‘போர் தொழில்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Sarathkumar, Ashok Selvan, Nikila Vimal, PL Thenappan, OAK Sundar, Nizhalgal Ravi, Santhosh Keezhatoor, Sunil Sukhada, Harish Kumar
Directed By : Vignesh Raja
Music By : Jakes Bejoy
Produced By : Sameer Nair, Deepak Segal, Mukesh.R, Metha, CV Sarathi, Poonam Mehra, Sandeep Mehra
குடும்ப கட்டாயத்தின் பேரில் விருப்பம் இல்லாமல் காவல்துறை அதிகாரியான அசோக் செல்வன் ஒரு வழக்கு விசாரணையில் காவல் துறை அதிகாரி சரத்குமாருக்கு உதவியாளராக செல்கிறார். இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவது தொடர்கிறது. அந்த தொடர் கொலை வழக்கை கையில் எடுக்கும் அசோக் செல்வனும், சரத்குமாரும் கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதையும், கொலைகளுக்கான காரணத்தையும் விறுவிறுப்பாக சொல்வது தான் ‘போர் தொழில்’.
சரத்குமாரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு, அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. காவல்துறை அதிகாரியாக சரத்குமார் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் புதிதாக இருப்பது அவருடைய கதாபாத்திரத்தை ரசிக்க முடிகிறது. காவல்துறையில் நடக்கும் அரசியலை ஒரு உயர் அதிகாரியாக அவர் கையாளும் விதம், எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக கையாளுவது என அனைத்து இடங்களிலும் தனது நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பயந்த சுபாவம் கொண்ட நபர் காவல்துறை அதிகாரியானால் எப்படி இருக்கும் என்பதை தனது நடிப்பு மூலம் கண் முன் நிறுத்துகிறார் அசோக் செல்வன். சிறு சிறு முகபாவனைகளில் கூட கவனம் செலுத்தி நடித்திருக்கும் அசோக் செல்வன், அனுபவம் வாய்ந்த சரத்குமாருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்துள்ள நிகிலா விமலும் காவல் துறையிலேயே இருக்கிறார். காதல் பாடல் மற்றும் காட்சிகள் இல்லை என்றாலும், கதையோடு பயணிக்கும் கதாநாயகியாக கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
பி.எல்.தேனப்பன், நிழல்கள் ரவி, சந்தோஷ் கீழட்டூர், சுனில் சுகடா, சரிஷ்குமார், ஓ.ஏ.கே.சுந்தர் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கலைசெல்வன் சிவாஜி முழு படத்தையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இரவு நேர காட்சிகளை மிக தெளிவாக படமாக்கியிருக்கிறார்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருக்கிறது.
படம் முழுவதும் திரைக்கதை மற்றும் காட்சிகளின் வேகம் குறையாதபடி ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
சைக்கோ கொலைகளை மையமாக வைத்த க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைப்படங்கள் பல வந்திருந்தாலும், இந்த கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் எழுத்தாளர் ஆல்ப்ரெட் பிரகாஷ் வித்தியாசமான முறையில் எழுதியிருக்கிறார்கள்.
கொலையாளியை கண்டுபிடிப்பது தான் கதை என்றாலும், அதை சொன்ன விதம், படத்தில் இடம்பெறும் கதபாத்திரங்களை வடிவமைத்த விதம் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கதாபாத்திரங்களின் எதிர்மறை குணங்கள், அவற்றை கொலை வழக்கின் விசாரணையோடு பயணிக்க வைப்பது போன்ற விஷயங்கள் படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.
படம் தொடங்கிய உடனே நம்மை கதைக்குள் அழைத்து செல்லும் இயக்குநர் விக்னேஷ் ராஜா, படம் முடிவடையும் வரை ஒவ்வொரு காட்சியையும் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கிறார். இறுதிக் காட்சியை நெருங்கும் போது கூட நம் கண்கள் திரையை விட்டு விலாகதவண்ணம் திரில்லர் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சினிமா ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் இந்த ‘போர் தொழில்’ க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பட விரும்பிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.