‘தமிழரசன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Vijay Antony, Ramya Nambeesan, Suresh Gopi, Radharavi, YG Mahendran, Sangeetha, Kasthuri, Master Pranav
Directed By : Babu Yogeshwaran
Music By : Ilayaraja
Produced By : Kousalya Rani
இரக்க குணம் கொண்ட காவல்துறை அதிகாரியான விஜய் ஆண்டனி, மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் மகன் பிரணவ் இருவரையும் உலகமாக நினைத்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே, அவருடைய மகன் பிரணவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் ஆண்டனி தள்ளப்படுகிறார். ஆனால், அவரது மகனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மருத்துவத்தை அதிகம் லாபம் ஈட்டும் தொழிலாக மட்டுமே பார்க்கிறது. இதனால் கோபமடையும் விஜய் ஆண்டனி, தனது மகனை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்கிறார். அந்த நடவடிக்கை என்ன? அதனால் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
போலீஸ் வேடம் விஜய் ஆண்டனிக்கு புதிதல்ல என்றாலும், அவர் போலீஸாக நடித்த முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும் தனது அழுத்தமான நடிப்பு மூலம் காவல்துறையின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இரக்க குணம் இல்லாத காக்கி சட்டைகளில், மனசாட்சியுடன் பணியாற்றும் பல நல் உள்ளங்களும் இருப்பதை அவரது நடிப்பு சுட்டிக்காட்டுகிறது.
விஜய் ஆண்டனியின் மனைவியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசனுக்கு இப்படிப்பட்ட வேடத்தில் நடிப்பது அத்துப்படி என்றாலும், தனது மகனின் நிலையை கண்டு அவர் கலங்கும் காட்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார். எனவே, இந்த படம் மட்டும் அல்ல, இனி அவர் நடிப்பில் வரும் அனைத்து படங்களிலும் அவர் இதுபோலவே நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
யோகி பாபு மற்றும் அவரது கூட்டணியின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, சீரியஸான காட்சிகளில் காமெடி செய்கிறேன் என்ற பெயரில் கடுபேற்றாமல் இருந்திருக்கலாம்.
சுரேஷ் கோபி, சோனு சூட், ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா, கஸ்தூரி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது.
விஜய் ஆண்டனியின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் பிரணவ் நல்வரவு.
காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக துல்லியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மருத்துவத்துறையில் நடக்கும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், கதாபாத்திரங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் மற்றும் விஜய் ஆண்டனி பேசும் வசனங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியலை அழுத்தமாக பேசியிருக்கிறார்.
சமூகத்திற்கு தேவையான விஷயத்தை கமர்ஷியலாக சொல்லி அனைவருக்குமான படமாக கொடுக்க நினைத்திருக்கும் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், திரைக்கதை அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழரசனை தமிழகம் கொண்டாடி இருக்கும்.
மொத்தத்தில், தமிழரசன் தடுமாற்றம் நிறைந்தவன்.