்கும் அளவுக்கு நல்ல தரத்தில் இருக்கிறது. குறிப்பாக அரண்மனை, கோயில், போர் காட்சிகள் கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

ஆனா படத்தின் பெரிய பலவீனமே திரைக்கதை. முதல் பாதி மெதுவாக நகர்கிறது, அதிக தகவல்கள், நீளமான வசனங்கள் சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறது. சில காட்சிகள் கருத்து சொல்ல முயற்சிக்கும்போது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப அழுத்துவது போல தெரிகிறது. அதோடு சில வன்முறை, கொடூர காட்சிகள் எல்லோருக்கும் எளிதாகப் பார்க்கக் கூடியதாக இல்லை.

மொத்தத்தில், ‘திரௌபதி 2’ 700 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறும் ஒன்றோட ஒன்று பின்னிப் போகும் ஒரு வரலாற்று – அரசியல் – உணர்ச்சி படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *