‘முனியாண்டி’ படத்திற்காக தினமும் 4 மணிநேரம் மேக்கப் போட்ட அறிமுக நடிகர் ஜெயகாந்த்!
எல்லைச்சாசி முனியாண்டியை மையப்படுத்தி உருவாகும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘முனியாண்டி’
அறிமுக இயக்குநரின் மனதை மாற்றிய முனியாண்டி கடவுளின் அதிசயங்கள்!
ஹீரோ உடம்பில் இறங்கிய முனியாண்டி கடவுள்! – மக்களை வியக்க வைத்த ‘முனியாண்டி’ படப்பிடிப்பு
காந்தாரா க்ளைமாக்ஸ் போல் பத்து மடங்கு இருக்கும் – மிரட்ட வரும் ‘முனியாண்டி’
ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் பி.வீர அமிர்தராஜ் பெருமையுடன் வழங்க, அறிமுக இயக்குநர் ஜெ.ராஜா முகமது எழுத்து இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘முனியாண்டி’. இதில் கதாநாயகனாக புதுமுகம் ஜெயகாந்த் நடித்திருக்கிறார். கதாநாயகியாக அறிமுக நடிகை மீராராஜ் நடிக்க, வில்லனாக பிரபல ஸ்டண்ட் இயக்குநர் சூப்பர் சுப்பராயன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, முத்துக்காளை உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆன்மீகத்தை மையமாக வைத்து பல ஆக்ஷன் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அதில், பல கடவுள்களை பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கிராமங்களில் எல்லைச்சாமியாக மக்களை காக்கும் கடவுளாக இருக்கும் முனியாண்டி சாமியை பற்றி இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் முழுமையாக சொல்லவில்லை. ஒரு காட்சியில் அல்லது திரைப்படத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பயன்படுத்தி வந்த எல்லைச்சாமியை முதல் முறையாக கதையின் மையக்கருவாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அய்யனார், கருப்பு சாமி, சுடலைமட சாமி என பல எல்லை கடவுள்கள் இருக்கிறார்கள். இவர்களில் மிக முக்கியமானவர், உக்கிரமானவர் ‘முனியாண்டி’. பலருக்கு குலதெய்வமாக இருக்கும் இந்த முனியாண்டி சாமியை மையப்படுத்திய கதையில், காதல், ஆக்ஷன், காமெடி என்று அனைத்துவிதமான கமர்ஷியல் விசயங்களையும் சேர்த்து முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக உருவாகியிருக்கிறது ‘முனியாண்டி’ திரைப்படம்.
இப்படம் குறித்து இயக்குநர் ஜெ.ராஜா முகமதுவிடம் கேட்ட போது, “மனிதனை மனிதன் ஜெயிப்பது சாதாரணமான ஒன்று தான். ஆனால், அப்படி ஒரு நிலையில் வில்லனின் சூட்சியால் அவனை வீழ்த்த முடியாமல் தடுமாறும் ஹீரோவுக்கு முனியாண்டி சாமி உதவி செய்ய, அதன் மூலம் முனிப்பாய்ச்சலோடு வில்லனை ஹீரோ வீழ்த்துகிறார். இந்த மையக்கருவை வைத்துக்கொண்டு முழுமையான கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறேன்.
முனியாண்டி கோவிலில் குறி சொல்லும் ஹீரோ வாழ்க்கையில் எதிரிகள் சூழ்ச்சி செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் ஹீரோவின் உடம்பில் அந்த முனியாண்டி சாமியே இறங்கி, தனது ருத்ரதாண்டவம் மூலம் ஹீரோவையும், மக்களையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்.
இப்படி ஒரு கதையை தான் தேர்வு செய்வதற்கு முனியாண்டி சாமி மற்றும் அவரை வழிபடும் மக்கள் தான் காரணம். நானும், ஹீரோவும் வேறு ஒரு கதையை படமாக்குவதாக இருந்தது. அதற்கான பணிகளும் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் ஹீரோவுடன் அவரது சொந்த ஊருக்கு சென்றேன், அப்போது மதுரை பாண்டி கோவிலில் முனியாண்டி சாமியை வழிபடும் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அம்மக்களுக்கு அந்த சாமி செய்த வியக்கத்தக்க விசயங்கள் போன்றவற்றை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை தொடர்ந்து முனியாண்டி சாமி பற்றி நான் விரிவாக தெரிந்துக் கொள்ள விரும்பினேன். அதனால், பலரிடம் முனியாண்டி பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டதோடு, சில ஆய்வுகளிலும் நான் ஈடுபட்ட பிறகு, இதையே மையமாக வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று தோன்றியது. ஹீரோவிடம் இது பற்றி சொன்னதும் அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி, சுமார் ஒரு வருடமாக இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கினேன்.
திரைப்படங்களில் பல கடவுள்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள். எல்லைக் கடவுள்களைப் பற்றி கூட சில படங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், முனியாண்டி சாமியை பற்றி இதுவரை எந்த படத்திலும் முழுமையாக சொன்னதில்லை. அதன்படி முனியாண்டி சாமி பற்றி முழுமையாக சொல்லும் முதல் படம் எங்களது ‘முனியாண்டி’ திரைப்படம் தான்.
முனியாண்டி சாமி மிகவும் உக்கிரமான கடவுள், அவரைப் பற்றிய படம் என்பதால் படத்தில் நடித்த நாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விரதம் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார்கள். முனியாண்டியாக ஹீரோ மாறுவதற்காக தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு நடித்தார். மிகவும் கடினமானது தான் என்றாலும், முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய உழைப்பை கொடுத்த ஜெயகாந்த் நிச்சயம் பெரிய நடிகராக வருவார். மூன்று விதமான முனிடியாண்டி சாமியின் மேக்கப் போட்டு நடித்திருக்கும் நாயகனின் உடம்பில் முனியாண்டி இறங்கி ருத்ரதாண்டவம் ஆடும் இறுதிக் காட்சி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். குறிப்பாக 10 காந்தாரா க்ளைமாக்ஸை பார்த்தது போன்ற ஒரு உணர்வை கொடுக்கும். இதற்கு காரணம், க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கும் போது நாயகனின் உடம்பில் நிஜமாகவே முனியாண்டி சாமி இறங்கியது தான். அவர் மீது சாமி வந்ததும், படப்பிடிப்பை பார்க்க வந்த பொதுமக்கள் அவரிடம் குறி கேட்க தொடங்கி விட்டார்கள். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, படக்குழுவும் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்.
இந்த படம் வெளியான பிறகு முனியாண்டி சாமியை வணங்கும் மக்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பினரும் படத்தை கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு படம் தத்ரூபமாக வந்திருக்கிறது. அதேபோல், முனியாண்டி சாமி இருக்கும் பாண்டி கோவில் மற்றும் அதை சார்ந்த பகுதிகளையும் படத்தில் தத்ரூபமாக காட்டியிருக்கிறோம்.” என்றார்.
ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சவுந்தரியன் இசையமைத்திருக்கிறார். சினேகன் பாடல்கள் எழுத எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ஃபயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, செல்வி நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பாளராக குணா மற்றும் நித்திஷ் ஸ்ரீராம் பணியாற்றுகிறார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட நிலையில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் பரபரப்பாக இயங்கி வரும் படக்குழு விரைவில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து டிரைலர் வெளியீட்டு தேதி மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது.





























