‘Fight Club’ Movie Rating: 3/5
Casting : Vijay Kumar, Monisha Mohan Menon, Kaarthikeyan Santhanam, Shankar Thas, Avinash Raghudevan, Saravanavel, jeyaraj, Vadachennai Anbu
Directed By : Abbas A.Rahmath
Music By : Govind Vasantha
Produced By : Reel Good Films and G Squad – Aditya and Lokesh Kanagaraj
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற வகையில் படம் முழுவதும் சண்டைக் காட்சிகள் அதிகம் நிறைந்திருக்கின்றன. மனிதர்களிடையே இயல்பாகவே கொதித்துக் கொண்டிருக்கும் வன்முறையைத் தூண்டி விடும் சூழல்களை உருவாக்கி, அதன் மேல் ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் அபாஸ்.
சிறு வயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவனாகவும், இயல்பாகவே திறமையுள்ளவனாகவும் இருக்கிறான் செல்வா (விஜயகுமார்) . செல்வாவை எப்படியாவது ஒரு நல்ல ஃபுட்பால் கிளப்பில் சேர்த்திவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அவனது கோச் பெஞ்சமின்.
தன் ஊரில் இருக்கும் இளைஞர்கள் விளையாட்டில் பெரிய இடத்திற்கு செல்லவேண்டும் என்று பெஞ்சமில் ஆசைப்பட, மறுபக்கம் அவனது தம்பி ஜோசப் மற்றும் அவனது நண்பன் கிருபா இருவரும் போதைப் பொருட்களை விநியோகம் செய்ய பள்ளி மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் கோபமடையும் ஜோசப் இருவரையும் அடித்துவிடுகிறார். இதனால் பெஞ்சமினை இருவரும் சேர்ந்து கொலை செய்துவிடுகிறார்கள். பெஞ்சமின் போன்ற ஒருவரின் இறப்பு அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் திசைமாறி போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
தனது கனவை அடைய முடியாத செல்வா கோபக்கார இளைஞனாக சுற்றித் திரிகிறான். ஒவ்வொரு தலைமுறையாக அதிகாரத்தை கையில் வைக்க நினைப்பவர்களும் அவர்களுக்கு எதிரானவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டபடி இருக்கின்றன. இந்த சண்டைகளை தங்களது லாபத்திற்காக தனிப்பட்ட பகைக்காக தூண்டிவிடுபவர்கள் ஒருபக்கமும் இது எதைப் பற்றிய தெளிவும் இல்லாமல் போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டு அவர்களால் தூண்டப்பட்டு தங்களது வாழ்க்கையை இழக்கத் துணியும் இளைஞர்களின் வாழ்க்கை மறுபக்கமும் என நகர்கிறது ஃபைட் கிளப் படத்தின் கதை.
வன்முறை சண்டைகளைப் பற்றிய படம் என்றால் மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், தள்ளுமாலா, ஆர் டி எக்ஸ் போன்ற படங்களை குறிப்பிடலாம் . இந்த வரிசையில் தற்போது ஃபைட் கிளப் படத்தை குறிப்பிடலாம். மனிதர்களிடம் இயல்பாகவே இருக்கும் வன்முறையை கிளர்ச்சியடையும் சூழல்களை உருவாக்கி, அதற்குள் ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
இதில் சில கதாபாத்திரங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டும் சில கதாபாத்திரங்கள் சரியாக பயன்படுத்தப்படாமலும் இருக்கின்றன. உதாரணமாக கதாநாயகியாக நடித்த மோனிஷா மோகனுக்கு ஒரு பாடலைத் தவிர வேறு எந்த வேலையும் படத்தில் இல்லை. அதே போல் செல்வாவின் அண்ணன் கதாபாத்திரத்திரம் படத்தில் இன்னும் முக்கியமான பங்காற்றிருக்க வேண்டியது.
மேலும் மிக நல்ல திரைக்கதை அமைப்பு இருந்து ஒரே விஷயத்தை திருப்பி திருப்பி காட்டும் வகையிலான மாண்டேஜ்கள் படத்தில் நிறைந்து கிடக்கின்றன. ஸ்லோ மோஷன், பில்ட் அப் ஷாட்கள் ஒரு கட்டத்திற்கு மேல் திரைக்கதையை பலவீனமாக்குவதை உணரமுடிகிறது. படம் முழுவதும் வரும் கோவிந்த் வசந்தாவின் இசை சில இடங்களில் காட்சிகளை மெருகேற்றவும், சில இடங்களில் இரைச்சலாகவும் இருக்கிறது. விஜயகுமார் ஒரு இளைஞனாக மிக தத்ரூபமாக வெளிப்படுகிறார்.
முழுவதும் ரத்தம் தெறிக்கும் ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் ஃபைட் கிளப் திரைப்படம் திரைக்கதை ரீதியாகவும், மேக்கிங் ரீதியாக எதார்த்தமாக இருந்தாலும், ஒரே வகைமையில் தொடர்ச்சியான படங்கள் வெளியாகி வருவதால் இன்னும் சில தனித்துவமான விஷயங்களை உள்ளடக்கி இருக்கலாம்.