‘பிளாக் கோல்டு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !!
உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ – நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யாருக்கும் தெரியாத பெரிய நிழல் வணிகம், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், கதைக்களம், நட்சத்திரங்களின் பங்களிப்பு மற்றும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்…,
தயாரிப்பாளர் எம். மூர்த்தி பேசியதாவது,
“நான் முதலில் நடிகராக வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்தேன். இன்று தயாரிப்பாளராக உங்கள் முன்னால் நிற்கிறேன். இயக்குநர் தீரன் அருண்குமார் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, மிகவும் புதுமையான கதைக்களமாக இருந்தது. வேறு சில தயாரிப்பாளர்களிடமும் கதையைச் சொல்லியிருந்தாலும், அதிக காலம் எடுத்துக்கொண்டதால், இந்தப் படத்தைத் நானே தயாரிக்க சம்மதித்தேன். இந்தப் படம் உருவாக எனது முழு ஆதரவையும் கொடுத்தேன்.
இதுபோன்ற புதுமையான கதையைப் படமாக்கும்போது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் எனது மனைவி, மகளிடம் கதையைப் பற்றிக் கூறியபோது, இது வித்தியாசமான முயற்சி என்றும், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பேசும் கதை என்றும் ஊக்கமளித்தார்கள். இந்தப் படத்தை உருவாக்குவதில் கதாநாயகன் வெற்றியின் பங்களிப்பு மிக முக்கியமானது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இரவு, பகல் பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.
நான் இதுவரை ஆயிரக்கணக்கான படங்களை பார்த்திருப்பேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன், ‘பிளாக் கோல்டு’ இந்திய சினிமாவில் ஒரு புதுமையான படமாக இருக்கும். படத்தின் மேக்கிங்கும் மிக சிறப்பாக வந்துள்ளது. ஒரு படத்தைச் சிறிய படம், பெரிய படம் என்று பார்ப்பதைவிட நல்ல படமா என்பதுதான் முக்கியம். இயக்குநர் ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்தில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் நண்பர்கள் அனைவரும் இப்படத்திற்குத் தங்களது ஆதரவை வழங்க வேண்டும். இந்தப் படத்தைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசியதாவது,
“‘பிளாக் கோல்டு’ படக்குழு சார்பாக ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் வெற்றியுடன் இது எனக்கு இரண்டாவது படம். அவர் இந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். ‘பிளாக் கோல்ட்’ படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும். நடிகை அபிராமியின் நடிப்புக்கு நான் ஏற்கெனவே ரசிகன். இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் துணிச்சலான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் ஏ. வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்டவர்களின் கதாபாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் பார்த்துப் பழகிய ஜப்பான் குமாரை இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட தீவிரமான கதாபாத்திரத்தில் பார்க்கலாம். நடிகர்கள் அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு அவர்களைப் பார்க்கும் இயக்குநர்களின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்.
பாடலாசிரியர் மோகன் ராஜாவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். ‘வெங்காட்டு பூமி’ பாடலுக்காக அவர் எழுதிய வரிகளில் எந்தத் திருத்தமும் செய்யத் தேவையில்லை. அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாடகர்கள் சைந்தவி, சத்யா கபூர், சத்யா பிரகாஷ், சஞ்சனா கல்மஞ்சி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, சைந்தவி இந்தப் படத்தில் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு உயர்ந்த ஸ்வரத்தில் பாடியிருப்பது சிறப்பு.
தயாரிப்பாளர் மூர்த்தி சாரின் ஆதரவு இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. நல்ல கதையை தேர்வு செய்திருக்கிறார். இயக்குநர் தீரன் அருண்குமார் என்னுடைய ‘ஸ்மைல் மேன்’ படத்தைப் பார்த்துவிட்டு என்னைத் தொடர்புகொண்டு இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்தார். பெரிய இசையமைப்பாளர்களைப் பரிந்துரைத்தபோதும், கதைக்கும் களத்திற்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று நம்பி தேர்வு செய்தார். அதற்காக அவருக்கு நன்றி. தொடர்ந்து வெற்றி உள்ளிட்ட படக்குழுவினருடன் பல படங்களில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.” நன்றி.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமி பேசியதாவது,
“‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனக்கு முதல் படம். இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமார் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். விரைவில் இதே இடத்தில் நடைபெறும் படத்தின் வெற்றிச் சந்திப்பில் மீண்டும் அனைவரையும் சந்திக்கிறேன். நன்றி, வணக்கம்.”
எடிட்டர் தினேஷ்குமார் பேசியதாவது,
“ஒரு கதையைத் தொடங்குவதில் இருந்து படம் வெளியாகி முடிவடையும் வரை நிறைய பேருடைய உழைப்பு இருக்கும். அந்த வகையில் ‘பிளாக் கோல்டு’ படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமார் அவர்களுக்கு நன்றி. எடிட்டிங்கில் எனக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்திருந்தார். முதலில் என்னுடைய பாணியில் ஒரு காட்சியை எடிட் செய்து கொடுத்த பிறகு, அதில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என்பதை மட்டுமே ஆலோசிப்போம். இதே சுதந்திரத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளருக்கும் அவர் வழங்கியிருந்தார்.
இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் உதவி இயக்குநர்கள் என அனைவருக்குள்ளும் நல்ல புரிதலும் ஒருங்கிணைப்பும் இருந்தது. ஒரு நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும், இன்னும் எப்படிச் சிறப்பாக உருவாக்கலாம் என்பதில்தான் எங்களுடைய கவனம் இருந்தது. தயாரிப்பாளர் மூர்த்தி சாரும் எங்களுக்கு முழுமையான ஆதரவு அளித்தார். பட்ஜெட் அல்லது வேறு கட்டுப்பாடுகள் குறித்து அதிகம் பேசாமல், படம் நன்றாக வருமா, நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா என்று மட்டுமே கேட்பார். அந்த ஆதரவு படத்தின் தரத்தை மேம்படுத்த உதவியது.
இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பையும் படக்குழுவினரிடம் என்னை அறிமுகப்படுத்தியதற்காகவும் துரை ப்ரோவுக்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஒரு நல்ல படம் அதிகமான ரசிகர்களைச் சென்றடைவதில் ஊடகங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. நீங்கள் அளிக்கும் ஆதரவும் பகிர்வும்தான் நல்ல படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.
‘பிளாக் கோல்டு’ படத்தின் கதையிலோ, காட்சிகளிலோ எந்தவிதமான விஷயத்தையும் நாங்கள் முன்கூட்டியே வெளிப்படுத்தவில்லை. ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து அந்த ஆச்சரியத்தை அனுபவிக்க வேண்டும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியுடன் வருவீர்கள் என்று நம்புகிறேன். இப்படம் மேலும் மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன். நன்றி.”
பாடகர் ராம் பேசியதாவது,
“இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 16 ஆண்டுகளாக என்டர்டெயின்மென்ட் துறையில் இயங்கி வருகிறேன். இசைப் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறேன். அதில் சுமார் 20 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதேபோல், இன்டிபென்டன்ட் மியூசிக் துறையிலும் கடந்த 16 ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன்.
இயக்குநர் தீரன் அருண்குமார் எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளாகப் பழக்கம். எடிசன் விருது விழாவில் நான் இசை நிகழ்ச்சி நடத்தியபோது அவரைச் சந்தித்தேன். அன்றிலிருந்து எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வருகிறது. என்னுடைய இசைப் பயணம் மற்றும் முயற்சிகளை அவர் தொடர்ந்து கவனித்து வந்தார்.
என்னுடைய 16 ஆண்டுகால கனவை நனவாக்கும் வகையில் ‘பிளாக் கோல்டு’ திரைப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமார் மற்றும் தயாரிப்பாளர் மூர்த்தி ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் நன்றி, வணக்கம்.”
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசியதாவது,
“இயக்குநர் தீரன் அருண்குமார் இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘பிளாக் கோல்டு’ என்ற தலைப்பைக் கேட்டதும் மிளகு அல்லது நிலக்கரி என்று நினைக்கலாம். ஆனால் அதைத்தாண்டி தலைமுடியை மையமாகக் கொண்ட வித்தியாசமான கதைக்களம் இதில் இருக்கிறது. தலைமுடியைச் சுற்றியுள்ள வணிகம், அரசியல் எனப் பல விஷயங்களைப் படத்தில் பேசியிருக்கிறார்கள். சாதாரணமாக நாம் ஒரு விஷயமாகக் கடந்து செல்லும் தலைமுடிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய அறிவியல் மற்றும் வணிகப் பின்னணி இருப்பது ஆச்சரியமாக இருந்தது. அதைப் பற்றி மேலும் படிக்கவும் ஆராயவும் இந்தப் படம் தூண்டியது.
இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அவர் இசையமைத்த மெட்டுக்கு ஏற்ப வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பொருத்தி எழுத வேண்டியிருந்தது. குறிப்பாக, ‘தினம் தினம் நீ பார்க்கும் வரம் வாங்குவேன், மனதினில் அதை கோர்த்து உனைத் தாங்குவேன்’ என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதேபோல், ‘வெங்காட்டு பூமியிலே’ பாடலும் ஒரு கதையைச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.
அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘வெங்காட்டு பூமியிலே புழுதிக் காற்று வீசுது, வெஞ்சோகம் நெஞ்சிலே பெருகிப் பாயுதே’, ‘மண்ணாளும் போகும் ஈரம் எழுதில் காய்வதில்லை, நெஞ்சோடு வாழும் நேசம் வலியில் வீழ்வதில்லை’ போன்ற வரிகளை எழுதியது மனநிறைவாக இருந்தது. மேலும், ‘பொல்லாத ஊருக்குள்ள சந்தேகம் குறையவில்லை, சொல்லாத விடுகதையில் விடை தெரியல ஏனோ’ என்ற வரிகளும் படத்தின் மர்மமான கதைக்களத்துடன் பொருந்தும்.
தலைமுடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் பல திருப்பங்களையும் கொடுக்கும். நடிகர் வெற்றிக்கு இப்படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும். இயக்குநர் தீரன் அருண்குமார், இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. நன்றி.”
ஜே.ஆர். ரமேஷ் பேசியதாவது,
“ஊடக நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் தீரன் அருண்குமார் எனக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பழக்கம். அவ்வப்போது சந்தித்து அடுத்ததாக என்ன படம் செய்யப் போகிறீர்கள் என்று பேசிக்கொள்வோம்.
என்னுடைய அடிப்படைத் தொழில் தினமலர் விநியோகஸ்தராக இருப்பதுதான். திரைப்பட விநியோகம் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். தீரன் படம் எடுக்கப் போகிறேன் என்று கூறியபோது, என்ன படம் எடுக்கப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன்.
அவருடைய அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், இந்தப் படத்தின் விநியோகப் பணிகளிலும் என்னால் ஈடுபட முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘பிளாக் கோல்டு’ படத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
விநியோகஸ்தர் ஆதவா பேசியதாவது,
“இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘பிளாக் கோல்டு’ படத்தின் விநியோக உரிமையை எங்களுக்கு வழங்கிய தயாரிப்பாளர் மூர்த்தி சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர் இயக்குநர் தீரன் அருண்குமார் ஏற்கெனவே வெற்றியைச் சந்தித்துள்ளார். இந்தப் படமும் வெற்றிபெற ஊடக நண்பர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ படத்தில் இடம்பெறும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. நம்முடைய முன்னோர்கள் காற்றையும் கடலையும் நம்பி வாழ்ந்தவர்கள் என்பதால், அவை ஒருபோதும் நம்மைக் கைவிடாது என்ற கருத்து அதில் இடம்பெற்றிருக்கும். அதேபோல், தீரன் அருண்குமார் சினிமாவைத் தனது மூச்சாகச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார். எனவே, இந்தத் திரையுலகமும் ஊடகங்களும் அவரைக் கைவிடாது என்று நம்புகிறேன். அவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை வழங்க என்னுடைய வாழ்த்துகள்.
மேலும், தயாரிப்பாளர் மூர்த்தி சாரைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ‘ஜெயிலர் 2’ படத்தில் மூர்த்தி என்ற பெயர் பேசப்பட்டது. ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை அனைத்தும் எங்களுடைய மூர்த்தி அண்ணன்தான். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுகிறோம். ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் வெற்றிபெற அனைவரும் ஆதரவு தர வேண்டும். நன்றி.”
