‘சீதா பயணம்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Niranjan, Aishwarya Arjun, Arjun, (in a Guest Role), Dhruva Sarja (in a Special Camio), Prakash Raj, Sathya Raj, Kovai Sarala
Directed By : Arjun
Music By : Anup Rubens
Produced By : Sree Raam Films International
‘சீதா பயணம்’ ஒரு எளிய ஆனால் வித்தியாசமான ஒன் லைன் கதையை மையமாக வைத்து உருவான படம். செல்ல வேண்டிய இடத்துக்கு இரண்டு நிமிடம் தாமதமாக சென்றதால் ஒரு பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பும் பெண், அந்த தாமதத்துக்கு காரணமானவர்களை தேடி சென்று நன்றி சொல்வது தான் கதையின் மையம்.
சீதா தாயை இழந்த பின் தந்தை அன்பில் வளர்ந்த பெண். சத்யராஜ் மகளை ஒரு அம்மாவாகவே பார்த்து வளர்க்கிறார். சீதாவும் அவரை அப்பா என்று இல்லாமல் அம்மா என்று அழைக்கிறாள். இந்த தந்தை மகள் பாசம் தான் படத்தின் உணர்ச்சி மையமாக இருக்க வேண்டியது. சமையல் கலை பயிற்சிக்கு செல்லும் வழியில் அபி என்ற இளைஞனுக்கு லிப்ட் கொடுக்கிறார். பயணத்தின் போது டீக்கடை பெண், பழம் விற்கும் சிறுமி, மாடு மேய்க்கும் சிறுவன், ஒரு தடாலடி கேரக்டர் என பலரை சந்தித்து சிறுசிறு தாமதங்கள் ஏற்படுகிறது. அந்த தாமதத்தால் தான் அவர் செல்ல இருந்த கட்டிடத்தில் நடந்த வெடிவிபத்தில் இருந்து உயிர் தப்புகிறார்.
இதன் பிறகு அந்த இரண்டு நிமிட தாமதத்துக்கு காரணமான அனைவரையும் தேடி நன்றி சொல்ல சீதா மீண்டும் பயணம் தொடங்குகிறார். அந்த ரிட்டர்ன் பயணத்தில் காதல் முளைக்கிறது, சில பிரச்சனைகளும் உருவாகின்றன. அபியின் குடும்பம், கிராம வாழ்க்கை, சிறுமி கடத்தல் சம்பவம் போன்ற துணைக் கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியில் அபி முன்கூட்டியே திட்டமிட்டே சீதாவை சந்தித்தது தெரிய வரும் திருப்பமும் உள்ளது.
கதையின் கரு நல்லது. தாமதம் கூட வாழ்க்கையை காப்பாற்றும் என்ற கருத்து புதுமையாக இருக்கிறது. மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல மனதை வெளிக்கொணர வேண்டும் என்ற முயற்சியும் பாராட்டத்தக்கது. ஆனால் திரைக்கதை நீளமாகி சில இடங்களில் செயற்கையாக தெரிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதி இழுத்து செல்லும் உணர்வு வருகிறது. சில காட்சிகள் பழைய கால சினிமா பாணியை நினைவூட்டுகிறது. சில கேமியோ தோற்றங்கள் கதைக்கு அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது.
ஐஸ்வர்யா அர்ஜுன் சீதா கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். பாசம், உணர்ச்சி, உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்த முயற்சி செய்துள்ளார். நிரஞ்சன் அறிமுக நாயகனாக உடல் மொழி மற்றும் ஆற்றலில் கவர்ந்தாலும், சில இடங்களில் அனுபவக்குறைவு தெரிகிறது. இருவருக்கும் இடையிலான காதல் ரசாயனம் எல்லோருக்கும் ஒரே அளவில் பொருந்தாது.
சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற அனுபவசாலிகள் தங்கள் பங்கிற்கு வலு சேர்க்கிறார்கள். கோவை சரளா போன்றவர்கள் சில காட்சிகளில் உயிரூட்டுகிறார்கள். ஆனால் இவ்வளவு வலுவான நடிகர்கள் இருந்தும் அவர்களின் திறமை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற எண்ணம் இருக்கிறது.
ஒளிப்பதிவு நிறமிகுந்த காட்சிகளுடன் கண்களுக்கு இனிமை தருகிறது. பயண காட்சிகள் நன்றாக பிடிக்கப்பட்டுள்ளன. பின்னணி இசை சில இடங்களில் உதவுகிறது. பாடல்கள் சராசரியாகவே உள்ளன. தொகுப்பு இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில், ‘சீதா பயணம்’ நல்ல கருத்துடன் தொடங்கி, உணர்ச்சி பூர்வமான குடும்ப கதையாக மாற முயற்சிக்கும் படம்.
































