90 காலகட்டத்தில் பல மெகா ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் நடித்த ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி போன்ற படங்கள் இன்றைய ரசிகர்களுக்கும் பிடித்துப்போன எவர் கிரீன் திரைப்படங்களாக உள்ளது. அவர் நடிப்பில் வெளியாகி உள்ள அந்தகன் படத்தின் மூன்றாம் நாள் வசூலை பார்க்கலாம். நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அறிமுகத்தோடு சினிமாவில் என்ட்ரி ஆனாலும் பிரசாந்த், தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி பிரசாந்தின் தந்தை தான் தியாகராஜன் என்று சொல்லும் அளவு உச்சம் தொட்டார்.
ஆரம்பத்திலேயே பாலு மகேந்திரா, மணிரத்னம் என டாப் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்த பிரசாந்த் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுத்தார். விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் தங்களுக்கான இடத்தை பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்த போது, அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து டாப் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வந்தார். பிரசாந்தை பற்றி இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தற்போது அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் அந்தகன் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து இருக்கிறார். ஐந்து தேசிய விருதை வென்ற இந்தி படத்தின் ரீமேக்கான இப்படத்தில் பியோனோ கலைஞராக, ஆகாஷ் என்ற ரோலில், பார்வையற்றவராக நடித்துள்ளார். அந்த படத்தின் கதை இயல்பாகவே ஸ்ட்ராங்கானது என்பதால், திரைக்கதையில் மட்டும் நல்ல கவனம் செலுத்தி படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் தியாகராஜன். இந்த படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி என பலர் நடித்துள்ளனர். அடுத்தடுத்து திரும்பங்கள் நிறைந்த இந்த படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். ! இரண்டு மடங்கு அதிகரிப்பு: பிரசாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களின் வாழ்நாள் வசூலை விடவும் அந்தகன் படம் முதல் நாளில் அதிகமாக வசூல் செய்திருப்பதாக சொல்லப்பட்டது. முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை. இதைத்தொடர்ந்து இரண்டாம் நாளான சனிக்கிழமை 1.19 கோடியாக இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று விடுமுறை தினம் என்பதால், படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்து மூன்றாம் நாள் வசூல் 1.15 கோடியாக உள்ளது. மொத்தத்தில் அந்தகன் படம் முதல் மூன்று நாட்களில், 2.99 கோடியாக உள்ளது. இதனால் டாப் ஸ்டார் பிரசாந்த் சொன்னபடியே கம்பேக் கொடுத்திருக்கிறார் என எல்லோரும் பாராட்டி வருகின்றனர். படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.