‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்பட விமர்சனம்
Casting : Nani, Srinidhi Shetty, Surya Srinivas, Athil Bala, Samuthirakani, Rao Ramesh, Komalee Prasad, Ravindra Vijay, Prathik Babar
Directed By : Sailesh Kolanu
Music By : Mickey J. Meyer
Produced By : Wall Poster Cinema & Unanimous Productions – பிரசாந்தி தி ்பிரிபநனி – நானி
விசாகப்பட்டினத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரியும் நானி ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் விசாரணை கைதியாக இருக்கிறார். சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியிடம் தான் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்கிறார்.
இந்த ப்ளாஷ்பேக்கில், காஷ்மீரில் நடந்த ஒரு கொலை வழக்கை நானி விசாரிக்க தொடங்கும் போது, அங்கு நடந்த கொலையை போல் வெவ்வேறு இடங்களில் கொலைகள் நடக்கின்றன. இந்த கொலைகள் எதற்காக நடக்கிறது, அதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க தனது புலன் விசாரணையை தொடங்குகிறார். இதற்காக பீகார், குஜராத், அருணாச்சலப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களுக்கு சென்று விசாரணையை மேற்கொள்கிறார்.
அப்போது அதிர்ச்சியான ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார். மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படும் அவர்களை நானி எப்படி கண்டுபிடித்தார்? அவர்கள் யார்? எதற்காக இந்த கொலைகளை செய்கின்றனர்? எதற்காக நானி கொலை வழக்கில் சிறை சென்றார்? என்பதே படத்தின் மீதி கதை.
ஹிட் படத்தின் முதல் இரண்டு பாகங்களை பெரிய ஸ்டார்களை வைத்து எடுக்காமல் இன்வெஸ்டிகேட்டிவ் கிரைம் திரில்லர்களாகத் தான் இயக்குனர் சைலேஷ் கோலானு எடுத்திருந்தார். ஆனால் இதில் நானி என்ற நட்சத்திரம் உள்ளே வரும் போது அந்த கதைக்கு ஹீரோயிசமும் ஆக்ஷனும் அதிக அளவில் தேவைப்பட்டுள்ளது என்பதை படம் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.
படத்தில் பெரும்பகுதி ரத்தக் களறியாக காணப்படுகிறது. ஹிட் 3-ம் பாகத்தை முழுக்க முழுக்க நானியை மனதில் வைத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். அதோடு அடுத்த பாகத்திற்கான லீட் கொடுத்து அதில் தமிழில் முன்னணி நடிகர் ஒருவரை காட்டி இருப்பது ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்.
காக்கி சட்டை போடாத காவல்துறை அதிகாரியாக நானி மிடுக்காக நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவரைத் தவிர வேறு யாரும் மனதில் பதியவில்லை, அந்த அளவுக்கு அத்தனை பேருக்கு நடுவில் சோலோ பர்பாமன்ஸ் செய்து ஸ்கோர் செய்கிறார்.
கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ரெட்டி, நானியின் லவ்வராகவும், போலீசாகவும் வருகிறார். இரண்டாம் பாதியில் அவருக்கு பர்பார்மன்ஸ் செய்ய வாய்ப்பு கொடுத்துள்ளார் இயக்குனர். வில்லனாக நடித்துள்ள பிரதீக் பாபர் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். இவர்களோடு சூர்யா ஸ்ரீநிவாஸ், அடில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி, கோமலி பிரசாத் ஆகியோரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.
பின்னணி இசையில் மிக்கி ஜே.மேயர் கலக்கி இருக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவில் காஷ்மீர், பீகார் குஜராத் மாநிலங்கள் அழகாக திரையில் தெரிகின்றன. அதோடு ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார்.
பிளஸ் & மைனஸ்
முதல் இரண்டு பாகங்களை விட இந்த மூன்றாம் பாகத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். அதோடு நானி போன்ற மாஸ் ஹீரோவை நடிக்க வைக்கும் போது அதில் ஏற்படும் சிரமங்களை முன்கூட்டியே உணர்ந்து திரைக்கதையை அமைத்திருக்கிறார். அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நானியும், அர்ஜுன் சர்க்கார் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படம் நீளமாக இருந்தாலும் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் படத்தை நகர்த்தி இருப்பது பெரிய பிளஸ்.
இருப்பினும் படத்தின் பெரும்பகுதி ரத்தக்காடாக காட்சியளிக்கிறது. அதோடு ஒரு போலீஸ் அதிகாரிக்கு இவ்வளவு வன்முறை தேவையா என கேட்கும் அளவுக்கு வில்லன்களை வெட்டி சாய்கிறார் நானி. காவல்துறையில் ஒருவர் இப்படி எல்லாம் செய்ய முடியுமா என்று சொல்லும் அளவுக்கு சினிமா தனத்தை மீறிய லாஜிக் சொதப்பல்கள் உள்ளன. வன்முறையை கொஞ்சம் குறைத்து விறுவிறுப்பை இன்னும் கூட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கிளைமாக்ஸில் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் உண்டு.
மொத்தத்தில், ‘ஹிட் – த தேர்ட் கேஸ்’ நிச்சயம் ஹிட்டாகும்.


