இப்ராஹிம் பேசியதாவது,
“இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சென்னைக்கு ஒரு வியாபார விஷயமாக வந்திருந்தபோது, ரமேஷ் சார் என்னைச் சந்தித்து, இயக்குநர் தீரன் அருண்குமார் தனது நண்பர் என்றும், அவர் ஒரு நல்ல படம் இயக்கியிருப்பதாகவும் கூறி பார்க்க அழைத்தார். அப்போது நேரமில்லாததால் என்னால் பார்க்க முடியவில்லை. பின்னர் இயக்குநர் தனது முதல் படமான ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். சத்யராஜ் நடித்த அந்தப் படத்தைப் பார்த்தபோது, ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படியாக இருந்தது.
எனக்கு இப்போது 60 வயதாகிறது. என்னுடைய 21 வயதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஊரை விட்டு சென்னைக்கு வந்தேன். ஆனால் சினிமாவில் நுழைய முடியாமல் பல கஷ்டங்களைச் சந்தித்தேன். கையில் இரண்டு ரூபாய் கூட இல்லாமல், பேருந்தில் பயணம் செய்யக்கூட முடியாத சூழ்நிலையிலும் இருந்திருக்கிறேன். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கே திரும்பிச் சென்றேன். இருந்தாலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை.
இப்போது மீண்டும் சினிமாவுக்குள் வந்திருக்கிறேன். எனக்கான தகுதியையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்டு, இயக்குநர் தீரன் அருண்குமாருடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். ‘பிளாக் கோல்டு’ படத்தின் விநியோக உரிமையையும் பெற்றிருக்கிறேன். நிச்சயமாக நானும் திரைப்படங்களைத் தயாரிப்பேன்.
சினிமா என்னை வாழவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
என்னைப் போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பல கஷ்டங்களால் ஊருக்குத் திரும்பியவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதை வாழ வைக்கும் சக்தி பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களின் கைகளில்தான் இருக்கிறது. என்னைப் போன்றவர்களின் முயற்சிகளுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி, வணக்கம்.”
ஜனீஷ் பேசியதாவது,
“தயாரிப்பாளர் மூர்த்தி சார் மிகவும் நேர்மையானவர், வெளிப்படையாகப் பேசக்கூடியவர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியில் இருந்தபோதுதான் அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஆனால் படத்தின் வெளியீடு வரை எங்களுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் தொடர்ந்து ஆதரவளித்தார். இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்கள். பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களுடைய ஆரம்பகட்டப் பயணத்தில் இருந்தாலும், அனைவரும் தங்களால் முடிந்த சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த மெனக்கெடல் எடுத்திருப்பது படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இந்தப் படம் இயக்குநருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பெற்றுத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஏ. வெங்கடேஷ், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட அனுபவமிக்க கலைஞர்களிலிருந்து வெற்றி வரை அனைவரும் தங்களுடைய நேரத்தை ஒதுக்கி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்குச் சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு கருத்தைச் சொல்வதைத் தாண்டி, முழுமையான பொழுதுபோக்குப் படமாகவும் நிச்சயம் இருக்கும்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாக் கோல்டு’ படத்திற்கு திரையரங்குகள் மட்டுமின்றி மற்ற வணிகப் பிரிவுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு ஊடக நண்பர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் ஜப்பான் குமார் பேசியதாவது,
“இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் தீரன் அருண்குமார் என்னை அழைத்துப் பேசினார். நான் இதுவரை சிறிய காமெடி கதாபாத்திரங்களில்தான் நடித்து வருகிறேன் என்று கூறினேன். ஆனால், இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார். அவருடைய நம்பிக்கைக்காகவே இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தேன்.
இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்பதைவிட, படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. இதுபோன்ற தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஊடக நண்பர்களும் ரசிகர்களும்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இப்போதெல்லாம் சிறிய படங்கள் நன்றாக இருந்தாலும், திரையரங்குகளில் அவற்றைப் பார்க்க ரசிகர்கள் வருவது குறைவாக இருக்கிறது. சில நேரங்களில் நல்ல படங்களாக இருந்தாலும் விரைவிலேயே திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டு விடுகின்றன. எனவே, ‘பிளாக் கோல்டு’ படத்திற்கு அனைவரும் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் கராத்தே வெங்கடேஷ் பேசியதாவது,
“இந்தப் படக்குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த கலைஞர்கள், இளம் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் தீரன் அருண்குமார் என்னிடம் முதலில் கதையைச் சொன்னபோதே, எனக்கு ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்திருந்தார். குறிப்பாக, உயிரைப் பறிக்கும் கதாபாத்திரமாக இருந்தால்தான் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று கூறினார்.
‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. இயக்குநர் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்திலும் இரண்டு, மூன்று உயிர்களை எடுத்திருக்கிறோம். அதை ரசிகர்கள் திரையில் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். அனைவரும் ‘பிளாக் கோல்டு’ படத்திற்கு ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். நன்றி.”
நடிகர் டெலிபோன் ராஜ் பேசியதாவது,
“எல்லாப் படங்களுக்கும் படப்பிடிப்புக்குச் செல்வதைப் போலத்தான் இந்தப் படத்திற்கும் சென்றேன். ஆனால், இதில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சற்று வித்தியாசமானது. ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் ஒரு முக்கியமான விஷயம் இருந்தது. இயக்குநர் தீரன் அருண்குமார் மிகவும் பொறுமையாக, ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதைப் போல எனக்குக் காட்சிகளை விளக்கிக் கொடுத்தது மிகவும் பிடித்திருந்தது.
படப்பிடிப்பிலும் டப்பிங் பணியின்போதும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒவ்வொரு நடிகரையும் அந்தந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகத் தேர்வு செய்திருக்கிறார்கள். சில கதாபாத்திரங்களின் தோற்றத்தைப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது. அந்த அளவுக்கு ஒவ்வொருவருடைய தோற்றமும் கதாபாத்திரங்களும் வித்தியாசமாக அமைந்துள்ளன.
நடிகர் வெற்றியைப் பார்க்கும்போது மிகவும் மென்மையான, சாக்லேட் பாய் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். அவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன. அந்த வரிசையில் ‘பிளாக் கோல்டு’ படமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் மூர்த்தி மிகவும் நல்ல மனிதர். எனக்கும் நல்ல முறையில் சம்பளம் வழங்கினார். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஊடக நண்பர்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
நடிகை சபீதா ராய் பேசியதாவது,
“இங்கு வந்திருக்கும் திரைப்பட உறவுகளுக்கும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக சினிமாவை நேசித்து, அதில் ஒரு நல்ல வாய்ப்புக்காகப் போராடி வருகிறேன். அந்த வகையில் ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் எனக்கு ஒரு முக்கியமான மேடையாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்திற்குப் பிறகு மல்லி என்ற கதாபாத்திரத்தின் மூலம் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பளித்த இயக்குநர் தீரன் அருண்குமாருக்கு எனது மனமார்ந்த நன்றி.
இயக்குநர் தீரன் அருண்குமார் ஒரு சிறந்த கேப்டன். எவ்வளவு பரபரப்பான சூழ்நிலையாக இருந்தாலும் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்படுவார். படப்பிடிப்புத் தளத்தில் அனைவரையும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார். அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமியின் பணி மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் அவர் முக்கியமான ஒளிப்பதிவாளராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நடிகர் வெற்றி படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் இருப்பார். ஆனால் கேமரா முன்பு நடிக்கும்போது அவருடைய நடிப்பும் ஹீரோயிசமும் வியக்க வைக்கும். நடிகர் ஏ. வெங்கடேஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அதேபோல், என்னுடைய கதாபாத்திரத்துடன் தொடர்புடைய நைனா கதாபாத்திரத்தில் நடித்த அருள் சங்கருடனும் நல்ல நட்பு உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் மூர்த்தி போன்ற ஆதரவான தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைப்பது உண்மையிலேயே ஒரு வரம். இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ், பாடலாசிரியர் மோகன் ராஜா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
சிறிய படம், பெரிய படம் என்று இனிமேல் படங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டாம். சிறிய படங்கள்தான் இன்றைக்குப் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றன. நல்ல கதையும் உழைப்பும் இருந்தால் எந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற முடியும். ‘பிளாக் கோல்டு’ படமும் ரசிகர்களுக்குப் பிடித்தமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். வரும் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். நன்றி.”
இயக்குநரும் நடிகருமான ஏ. வெங்கடேஷ் பேசியதாவது,
“இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மாலை வண









