full screen background image
Search
Wednesday 19 November 2025
  • :
  • :

‘இறுதி முயற்சி’ திரைப்பட விமர்சனம்

‘இறுதி முயற்சி’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Ranjith, Mehali Meenakshi, Vittal Rao, Kathiravan, Puthupettai Suresh, Mounika, Neelesh

Directed By : Venkat Janaa

Music By : Sunil Lazer

Produced By : Varam Cinemas – Venkatesan Palanichamy

வெங்கட் ஜனா இயக்கிய ‘இறுதி முயற்சி’ படம், கடனில் சிக்கி நிம்மதி இழந்த ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை நிஜத்தன்மையோடு சொல்லும் சமூகத் திரைப்படம்.

ரஞ்சித் நடித்திருக்கும் நாயகன், கடனாக வாங்கிய தொகையை விட பல மடங்கு வட்டி கட்டியும், விடுபட முடியாமல் தவிக்கிறார். கந்துவட்டி மாஃபியா கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதோடு, குடும்பத்தையே வீட்டுக்காவலில் வைத்து பலவிதமான தொல்லைகள் கொடுக்கிறது. இதையெல்லாம் சமாளிக்க ரஞ்சித் முயற்சி செய்தாலும், எந்த வழியும் கைகொடுக்கவில்லை.

அதே நேரத்தில், சென்னையில் தொடர்ச்சியாக கொலைகள் செய்து போலீசிலிருந்து தப்பும் ஒரு சைக்கோ கொலையாளி, ரஞ்சித்தின் வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து மறைவது கதைக்கு பெரிய திருப்பமாக மாறுகிறது. அதன் பிறகு ரஞ்சித் எடுக்கும் “இறுதி முயற்சி” தான் படத்தின் முக்கிய புள்ளி. அது அவரது வாழ்க்கையை காப்பாற்றுகிறதா அல்லது மேலும் சிக்கலாக்குகிறதா என்பதையே படம் சொல்லுகிறது.


ரஞ்சித், கடன் சுமையால் தத்தளிக்கும் குடும்பத் தலைவனாக உணர்வோடு நடித்திருக்கிறார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய அவசரத்திலும், பணம் இல்லாமையின் வேதனையிலும் அவரது முகத்தில் தெரியும் அந்த நிஜ உணர்வு, பார்வையாளர்களை அவருடன் சேர்த்துப் பயணிக்க வைக்கிறது.

மெஹாலி மீனாட்சி, கணவனின் நிலையை புரிந்து அமைதியாகச் செயல்படும் மனைவியாக இயல்பாக நடித்திருக்கிறார். பேசும் விதம், உடல் மொழி, முகபாவனைகள் – அனைத்தும் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறது. விட்டல் ராவ், கந்துவட்டி தாதாவாக கொடூரமான முகத்துடன் நம்பகமாக நடித்துள்ளார். புதுபேட்டை சுரேஷ், கதிரவன், சிறுமி மெளனிகா, சிறுவன் நீலேஷ் உள்ளிட்டவர்கள் தங்களுக்கான வேடங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சுனில் லாசரின் இசை கதையின் உணர்வுகளோடு நன்கு கலந்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை சோகக் காட்சிகளில் உணர்ச்சியை ஆழப்படுத்துகிறது. சூர்யகாந்தியின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் உணர்ச்சியோடு ஒவ்வொரு காட்சியையும் நம்பகமாக காட்டுகிறது. வடிவேல் விமல்ராஜின் எடிட்டிங் கதை ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது; சில இடங்களில் கிளைக்கதைகளை இணைத்த விதம் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

இயக்குநர் வெங்கட் ஜனா, இப்போது நடக்கும் கந்துவட்டி கொடுமைகளின் நிஜ நிலையை நேரடியாகக் காட்டியிருக்கிறார். ஒரே வீட்டுக்குள் கதையை நகர்த்தியும், அதற்குள் இருக்கும் மன அழுத்தம், பயம், நம்பிக்கை ஆகிய உணர்ச்சிகளை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மனைவி எதிர்கொள்ளும் துயரமும், அதைக் கண்டு எதுவும் செய்ய முடியாமல் நிற்கும் கணவனின் நிலையும் பார்வையாளரை கலங்க வைக்கிறது.

சில காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், சொல்ல வேண்டிய கருத்து வலிமையாகத் தாக்குகிறது. கந்துவட்டி மாஃபியாவால் நசிக்கப்படும் மக்கள், அதற்கு எதிராக எழும் மனித மனம் — இதை இரண்டையும் சேர்த்து இயக்குநர் நியாயமான முடிவுக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

மொத்தத்தில்,இந்த ‘இறுதி முயற்சி’ நிஜத்தையும் உணர்ச்சியையும் சேர்த்த சமூகப் படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *